கல்வி இடைவெளி அகற்றும் 'டிஜிட்டல்' தொழில்நுட்பம்!
இந்தியாவின் வளர்ச்சி, பாகுபாடுகளும், இடைவெளிகளும் நிறைந்ததாகவே இருந்து வந்துள்ளது. இந்தச் சிக்கலை கோவிட்- 19 பாதிப்புச் சூழல் தெளிவாக எடுத்துக்காட்டியது.
மாபெரும் தொழில்நுட்ப மாற்றங்கள் பெருநகரங்களிலும், நகர்ப்புறங்களிலும் ஏற்பட்டிருந்தாலும் அவை கிராமங்களை குறைந்த அளவே சென்றடைந்தன.
கடந்த, 2014-ல் மிகப்பெரிய மாற்றங்கள் தொடங்கின. பாரம்பரியத்திற்கும், நவீனத்திற்கும் இடையே சமநிலையை உருவாக்கும் வகையில் புதுமைகளுடன் அனைவரையும் உள்ளடக்கி சமத்துவத்தை நிலைநாட்டும் வகையிலான மாற்றங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டன.
இணைய வளர்ச்சி
கல்வித்துறையிலும் மிகப் பெரிய முன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
போக்குவரத்தும் நேரடி தொடர்பும் இல்லாத சூழலில் இந்தியா டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் உதவியுடன் அனைவரையும் உள்ளடக்கிய வகையில் மிகப் பெரிய முன்னேற்றத்தைக் கண்டது.
இணையதள வசதிகள் கிராமப்புறங்களில் குறைவாக இருந்த சூழலில், சவால்கள் அதிக அளவில் இருந்தன. எனினும், இணையதள இணைப்புகள் தொடர்ந்து அதிகரித்து வந்தன.
கடந்த, 2013-ல், நாட்டில் 238.71 மில்லியன் இணையதள இணைப்புகள் இருந்த நிலையில், 2018-ஆம் ஆண்டில் இது 560 மில்லியனாக அதிகரித்தது.
உலகில் அதிக அளவு இணையதள இணைப்புகளைக் கொண்ட 2-வது பெரிய நாடாக இந்தியா உருவெடுத்த நிலையில், இது கல்வித்துறையில் தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு தொடர்ந்து வழிவகுக்கும்.
இந்தியாவில் நகர்ப்புறங்கள் இதனால் ஏற்கனவே பயனடைந்திருப்பதுடன் இணையதள கல்விச் சேவைகளும் கல்வி தொழில்நுட்ப நிறுவனங்களின் சேவைகளும் அதிக ளவில் கிடைத்து வருகின்றன.
நாட்டின் கல்வித்துறை சந்தை, 2020-ல், 2.5 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இது அடுத்த 10 ஆண்டுகளில் 5 மடங்கு அதிகரித்து 10 பில்லியன் டாலராக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. பள்ளிகள் டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து கோவிட் காலத்தில் உணரப்பட்டது.
எனவே, கற்றலை அனைவரையும் உள்ளடக்கிய வகையிலும், துாண்டுதலை ஏற்படுத்தும் வகையிலும் மாற்றுவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.
நாட்டின் 3,12,000 பொது சேவை மையங்கள், கல்வி உட்பட 350 இணையதளச் சேவைகளை வழங்கி வருகின்றன. கோவிட் சூழலில் தீக்ஷா என்ற டிஜிட்டல் தளம் சிறந்த கல்விச் சூழலுக்காக அறிமுகம் செய்யப்பட்டது.
அதிக பயன்பாடு
பார்வைத் திறன் மற்றும் செவித் திறன் அற்ற மாணவர்களும் பயன்படுத்தும் வகையில், தொழில்நுட்ப அம்சங்களை இந்தத் தளம் கொண்டுள்ளது.
கிட்டத்தட்ட, 31 மொழிகளில், 2000-க்கும் மேற்பட்ட பாடப்புத்தகங்கள் வீடியோ முறையில் இதில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. தொழில்நுட்பத்தின் உதவியுடன் கூடிய கல்வி நாட்டின் தொலைதுார பகுதிகளில் உள்ள மாணவர்கள் மற்றும் குழந்தைகளுக்கும் கல்வி கிடைப்பதை உறுதி செய்துள்ளது.
முன்பு, தொழில்நுட்பங்கள் கிடைப்பதில் பாலினப்பாகுபாடும் காணப்பட்டது.
கடந்த 2015-ல் கிராமப்புறங்களைச் சேர்ந்த 10 சதவீத பெண்களே இணையதளங்களைப் பயன்படுத்தி வந்த நிலையில், அவர்களுக்கு தகவல் கிடைப்பதிலும் சிக்கல் இருந்து வந்தது.
'ஸ்மார்ட்' கைபேசிகளின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், கிராமப்புற பெண்களும் அதிக அளவில் இணையதளத்தை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட தொழில்நுட்பங்களும் அதிகரித்துள்ள நிலையில், இணையதள கல்வி தளங்கள் அனைவருக்கும் வசதியையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தி உள்ளன.
புதிய தேசிய கல்விக் கொள்கையும் டிஜிட்டல் தொழில்நுட்ப மாற்றங்களும் நாட்டின் கல்விச் சூழலை மேலும் சிறந்த முறையில் மாற்றியமைக்கும்.
- சாந்திஸ்ரீ துலிபுடி பண்டிட்,
துணைவேந்தர், ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம்.
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!