ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு: 'முதல்வர் சென்னையை சிங்கப்பூராக மாற்றுவார்' என சொன்ன உடனே, அது நிறைவேறி விடாது. 'ஜீபூம்பா' என்ற வார்த்தையை சொன்னால், சென்னை சிங்கப்பூராக மாறி விடாது. அதற்கு, இரண்டு ஆண்டு காலம் போதுமானது இல்லை. முதல்வர் நிச்சயமாக, சென்னையை சிங்கப்பூராக மாற்றிக் காட்டுவார்.
டவுட் தனபாலு: 'கூவம் ஆற்றை சுத்தப்படுத்தி, படகு சவாரி விடுவது என் கனவு திட்டம்' என, முன்னாள் முதல்வர் கருணாநிதி பல முறை கூறினார்... அது இன்றும் கனவாகவே உள்ளது... அதே மாதிரி தான், சென்னையை சிங்கப்பூரா மாற்றும் திட்டமும்... உதயநிதி இல்லை, இன்பநிதியே முதல்வராக வந்தாலும், கனவாகவே தொடரும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன், வெல்லமண்டி நடராஜன் உட்பட, 118 பேர் தேர்தல் பணிக் குழு பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு நிர்வாகிகள், தொண்டர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
டவுட் தனபாலு: சபாஷ்... சரியான போட்டி... உங்களின் எதிராளி பழனிசாமி, 117 பேரை தேர்தல் பணிக்குழு பொறுப்பாளரா அறிவிச்சாருன்னு தெரிஞ்சு, அவரை விட ஒருத்தரை கூடுதலாக நியமிச்சிருக்கீங்க... இதே மாதிரி, தேர்தலில் பழனிசாமி நிறுத்தும் வேட்பாளரை விட, உங்க வேட்பாளர் கூடுதலா ஒரு ஓட்டாவது வாங்குவாருன்னு, 'டவுட்' இல்லாம சொல்ல முடியுமா?
ஸ்ரீபெரும்புதுார் தொகுதி தி.மு.க., - எம்.பி., - டி.ஆர்.பாலு: தவறு நடக்கும் போது, நான் முரடனாக மாறுவேன். என் கட்சி தலைவரை, தி.க., தலைவர் வீரமணியை யாராவது சீண்டினால் அவன் கையை வெட்டுவேன். உங்களால் திருப்பி அடிக்க முடியாது; உங்களுக்கு பலமில்லை. எனக்கு பலமிருப்பதால் நான் அடிப்பேன்.
டவுட் தனபாலு: அமைச்சர் நாசர், கல்லால் அடிக்கிறார்... சாத்துார் ராமச்சந்திரன், தலையில அடிக்கிறார்... நேரு, சட்டையை பிடித்து கன்னத்தில் அறைகிறார்... டி.ஆர்.பாலு, 'கையை வெட்டுவேன்' என்கிறார்... தமிழ் சினிமாவுல ஒருவேளை, 'ஸ்டன்ட் மாஸ்டர்'களுக்கு பற்றாக்குறை வந்தால், தி.மு.க.,வில் இருந்து தாராளமா 'சப்ளை' செய்யலாம் என்பதில், 'டவுட்'டே இல்லை!
அரசு விரைவில் சென்னை பெயரை சிங்கப்பூர் என மாற்ற சட்டம் கொண்டு வரும்