''அவருக்கு நிறைய வேலை இருக்குன்னு சொல்றாங்க பா...''என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் அன்வர்பாய்.
''யாருவே அந்த, 'பிசி' மனுஷன்...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.
''ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான, தி.மு.க., தேர்தல் பணிக் குழுவுல, அமைச்சர்கள் நிறைய பேருக்கு இடம் குடுத்திருக்காவ... ஆனா, முதல்வரின் மகன் உதயநிதி பெயர் அதுல இல்லை பா...
''நட்சத்திர பேச்சாளரான அவர் பெயர் இல்லையேன்னு இளைஞர் அணியினர் வருத்தப் பட்டிருக்காங்க... ஆனா, இளைஞரணி சார்புல, மாவட்ட வாரியா, நிர்வாகிகள் நியமனத்துக்கான நேர்காணல் நடத்துற பணிகள்ல உதயநிதி தீவிரமாக இருக்காரு...
''அதான், அவரை தேர்தல் பணிக்குழுவுல சேர்க்கலை... ஆனா, 'தேர்தல் நெருக்கத்துல தொகுதியில வீதி வீதியா பிரசாரம் பண்றதுக்கு அவர் வந்துடுவார்'னு, கட்சி நிர்வாகிகள் சொல்றாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''மாமூல் தரலன்னா கடைகளை மூடிடுறாங்க...'' என, அடுத்த தகவலுக்கு தாவினார் அந்தோணிசாமி.
''எந்த கடைகளை சொல்றீர் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.
''டாஸ்மாக் கடைகளை தான் சொல்றேன்... சேலம் மாவட்டத்துல, 212 மதுக்கடைகள் இருக்குதுங்க... எல்லா கடைகள்லயும், பாட்டிலுக்கு கூடுதலா, ௧௦ ரூபாய் வசூலிக்கிறாங்க...
''இதுல தான் கடைகளின் நிர்வாக செலவு, அதிகாரிகளுக்கு, 'மாமூல்' எல்லாம் தர்றாங்க... இப்ப, ஆளுங்கட்சியினரும் மாதாந்திர மாமூல் கேட்கிறாங்க...
''மாமூல் தர மறுத்தா, டாஸ்மாக் அதிகாரிகளிடம் பேசி, கடை, பார்களை மூடிடுறாங்க... அப்புறமா பேச்சு நடத்தி, மாமூல் 'பிக்ஸ்' பண்ணிட்டு, கடைகளை திறக்கிறாங்க...
''இந்த வகையில, மேட்டூர், தாரமங்கலம், கொங்கணாபுரம், காமலாபுரம் பகுதிகள்ல இருக்கிற கடைகளை சமீபத்துல மூடிட்டு, மாமூல் பேரம் படிஞ்சதும் திறந்திருக்காங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''செய்தி மக்கள் தொடர்பு துறை அதிகாரிகள் எதை செய்தாலும் பிரச்னையாறது ஓய்...'' என, கடைசி தகவலுக்கு மாறிய குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''போன வருஷம், டில்லியில நடந்த குடியரசு தின விழா அணிவகுப்புல, தமிழக அரசு ஊர்திக்கு வாய்ப்பு தரல... இதுக்கு, நம்ம செய்தித் துறை அதிகாரிகளே காரணம்னு புகார்கள் எழுந்தது ஓய்...
''இந்த வருஷம் குடியரசு தின அணிவகுப்புல, தமிழக அரசு ஊர்திக்கு இடம் குடுத்தா... இந்த ஊர்தியில, நாட்டுப்புறக் கலைகள் நடத்திய குழு, அ.தி.மு.க.,வைச் சேர்ந்தவருடையதாம் ஓய்...
''இவர், ஜெயலலிதாவுக்கு சொத்து குவிப்பு வழக்குல, சிறை தண்டனை விதிச்சப்ப, கருணாநிதியை கண்டிச்சு, அண்ணாதுரை சமாதியில, நுாற்றுக்கணக்கான கலைஞர்களுடன் உண்ணாவிரதம் இருந்தவராம் ஓய்...
''தி.மு.க., ஆட்சிக்கு வந்த புதுசுல, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற செயலரா இவரை நியமிச்சா... அப்பறமா, விபரம் தெரிஞ்சதும், ரெண்டே நாள்ல அவரை நீக்கிட்டா ஓய்...
''இப்ப, 'குடியரசு தின அணிவகுப்புல எப்படி அவருக்கு அதிகாரிகள் அனுமதி குடுத்தா... அவரை விட்டா, வேற கலைஞர்களே இல்லையா'ன்னு தி.மு.க.,வினர் முணுமுணுத்துண்டு இருக்கா ஓய்...'' என முடித்தார் குப்பண்ணா.
''சோமசுந்தரம் இங்கன உட்காரும்... நாங்க கிளம்புதோம்...'' என்றபடியே அண்ணாச்சி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.
கவனிக்க வேண்டியதை கவனித்துவிட்டால் கட்சி பேதம் எல்லாம் பறந்தோடிவிடாதா ?