வெளிநாட்டு பல்கலைகளால் இந்தியாவில் மாற்றம் நிகழும்
மத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கையில், 'வெளிநாடுகளில் உள்ள பல்கலைக் கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள், இந்தியாவில் தங்கள் வளாகங்களை அமைக்க, அனுமதி அளிக்கப்படும்' என, கூறப்பட்டிருந்தது. அதற்கேற்ற வகையில், இதுதொடர்பான வரைவு விதிகளை, யு.ஜி.சி., எனப்படும், பல்கலை மானியக் குழு சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
வெளிநாட்டு பல்கலைகள், இந்தியாவில் தங்கள் வளாகங்களை அமைக்க முதல் கட்டமாக, 10 ஆண்டுக்கு அனுமதி தரப்படும். பின், அந்த அனுமதியை புதுப்பிக்க வேண்டும். வளாகங்களை அமைக்கும் உயர்கல்வி நிறுவனங்கள், எந்தெந்த பாடங்களை கற்பிப்பது என்பதையும், மாணவர்களைத் தேர்வு செய்யும் முறை மற்றும் கல்வி கட்டணத்தையும், அவர்களே தீர்மானிக்கலாம்.
அதேநேரத்தில், அந்த கல்வி நிறுவனங்களின் பாடத் திட்டங்கள் நம் நாட்டின் நலனுக்கு எதிரானதாகவோ, பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையிலோ இருக்கக் கூடாது. கல்வி கட்டணமும் நியாயமாக இருக்க வேண்டும்.
இந்த வளாகங்களில் பாடம் நடத்துவதற்கு தேவையான ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களை, அந்த பல்கலைக் கழகங்களே தேர்வு செய்து கொள்ளலாம். அத்துடன், நேரடி வகுப்புகளை மட்டுமே நடத்த வேண்டும். 'ஆன்லைன்' வாயிலாகவோ, தபால் வாயிலாகவோ பாடங்களை நடத்தக் கூடாது என்பது உட்பட, பல விஷயங்கள் வரைவு விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதன் வாயிலாக, வெளிநாடுகளுக்குச் சென்று லட்சக்கணக்கில் செலவு செய்து படிக்க விரும்பும் மாணவர்கள், அந்தப் பட்டப் படிப்புகளை, நம் நாட்டிலேயே படிக்கும் சூழ்நிலையும் உருவாகும். மேலும், அந்த பல்கலைகள் வழங்கும் பட்டங்கள், நம்நாட்டு கல்வித் துறையாலும் அங்கீகரிக்கப்படும் என்பதால், மாணவர்கள் வேலை வாய்ப்பு பெறுவதிலும், பிரச்னை இருக்காது.
வெளிநாட்டு பல்கலைகள், இந்தியாவில் வளாகங்கள் அமைப்பது தொடர்பான மசோதா, அன்னிய கல்வி நிறுவனங்கள் மசோதா, முதன் முதலாக, ௧௯௯௫ல் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனாலும், அந்த மசோதா நிறைவேறவில்லை.
இதன்பின், ௨௦௦௫ - ௨௦௦௬ல் மற்றொரு வரைவு மசோதா உருவாக்கப்பட்டு, மத்திய அமைச்சரவை யின் ஒப்புதல் அளவிற்கு சென்றாலும், பார்லிமென்டில் அது சட்டமாகவில்லை. இதையடுத்து, ௨௦௨௦ம் ஆண்டில், மத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கையில், கல்வியை உலகமயமாக்கும் யோசனைக்கு புதிய உத்வேகம் கொடுக்கப்பட்டு, அதற்கான வரைவு விதிகளை, யு.ஜி.சி., வெளியிட்டுள்ளது.
யு.ஜி.சி.,யின் புதிய விதிகளின்படி, உலக அளவிலான தரவரிசையில் முதல், ௫௦௦ இடங்களைப் பிடித்துள்ள கல்வி நிறுவனங்கள், நம் நாட்டில் தங்கள் வளாகங்களை அமைக்கலாம். அப்படி இல்லையெனில், தங்கள் நாட்டில் புகழ் பெற்ற அளவில் உள்ள பல்கலைகளும், இந்தியாவில் வளாகங்களை அமைக்கலாம்.
'யுனஸ்கோ'வின் புள்ளியியல் நிறுவன ஆய்வுப்படி, வெளிநாடுகளுக்கு படிக்கச் செல்லும் மாணவர்கள் எண்ணிக்கையில், உலக அளவில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், ௪.௫ லட்சம் மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று படிக்கின்றனர்.
வெளிநாட்டுப் பல்கலைகள் இங்கு வளாகங்களை அமைக்கும் போது, தொழில் நுட்பம், சுகாதாரம், வர்த்தக ஆய்வுகள், கலை மற்றும் மானிடவியல் போன்ற துறைகளில், தேவையான யோசனைகள் அங்கிருந்து இங்கு பரிமாற்றம் அடைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அத்துடன், இங்கு படிக்கும் மாணவர்களின் கல்வி அனுபவங்களும் மேம்படலாம்.
புகழ்பெற்ற வெளிநாட்டு பல்கலைகள் இந்தியாவில் வளாகங்களை அமைப்பது, நம் நாட்டின் கல்வித் தரத்தையும் உயர்த்தும். அத்துடன், வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுக்கு இணையாக, இந்திய கல்வி நிறுவனங்களும் தங்களின் தரத்தை உயர்த்த முன் வரும்; அது, ஆரோக்கியமான போட்டியை உருவாக்கும்.
இருப்பினும், வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்கள், தங்கள் நாட்டில் ஒரு தரத்தையும், இங்கு ஒரு விதமான தரத்தையும் பின்பற்றுவது தவிர்க்கப்பட வேண்டும். கல்வி கட்டணமும் நியாயமான அளவில் வசூலிக்கப்படுவதை, மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். அப்படிச் செய்யும் போது, இந்தியா கல்விக்கான உலகளாவிய இடமாக மாற வாய்ப்பு உள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!