Load Image
Advertisement

சங்கத்தினரை கண்டால் அங்கம் நடுங்கும் அதிகாரி!


''மனு தாக்கல் வரைக்கும் தாக்கு பிடிப்பாரான்னு பேசிட்டு இருக்காங்க பா...'' என்றபடியே, ஏலக்காய் டீக்கு ஆர்டர் தந்தார் அன்வர்பாய்.

''ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் விவகாரமா வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.

''ஆமாம்... அந்தத் தொகுதியில, தி.மு.க., - அ.தி.மு.க., அணிக்கு நடுவுல, 'நானும் ரவுடி தான்' கணக்கா, தே.மு.தி.க., வேட்பாளர் ஆனந்த் களம் இறங்கியிருக்காரே... இவர் வர்ற, 31ம் தேதி வேட்பு மனு தாக்கல் பண்ண இருக்காரு பா...

''இதுக்கு இடையில, இவரை ஆளுங்கட்சிக்கு இழுக்க, ரகசிய பேச்சு நடந்துட்டு இருக்காம்... காங்., வேட்பாளர் இளங்கோவனை ஆதரிச்சு,முதல்வர் ஸ்டாலின் ஒரு நாள் பிரசாரம் செய்ய இருக்காரு பா...

''அந்த பிரசார மேடையிலயே, தே.மு.தி.க., வேட்பாளரை, தி.மு.க.,வுல சேர்க்க, அமைச்சர் ஒருத்தர் வாயிலா ரகசிய பேச்சு நடந்துட்டு இருக்குது... ஒருவேளை அப்படி நடந்தா, தே.மு.தி.க., மாற்று வேட்பாளரை தேடணும் பா...'' என்றார், அன்வர்பாய்.

''இலவச குடிநீர் இயந்திரங்களை வழங்க இருக்காருங்க...'' என, அடுத்த மேட்டருக்கு மாறிய அந்தோணிசாமியே தொடர்ந்தார்...

''புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயல் கிராமத்து குடிநீர் தொட்டியில, மனிதக்கழிவு கலந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துச்சே...

''மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல், தன் கட்சியின் மாநில நிர்வாகிகளை உண்மை கண்டறியும்குழுவா, அங்க அனுப்பி வச்சாருங்க...

''அந்தக் குழுவினரும்,கிராம மக்களிடம் விசாரணை நடத்தி, அதுல கிடைச்ச தகவல்கள் அடிப்படையில, சில கோரிக்கைகளை மனுவா எழுதி, கலெக்டர் கவிதா ராமுவிடம் குடுத்திருக்காங்க...

''அதோட, பாதிக்கப்பட்ட வேங்கை வயல் கிராம மக்களுக்கு, காற்றுல இருந்து குடிநீர் தயாரித்து வழங்கும் இயந்திரங்களை இலவசமா வழங்கவும் முடிவு பண்ணி, அதுக்கான அனுமதியையும் கலெக்டரிடம் கேட்டிருக்காங்க...

''அனுமதி கிடைச்சதும்,அந்த இயந்திரங்களை கமலே அங்க போய் வழங்க இருக்காருங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''சங்கம் பெயரை கேட்டாலே, பயந்து நடுங்குறாங்க ஓய்...'' என, கடைசி தகவலுக்கு கட்டியம் கூறினார், குப்பண்ணா.

''யாருவே அது...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.

''சென்னை, பி.எஸ்.என்.எல்., தலைமை அலுவலக பெண் நிர்வாகியைத் தான் சொல்றேன்... பி.எஸ்.என்.எல்.,லுக்கு சொந்தமான கேபிள்கள் அடிக்கடி திருடு போறது... இதனால, வாடிக்கையாளர்களுக்கு தரமான சேவை கிடைக்காம சிரமப்படறா...

''சமீபத்துல, திருவான்மியூர், பூக்கடை பகுதிகள்ல கேபிள்களை திருடியதா, ஆறு ஊழியர்களை, 'சஸ்பெண்ட்' செய்தா... 'இவா மேல நடவடிக்கை எடுக்கப்டாது'ன்னு, ஊழியர் சங்க பிரதிநிதிகள், பெண் அதிகாரியை பார்த்து வலியுறுத்தியிருக்கா ஓய்...

''இதனால, கேபிள் திருட்டு பத்தி போலீஸ்ல குடுத்த புகாரை கிடப்புல போட்டுட்டு, ஊழியர்களை மறுபடியும் பணியில சேர்த்துண்டுட்டா...

''மற்ற அதிகாரிகள், பொதுமக்கள் யாரையும் சந்திக்க மறுக்கும் பெண் அதிகாரி, ஊழியர் சங்க நிர்வாகிகள் வந்தா, பயந்து போய் உடனே அவாளை பார்த்து, அவா கோரிக்கையை நிறைவேற்றி வச்சுடறாங்க ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.

''பூங்கொடி, உங்கப்பா ஊருல இருந்து வந்துட்டாரா தாயி...'' என, தெருவில் சென்ற சிறுமியிடம் அண்ணாச்சி விசாரிக்க, நண்பர்கள் நடையை கட்டினர்.



வாசகர் கருத்து (3)

  • Sivakumar - Qin Huang Dao,இந்தியா

    BSNL Bai Saab Nahi Lagega இப்படி ஒரு அராஜகம் இருக்கும்போது பிஎஸ்என்எல் மீண்டு வருவது ரொம்ப ரொம்ப கஷ்டம். கேபிள்களை திருடி விற்று பிழைப்பு நடத்தும் ஊழியர்களுக்கு மன சாட்சியே கிடையாது. அரசாங்கத்தை ஏமாற்றி பிழைப்பு நடத்தியவர்கள் நன்றாக வாழ் முடியாது, வாழ்ந்ததாக சரித்திரமும் கிடையாது. நம்ம நாட்டின் சாபக்கேடு.

  • Dharmavaan - Chennai,இந்தியா

    bsnl குட்டிச்சுவரானதற்கு யார் காரணம் என்று இப்போது புரியும்.

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    ஊழியர் சங்கம் கட்சிப்பின்னணியுடன் எந்த எல்லைக்கும் போவார்கள் என்ற அச்சம்தான் காரணமாக இருக்கும்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
Advertisement