நடைபயிற்சியில் பிளாஸ்டிக் சேகரிக்கிறோம்!
சென்னை, வில்லிவாக்கத்தில் வசிக்கும், 'வாக் பார் பிளாஸ்டிக்' இயக்கத்தைச் சேர்ந்த, சுவர் ஓவியர் கவுதம்: 'துாக்கி எறியப்படும் ஒரு பிளாஸ்டிக் கழிவு, மக்கிப் போக, 300 ஆண்டுகள் ஆகும்'னு சொல்றாங்க. அந்தக் கழிவு கிடக்கிற மண்ணுல எந்த விதையும் முளைக்காது; உயிரினங்கள் இருக்காது.
சென்னை மாநகராட்சியில் மட்டும் ஒரு நாளைக்கு, 100 டன் பிளாஸ்டிக் கழிவுகள் சேருது. அதுல கால் பங்கு கூட, மறுசுழற்சிக்குப் போறதில்லை. எல்லாம் மண்ணுக்குப் போய், நீர்நிலைகளை அடைச்சு, கொசுக்களை உருவாக்கி, சுகாதாரச் சவாலை ஏற்படுத்துது.
அதுக்கு, பல நுாறு கோடி ரூபாய் செலவு பண்ணுறோம். மறுசுழற்சி செய்றவங்க, 1 கிலோ பிளாஸ்டிக்கை, 22 ரூபாய்க்கு வாங்குறாங்க. 100 டன் பிளாஸ்டிக்கை முறைப்படி மறுசுழற்சிக்கு அனுப்பினா, கிட்டத்தட்ட, 22 லட்சம் ரூபாய் கிடைக்கும். இவ்வளவு பணத்தையும் நாம நிலத்துல கொட்டுறோம்.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சுவர் ஓவியம் வரைந்து, லட்சங்களை ஈட்டிக் கொண்டிருந்த என்னை, திசை திருப்பி, பூமியையும், சக மனிதர்களையும் பற்றிக் கவலை கொள்ள வைத்தது இயற்கை தான்.
இதுவரைக்கும் என் குழுவினர், தெருக்களில் நடந்து, 28 டன் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து மறுசுழற்சிக்கு அனுப்பிஉள்ளனர்.
'தினமும் நாம, 'வாக்கிங்' போகும்போது, பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிச்சுப் பணமாக்குவோம். அந்தப் பணத்தைப் பயனுள்ள வகையில செலவு செய்வோம்'னு திட்டமிட்டேன்.
தினமும் எவ்வளவு பிளாஸ்டிக் கழிவுகள் கிடைச்சுதுங்கிறதை, 'சோசியல் மீடியா'வுல போட ஆரம்பிச்சேன். ஒருத்தர், ரெண்டு பேரா வந்து, கூட நடந்து, பிளாஸ்டிக் சேகரிக்க ஆரம்பிச்சாங்க.
ஐம்பதாவது நாள் மிகப் பெரிய கூட்டம் என் கூட நின்னுச்சு. இன்னொரு பக்கம், என் சோசியல் மீடியா போஸ்ட்ட பார்த்து மலேஷியா, கென்யா, தென் ஆப்ரிக்கா, பிரிட்டன் மாதிரி நாடுகள்ல எல்லாம், 'நாங்களும் பிளாஸ்டிக் வாக் போறோம்'னு போய் போட்டோக்கள் அனுப்பினாங்க.
பிரமாண்டமா விரிஞ்சு, இன்னைக்கு உலகம் முழுதும், 4,000த்துக்கும் மேற்பட்டோர் தினமும் காலை, மாலையில் நடந்து பிளாஸ்டிக் சேகரிக்கிறாங்க. அதுல கிடைக்கிற காசு நிறைய நல்ல விஷயங்களுக்கு போகுது.
கழிவுகளை சேகரிக்கிறதுக்காக தங்களை முழுசா அர்ப்பணிக்கிற துாய்மைப் பணியாளர்களோட வாழ்க்கை, இதுவரை மாறவே இல்லை. கல்வி மட்டும் தான் அவங்களை மீட்கும்.
அதனால, இதன் மூலம் கிடைக்கும் பணத்தை அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு படிக்கச் செலவிடலாம் என்று முடிவு செஞ்சோம். அவங்களோட எதிர்காலத்தை முழுசா நாங்க தத்தெடுத்துக்கிட்டோம்!
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!