Load Image
Advertisement

கார்ப்பரேஷன் சி.இ.,போஸ்ட்டிங் காலி... காசு பாக்குற ஆபீசர்களுக்கு ஜாலி!

மருதமலை கோவிலில் தரிசனத்தை முடித்து விட்டு, ஆள் நடமாட்டமில்லாத ஓரிடத்தில் சித்ராவும், மித்ராவும் அமர்ந்தனர். பிரசாதத்துடன், லட்டும், முறுக்கும் வாங்கிக் கொண்டு வந்தாள் மித்ரா. இருவரும் அதைச் சுவைத்துக் கொண்டே, பேசிக் கொண்டிருந்தனர். பலமாக காற்று வீசியதைப் பார்த்த சித்ரா, சத்தமாகப் பேச ஆரம்பித்தாள்...

''மித்து! மருதமலைக்கு வர்ற கூட்டம் அதிகமாயிட்டே இருக்கு...வருமானமும் நல்லாத்தான் இருக்கு. இந்தத் தைப்பூசத்துக்கு ஏகப்பட்ட கூட்டம் வரும்னு எதிர்பார்க்குறாங்க. ஆனா, பெருசா டெவலப்மென்ட் ஒர்க் எதுவும் நடக்குறதில்லை. ரோப் கார் வருது, லிப்ட் வைக்கிறாங்கன்னு சொல்லிட்டே இருக்காங்களே தவிர, வேலை நடக்குறது மாதிரித் தெரியலை!''

சித்ராவின் கருத்தைஆமோதித்த மித்ரா, தனக்குத் தெரிந்த தகவலைப் பகிர்ந்தாள்...

''இப்போ இருக்குற லேடி ஆபீசர், இங்க இருக்குற யாரையுமே மதிக்கிறதில்லைன்னு சொல்றாங்க. தைப்பூசத்துக்கு மண்டலத் தலைவர் பேரே இல்லாமத்தான் அழைப்பிதழ் அடிச்சிருக்காங்களாம். ஆனா எதிர்க்கட்சி கவுன்சிலர், உபயதாரர் பேரெல்லாம் கரெக்டாப் போட்ருக்காங்களாம். அது ஒரு சர்ச்சையா கிளம்பிருக்கு...அறங்காவலர்களை நியமிக்கிறதும் லேட்டாயிட்டே இருக்காம்!''

மித்ரா முடிக்கும் முன் சித்ரா குறுக்கிட்டுப் பேசினாள்...

''அறநிலையத்துறை அதிகாரிகளைப் பத்தி நிறையா கம்பிளைண்ட் வருதுப்பா...புறநகர்ப் பகுதிகள்ல இருக்குற கோவில்கள்ல திருவிழா, கும்பாபிஷேகம் நடத்துறதுக்கு அனுமதி கொடுக்கவே, அதிகாரிங்க ஒரு லட்ச ரூபா வரைக்கும் லஞ்சமா கேக்குறாங்களாம். கோவில் திருப்பணிக்கு ஆகுற செலவுல 25 பர்சண்டேஜ் லஞ்சமாத் தர வேண்டியிருக்குன்னு திருப்பணி செய்யுறவுங்க புலம்புறாங்க!''

''லஞ்சம்னதும் ஞாபகம் வந்துச்சு...சிட்டிக்குள்ள பில்டிங் அப்ரூவலுக்கு, லஞ்ச ரேட் எகிறிட்டே போகுதுக்கா. அதுவும் ஏரியா, சதுர அடியைப் பார்த்து, இஷ்டத்துக்கு காசு கேக்குறாங்களாம். கட்டடம் கட்ற பட்ஜெட்ல அப்ரூவல் வாங்கவும், புக் போடவுமேஒரு பெரிய அமவுண்டை ஒதுக்க வேண்டியிருக்குன்னு இன்ஜினியர்கள் கதறுறாங்க...!''

''ஆனா அதை விட, இ.பி.கனெக்சன் வாங்குறதுக்குதான் அதிகமா செலவு பண்ண வேண்டியிருக்காம். அதுலயும் புது ரூல்ஸ் தெரியாம, நாலு வீடுகளைச் சேர்த்துக் கட்டுனவுங்க, சின்னதா கடை கட்டுனவுங்க எல்லாரும் 'பில்டிங் கம்ப்ளீஷன் சர்ட்டிபிகேட்' வாங்க முடியாததை வச்சு, தாறுமாறா மெரட்டுறாங்களாம். சர்ட்டிபிகேட் இல்லாததை காரணமா வச்சு, சாதாரண வீட்டுக்கு இ.பி., கனெக்சன் கொடுக்கவே ரெண்டு, மூணு லட்சம் லஞ்சம் கேக்குறாங்க!''

''ஆமாக்கா! எனக்கும் ஏகப்பட்ட கம்பிளைண்ட் வருது...தமிழ்நாட்டுல மத்த ஏரியாக்கள்ல எல்லாம், இ.பி.,ஆபீசர்ஸ் நிறைய்யப்பேரு, விஜிலென்ஸ்ல மாட்றாங்க. இங்க மட்டும் யாரையுமே பிடிக்க மாட்டேங்கிறாங்க. சொல்லப்போனா, ஸ்டேட்லயே நம்ம ஊருலதான் லஞ்சம் அதிகமா வாங்குறாங்கன்னு சொல்லலாம்...நம்ம மாவட்ட பொறுப்பு அமைச்சர், இதெல்லாம் கொஞ்சம் கன்ட்ரோல் பண்ணுனா நல்லாருக்கும்!''

மித்ரா சொன்னதைக் கேட்ட சித்ரா, சிரித்துக் கொண்டே பேச்சைத் தொடர்ந்தாள்...

''அவரே பாவம்...கட்சியையும் கரையேத்த முடியாம, கார்ப்பரேஷனையும் கன்ட்ரோல் பண்ண முடியாம தவியா தவிக்கிறாராம். கொஞ்ச நாளா மேயர் ஒரு பக்கமும், கமிஷனர் ஒரு பக்கமும் தனித்தனியா இன்ஸ்பெக்சன் போறாங்க. அதிகாரிங்க யாரு கூட போறது, யாரு சொல்றதைக் கேக்குறதுன்னு தெரியாம இருதலைக் கொள்ளி எறும்பா தவிக்கிறாங்க!''

''அதை விட கட்சிக்காரங்க பண்ற அலும்புலதான் அவர் ரொம்ப அப்செட்ன்னு கேள்விப்பட்டேன்...கட்சி உறுப்பினர் அட்டையே இல்லாதவங்க எல்லாம் பணம் கொடுத்து பதவி வாங்கிட்டாங்கன்னு கட்சிக்குள்ள கடுமையான அதிருப்தி கிளம்பிருக்கு...வார்டு வாரியா அடுத்த கட்சிக்காரங்க பத்தி தகவல் சேகரிக்க பணம் கொடுத்தா அதையும் ஆட்டையப் போட்டுட்டாங்கன்னு உடன் பிறப்புகள் உறுமுறாங்க!''

''கட்சிக்காரங்களை விடு...கார்ப்பரேஷன்ல ஏற்கனவே அஞ்சாறு இன்ஜினியர்களை மாத்துனாங்க...அடுத்த டிரான்ஸ்பர், புரமோஷன் லிஸ்ட், அடுத்த மாசம் முதல் வாரத்துல வரப்போகுதாம்...யார் யாருக்கு பதவி உயர்வு வரப்போகுது, எந்தெந்த ஊருக்கு துாக்கி அடிக்கப் போறாங்களோன்னு எல்லா ஆபீசர்களும் பதட்டத்துலயே இருக்காங்க!''

''உண்மைதான்க்கா....கார்ப்பரேஷன்ல இருந்த இசட்.எஸ்.ஓ., போஸ்ட்டிங்கையே காலி பண்ணீட்டாங்க. பில் கலெக்டர்கள் வேலையை 'அவுட் சோர்சிங்'ல ஒப்படைக்கப் போறாங்களாம்...2021ல கவர்மென்ட் மாறுனதும் சி.இ.,யை துாக்குனாங்க. இப்ப வரைக்கும் 'இன்சார்ஜ்'லயே வண்டி ஓடுது. அதுவும் இப்போ டவுன் பஞ்சாயத்துல ஏ.இ.இ.,யா இருந்தவரை இ.இ.,யாக்கி, அவர்ட்ட சி.இ.,பொறுப்பை கொடுத்திருக்காங்க!''

''அடக்கொடுமையே! டவுன் பஞ்சாயத்துல அவர் பெருசா என்ன ப்ராஜெக்ட் பாத்திருப்பாரு? இவ்ளோ பெரிய சிட்டிக்கு இந்த மாதிரி ஆபீசரை இன்சார்ஜா போட்டா எப்பிடி வேலை நடக்கும்...கேட்ட இடத்துல கையெழுத்துப் போடுற ஆளை வச்சுக்கிட்டு நல்லா காசு பண்றாங்க போலிருக்கு...ரெண்டாவது பெரிய கார்ப்பரேஷன்னு பேரு...ஆனாலும் இந்த கவர்மென்ட்ல அநியாயத்துக்கு நம்ம ஊரை வச்சு செய்யுறாங்க!''

கொந்தளிப்போடு பேசிய சித்ராவை ஆசுவாசப்படுத்தி, அடுத்த மேட்டருக்குத் தாவினாள் மித்ரா...

''கார்ப்பரேஷன்ல மட்டுமில்லைக்கா...கவர்மென்ட் ஆஸ்பிடல்லயும் அதே நிலைமைதான். போன வாரம் மெடிக்கல் கவுன்சில் ஆபீசர்ஸ், நம்ம ஜி.எச்.ல திடீர்னு ஆய்வுக்கு வந்துட்டாங்க. வழக்கமா 10 பர்சண்டேஜ் டாக்டர்கள் குறைவா இருந்தா ஏத்துக்குவாங்க. ஆனா, நம்ம ஜி.எச்.,ல 40 பர்சண்டேஜ் டாக்டர்கள் பற்றாக்குறை இருக்குறதைப் பார்த்துட்டு, காய்ச்சி எடுத்துட்டாங்களாம்!''

''அப்புறம் என்ன பண்ணுனாங்களாம்?''

''எப்பவுமே இந்த மாதிரி ஆய்வுக்கு வர்றப்போ, முன் கூட்டியே தெரிஞ்சு, இ.எஸ்.ஐ.,யில இருக்குற டாக்டர்களை இங்க 'டெபுடேஷன்'ல போட்டு சமாளிச்சிருவாங்க...இப்போ சொல்லாம, கொள்ளாம திடீர்னு வந்ததால ஒண்ணும் பண்ண முடியலை. அதனால மெடிக்கல் கவுன்சில் என்ன பண்ணப் போறாங்களோன்னு ஆஸ்பிடல் நிர்வாகமே பதட்டத்துல இருக்காம்!''

மித்ரா பேசிக் கொண்டிருக்கும் போதே, பிளாஸ்க்கில் கொண்டு வந்த இஞ்சி டீயை இரண்டு டம்ளர்களில் ஊற்றிய சித்ரா, அதைக் குடித்துக் கொண்டே சூடான மேட்டரை ஆரம்பித்தாள்...

''மித்து! கோவைக்குற்றாலத்துல 'என்ட்ரி டிக்கெட்'ல மோசடி பண்ணி மாட்டுன பாரஸ்டர் ராஜேஷை சஸ்பெண்ட் பண்ணுனாங்கள்ல...அவர் சீக்கிரமே டூட்டிக்கு வந்துருவார்னு டிபார்ட்மென்ட்ல பேசிக்கிறாங்க!''

''என்னக்கா சொல்றீங்க...அவர் செஞ்ச மோசடி சாதாரணமானதில்லை!''

''ஆமா...அதுக்கென்ன...இதை அவர் மட்டுமா பண்ணிருக்க முடியும்...மேல இருக்குற சில ஆபீசர்களுக்கும் அதுல பங்கு இருக்குன்னு ஒரு தகவல்...அவுங்க மாட்டாம தப்பிக்கிறதுக்காக, 'நாங்க சொல்றது மாதிரி ஸ்டேட்மென்ட் கொடுத்தா, விசாரணையை ஊத்தி மூடிட்டு, கொஞ்ச நாள்ல திரும்ப டூட்டிக்குக் கொண்டு வந்துருவோம்'னு அவுங்க உத்தரவாதம் கொடுத்திருக்காங்களாம்!''

''பாரஸ்ட் டிபார்ட்மென்ட்ல விட்டாலும் கேஸ் ஸ்ட்ராங்கா போட்டா எப்புடி தப்பிக்க முடியும்...போலீசையும் கரெக்ட் பண்ணிருவாங்களோ?''

''எல்லாமே கூட்டணிதான் மித்து! மேட்டுப்பாளையம் கல்லாறு ஏரியாவுல புதுசு புதுசா காட்டேஜ் கட்றாங்க. அதுல அத்தனை விதமான 'இல்லீகல் ஆக்ட்டிவிட்டிஸ்'சும் நடக்குது...ஆனா நடவடிக்கை எடுக்க வேண்டிய போலீசும், பாரஸ்ட் ஆபீசர்களும் மாசாமாசம் மாமூலை வாங்கிட்டு கண்டுக்கிறதேயில்லை. அங்க ஜோடி ஜோடியா கூடுறதைப் பார்த்து, அந்த ஏரியா மக்கள்தான் கொதிச்சுப் போயிருக்காங்க!''

''ஏரியா மக்கள்ன்னதும் நம்ம சிட்ரா, நேரு நகர், காளப்பட்டி ஏரியா மக்கள் சொன்னது ஞாபகம் வந்துச்சு... அந்த ஏரியாவுல காலேஜ் பசங்க ஏகப்பட்ட பேரு தங்கிருக்காங்க...அவுங்கள்ட்ட கஞ்சா ரொம்ப சர்வ சாதாரணமா புழங்குதுன்னு ஏரியா மக்கள் சொல்றாங்க. பணத்துக்காக, செயின் பறிக்கிற வேலையும் அடிக்கடி நடக்குது...எல்லாத்துக்கும் காரணம் கஞ்சாதான்னு மக்கள் கொந்தளிக்கிறாங்க!''

''ஆமா மித்து! நேரு நகர் ஸ்கூல் முன்னால இருக்குற ஆட்டோ ஸ்டாண்ட்ல, ஒரு ஆளை ஆட்டோவுலயே வச்சு எரிச்சு கொன்னுட்டாங்க... இதெல்லாம் பார்த்துட்டு அந்த ஏரியா மக்கள் ஒரு விதமான பயத்துலதான் இருக்காங்க...போலீஸ் என்ன பண்றாங்கன்னே தெரியலை!''

''போலீஸ் மட்டும் என்ன பண்ண முடியும்... காலேஜ் நடத்துறவுங்க, டீச்சர்ஸ், பெத்தவுங்க, போலீஸ், ஏரியா மக்கள் எல்லாரும் சேர்ந்துதான் இதெல்லாம் சரி பண்ண முடியும்...!''

''உண்மைதான்க்கா...காலேஜ்ல மட்டுமில்லை...சாதாரண எலிமென்டரி ஸ்கூல்லயே டீச்சர்களுக்குள்ள அடிதடிதான்...காளிபாளையம் அரசு தொடக்கப் பள்ளியில படிக்கிறதே 65 பசங்கதான். அங்க இருக்குற மூணு டீச்சர்களுக்குள்ள நடக்குற அடிதடியில, மூணு பேருமே கிளாஸ் எடுக்குறதே இல்லையாம். அந்த ஊரு மக்கள் எவ்வளவோ புகார் பண்ணியும் கல்வித்துறை அதிகாரிங்க கண்டுக்கிறதே இல்லியாம்!''

''கல்வித்துறை பத்தி ஒரு பாசிட்டிவ் தகவல்...இப்போ வந்திருக்குற டி.இ.ஓ., புனிதா, எலிமென்டரி ஸ்கூல்கள்ல அடிக்கடி இன்ஸ்பெக்சன் பண்ணி, நல்ல டீச்சர்களை நல்லா 'என்கரேஜ்' பண்றாராம். பசங்களோட கிளாஸ்லயே உட்கார்ந்து, டீச்சர்களைப் பாராட்டுறாராம். நல்லா பாடம் எடுக்குற டீச்சர்களை பட்டியல் எடுத்து, டைரக்டரேட்டுக்குரெகமண்ட் பண்றாராம். செகன்டரி கிரேடு டீச்சர்கள் எல்லாரும் அவுங்களோட பாராட்டுல ரொம்பவே உற்சாகமா இருக்காங்க!''

சித்ரா பேசிக் கொண்டிருக்கும்போது, இருவரையும் சுற்றிச் சுற்றி வந்த நாய்களைப் பார்த்த மித்ரா, ''மித்து! சிட்டிக்குள்ள நாய்த்தொல்லை ரொம்ப அதிகமாயிருச்சு. கருத்தடை பண்றதுக்கு காசு அதிகமாக் கொடுத்தும், ஒழுங்கா அதைப் பண்றதில்லைன்னு கவுன்சிலர்கள் கம்பிளைண்ட் பண்றாங்க...அது உண்மை மாதிரித்தான் தெரியுது. இங்க மட்டுமில்லை...சிட்டியில எங்க பார்த்தாலும் நாய்கள் படை அதிகமாயிருச்சு!'' என்றாள்.

கூட்டம் அதிகமாகவே 'கிளம்பலாம்' என்ற சித்ரா, பேக்கை எடுத்துக் கொண்டு எழுந்தாள். இருவரும் வண்டியை நோக்கி நடக்கத் துவங்கினர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement