''நட்சத்திர ஹோட்டல்ல கூட்டம் நடத்தி, பணத்தை வீணடிக்கிறாங்க பா...'' என்றபடியே, பேச்சை ஆரம்பித்தார் அன்வர்பாய்.
''யாருங்க அது...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலக கட்டுப்பாட்டுல கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள் செயல்படுது பா... இந்த சங்கங்கள் தான் ரேஷன் கடைகள், பல்பொருள் அங்காடிகள், மருந்தகங்களை நடத்திட்டு வருது... இந்த சங்கங்கள் பெரும்பாலும் நஷ்டத்துல இயங்குது பா...
''கூட்டுறவுத் துறைக்கு, சென்னை மாதவரத்துல, நவீன வசதிகளோட பயிற்சி மையம் இருக்குது... ரேஷன் கடைகளை தரம் உயர்த்துவது சம்பந்தமா, சமீபத்துல நடந்த மூணு நாள் ஆய்வுக் கூட்டத்தை இந்த பயிற்சி மையத்துல நடத்தாம, நட்சத்திர ஹோட்டல்ல தடபுடலா நடத்தினாங்க பா...
''இதுக்கு லட்சக்கணக்குல செலவு செஞ்சாங்க... சேலத்துல அடுத்த மாசம், 8, 9ம் தேதிகள்ல நடக்க இருக்கும் இணை பதிவாளர்கள் ஆய்வுக் கூட்டத் தையும் நட்சத்திர ஹோட்டல்ல நடத்தப் போறாங்களாம்... சங்கங்களின் நிதி நெருக்கடி தெரிஞ்ச அதிகாரிகளே, இப்படி பணத்தை விரயம் செய்யலாமா பா...'' எனக் கேட்டபடியே முடித்தார், அன்வர்பாய்.
''வேலுார் மாவட்டம், கொட்டமிட்டா அரசு துவக்கப் பள்ளியில, உமாபதின்னு ஒருத்தர் துாய்மை பணியாளரா வேலை பார்த்துண்டு இருந்தார்... இவர், சொந்த ஊரான ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கருக்கு, 'டிரான்ஸ்பர்' கேட்டு விண்ணப்பிச்சார் ஓய்...'' என, அடுத்த தகவலை ஆரம்பித்த குப்பண்ணா, அதே வேகத்தில் தொடர்ந்தார்...
''இதுக்காக, ராணிப்பேட்டை மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, 2 லட்சம் ரூபாய் சொளையா வெட்டியிருக்கார்... உடனே, சோளிங்கர் அருகே, சூரை அரசு பள்ளிக்கு, 'டிரான்ஸ்பர்' கிடைச்சிடுத்து ஓய்...
''உத்தரவோட போனவருக்கு, அதிர்ச்சி காத்துண்டு இருந்துது... 'இந்த பள்ளியில துாய்மை பணியாளர் பணியிடமே இல்ல'ன்னு திருப்பி அனுப்பிட்டா ஓய்... இதனால, ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்துக்கு, 'டிரான்ஸ்பர்' போட்டா... அங்கயும் துாய்மை பணியாளர் பணியிடம் இல்லாததால, கொட்டாமிட்டாவுக்கே அனுப்பிட்டா ஓய்...
''வேற வழியில்லாம, 'சரி, போனா போறது... குடுத்த 2 லட்சம் ரூபாயை திருப்பி தாங்கோ'ன்னு கேட்டா, 'நாங்க டிரான்ஸ்பர் ஆர்டர் போட்டாச்சு... நீங்க, 'ஜாயின்' பண்ணலன்னா நாங்க என்ன பண்றது'ன்னு அதிகாரிகள் அலைக்கழிக்கறா... பாவம், ரெண்டு மாசமா சம்பளமும் வராம, மனுஷன் அல்லாடிண்டு இருக்கார் ஓய்...'' என்றார், குப்பண்ணா.
-''பதவியை பிடிக்க பலத்த போட்டி நடக்கு வே...'' என்றார், அண்ணாச்சி.
''எந்த துறையிலங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''பதிவுத் துறையில, 26 மாவட்ட பதிவாளர் இடங்களை, உதவி ஐ.ஜி., நிலைக்கு தரம் உயர்த்திட்டாவ... பணி மூப்பு அடிப்படையில தகுதி உள்ள, 18 பேருக்கு உதவி ஐ.ஜி.,யா, 'புரமோஷன்' கொடுக்க பதிவுத்துறை முடிவு செஞ்சிருக்கு வே...
''பசையான இடங்களை பிடிக்க, சில பதிவாளர்கள், '1 சி' வரை குடுத்து துண்டு போட்டுட்டாவ... அதனால, 'மத்த இடத்துக்கு யார் அதிகம் தருவாங்க'ன்னு மேலிடம் எதிர்பார்க்க ஆரம்பிச்சிட்டு... அதே நேரம், தகுதி உள்ள சிலர் பணம் கொடுக்க யோசிக்கிறதால, 'போஸ்டிங்' போடுறது இழுபறியில கிடக்கு வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
அரட்டை முடிய பெஞ்ச் கலைந்தது.
சீ , பாவம் துப்புரவுப்பணியாளரிடமே லஞ்சம் பணியிடம் இல்லை என்று தெரிந்தும் கண்துடைப்பு ஆர்டர் இவனுக்கெல்லாம் தனியாக நரகமே வேண்டாம், வாழும் காலத்திலேயே புழுத்து சாவான்