Load Image
Advertisement

நம்மை சுற்றியே அழகாக பூத்துக் கிடக்கிறது பூமி!

நம்மை சுற்றியே அழகாக பூத்துக் கிடக்கிறது பூமி!



சென்னை, பெண்கள் கிறிஸ்துவ கல்லுாரியின் முதல்வர், லிலியன் ஜாஸ்பர்: காடும், கரையும் எல்லாருக்கும் பிடிக்கும். நானோ, நான் ரசிக்கும் இந்த பூமியின் எழிலை, மற்றவர்களும் ரசிக்க, பல பெண்களை இணைத்து, பசுமை பயணங்கள் செல்கிறேன்.

சிறு வயதில் இருந்தே, இயற்கை மீது ஆர்வம் உண்டு. பயணங்கள் வாயிலாக, இந்த பூமியின் ஆச்சரியங்களை, அபூர்வங்களை தரிசிக்க விரும்பினேன்.

இந்தியாவில், ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு நில சிறப்பு உண்டு... அந்த வகையில், உத்தரகண்ட் மாநிலம் மிகவும் பிடிக்கும்.

அங்குள்ள, 'ஜிம் கார்பெட்' தேசிய பூங்காவில், முதன் முறையாக ஒரு புலியை நேருக்கு நேராகப் பார்த்த அனுபவம் அலாதியானது.

மேகாலயாவில், உயிர் வேர்கள் கொண்டே காட்டுவாசிகள் ஏற்படுத்தியிருந்த பாலத்தை பார்த்த போது சிலிர்த்துப் போனேன்.

கர்நாடகாவில் உள்ள பந்திப்பூர் தேசிய பூங்கா, தந்தேலி வன விலங்குகள் சரணாலயம், இயற்கையால் மட்டுமே நமக்குத் தர முடிகிற பரவசங்களை உணர வைத்தன. காடுகளின் துாய்மையான காற்று, நமக்கு கொடுக்கும் புத்துணர்வுக்கு இணையே இல்லை.

என்னுடன் பணியாற்றுவோரில் இயற்கை ஆர்வமுள்ளோரை ஒருங்கிணைத்து, விடுமுறை நாட்களில், 'டிராவல் பேக்கு'களை துாக்கி விடுவோம்; ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பயணம்.

'பெண்கள் மட்டும் சேர்ந்தா இவ்வளவு துாரம் வந்திருக்கீங்க' என்று, நாங்கள் செல்லும் இடங்களில் உள்ள மக்கள் ஆச்சரியமாக பார்ப்பர். எங்களுக்கு நாங்களே துணை என்பது, எங்களின் தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் அதிகரிப்பதோடு, எங்களுக்கு இடையேயான உறவையும் மேம்படுத்தும்.

எங்கள் கல்லுாரியிலும், சூழல் இலக்கியம் என்ற பேப்பரை அறிமுகப்படுத்தி உள்ளேன். கல்லுாரியில், 'கம்யூனிட்டி கார்டன்' உருவாக்கி, ஆர்வமுள்ள மாணவியருக்கு இடம் ஒதுக்கி, அவர்களுக்கு விருப்பமான செடிகளை வளர்க்கும்படி கூறுகிறேன்.

அதுமட்டுமின்றி, பாடத்திட்டத்தில் இருக்கும், 'சூழலியல் இலக்கியம்' என்ற பாடத்தின் ஒரு பகுதியாக, எங்களின் மாணவியரை பரம்பிக்குளம், கொல்லிமலை போன்ற பகுதிகளுக்கு அழைத்துச் செல்வேன்.

அதன் வாயிலாக, சூழலை சிதைக்காமல், இயற்கையோடு இணைந்து வாழும் பொறுப்பு, மலைவாழ் மக்கள் மீதான மரியாதை போன்ற மாற்றங்களை, எதிர்கால சந்ததியிடம் ஏற்படுத்த முடிகிறது.

இயற்கை எழில் சூழ்ந்த இடங்களை ரசிக்க, வெளிநாடு, வெளிமாநிலம் தான் செல்ல வேண்டும் என்பது இல்லை; டாப்சிலிப், வால்பாறை, திருநெல்வேலி அருகில் உள்ள மாஞ்சோலை என, நம்மைச் சுற்றியே அவ்வளவு அழகாக பூத்துக் கிடக்கிறது பூமி.


**************


பெண்களுக்கான தற்காப்பு பயிற்சி தரும் 'அயர்ன் லேடி!'


சென்னையில், 'கேட்டலிஸ்ட் புட்ஸ்' என்ற பெயரில், 'வீகன்' உணவுகளை தயாரித்து வரும் மரீன் விஜய்: வீகன் உணவில் முட்டை உட்பட, அசைவம் எதுவும் கிடையாது. பால், தயிர், வெண்ணெய், நெய், 'சீஸ், பனீர்' கிடையாது. நான் தயாரிக்கும் வீகன் உணவுகள், அசைவ உணவுகளுக்கான மாற்று. அதாவது, தயாரிப்பில் சைவம்; சுவையில் அசைவம்.ஒரு முறை சிங்கப்பூர், மலேஷியாவுக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்றிருந்தோம். அங்கே ஒரு, 'புட் கோர்ட்'டில், நாங்கள் சாப்பிட்ட வெஜிட்டேரியன் அயிட்டம் பார்க்கவும், சாப்பிடவும், அப்படியே அசைவம் போல இருந்தது. 'இந்த ஐடியா நல்லாயிருக்கே... இதையே நாம் ஏன் இந்தியாவுல முயற்சி பண்ணக் கூடாது' என்று யோசித்தேன். அப்புறமாக, அதைப்பற்றி நிறைய ஆய்வு செய்தும், அடிக்கடி சிங்கப்பூர், மலேஷியாவுக்கு சென்று, அங்க உள்ள, 'செப்'பிடம் கேட்டும், விஷயங்களை தெரிஞ்சுக்கிட்டேன்; 2008ல் பிசினஸ் ஆரம்பித்தேன்.
ஆரம்பத்தில், 'பிளைன்' பனீர் மாதிரியான வடிவத்தில் தான், 'மாக் மீட்' கொடுத்துக்கிட்டு இருந்தேன். பிறகு, மசாலா சேர்த்து, உடனடியாக சமைத்து சாப்பிடுகிற மாதிரி செய்து கொடுக்க ஆரம்பித்தேன். நான் பண்ற மாக் மீட்டை, வெஜிடேரியன் புரோட்டீன்னு சொல்லலாம். கோதுமையில பண்றது, புரோட்டீன் அதிகம் இருக்கும். பனீரையும், கறியையும் வெச்சு என்னவெல்லாம் சமைக்க முடியுமோ, அத்தனையும் இந்த மாக் மீட் வெச்சுப் பண்ணலாம்.
சாப்பிடற வரைக்கும் நம்ப மாட்டாங்க; 'டேஸ்ட்' பண்ணிட்டாங்கன்னா ஷாக் ஆகி, 'சாரி' கேட்டுட்டு வாங்கிட்டுப் போவாங்க. இன்று கடைகளுக்கு மட்டுமின்றி, வீகன் ரெஸ்டாரண்ட்டுகளுக்கும் சப்ளை செய்கிறேன்.அடிப்படையில், நான் ஒரு, 'மார்ஷியல் ஆர்ட்டிஸ்ட்!' கராத்தே, சிலம்பம் என, பல கலைகள் தெரியும். 'அயர்ன் லேடி' என்ற பெயரில், பெண்களுக்கான தற்காப்பு பயிற்சிகளையும் கற்றுத் தருகிறேன். கராத்தே மாதிரியான, மார்ஷியல் ஆர்ட்ஸ் கத்துக்க, சில ஆண்டுகளாகும்; நிறைய விதிமுறைகள் இருக்கும். ஆனால், தற்காப்புக்கு அது அவசியம் இல்லை.ஆபத்தான தருணங்களில், ஒருவர் தன்னை எப்படி பார்த்துக்கணும், அந்தச் சூழலில் இருந்து எப்படி தப்பிக்கணும்னு தெரிஞ்சுகிட்டா போதும்... வீடு, தெரு, படிக்கிற இடம், பணியிடம் என, எங்கேயும் எதிர்கொள்கிற ஆபத்திலிருந்து தப்பிக்கிறதுக்கான, அடிப்படை தற்காப்பை கத்துக் கொடுக்கிறது தான் எங்களது, 'அயர்ன் லேடி' பயிற்சியின் நோக்கம்.
நம்ம எல்லாருக்குள்ளேயும், ஒரு இரும்பு மனுஷி இருக்காங்க. அவங்களை வெளியே கொண்டு வர்றது தான், நாங்கள் தரும் தற்காப்பு பயிற்சியின் நோக்கம்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
Advertisement