வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி: மக்களின் மனதில் நிற்பவர் யார்?
- என்று, மன்னாதி மன்னன் படத்தில் கேள்வி எழுப்பி, அதற்கு விடையாக வாழ்ந்து காட்டிய காவியத்தலைவன், எம்.ஜி.ஆரின் பிறந்த தினம் இன்று உலகெங்கும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தியாவில் தோன்றிய ஆயிரக்கணக்கான தலைவர்களில் பூவுலகில் மறைந்து, 35 ஆண்டுகளுக்கு பின்னும் மங்காத புகழுடன் திகழ்வதற்கு, அவரின் கொடைத்தன்மை தான் காரணம்.
அள்ளிக் கொடுக்கும் வள்ளல்
கடையேழு வள்ளல்களுக்கு பின் தோன்றிய கலியுக வள்ளலாக போற்றப்படும் எம்.ஜி.ஆரின் ரத்தத்திலே ஊறியது, அவரது கொடைத்தன்மை.
இலங்கையின் கண்டியில் பிறந்த எம்.ஜி.ஆர்., தமிழகத்தின் கும்பகோணத்திற்கு வந்து வயிற்றுப் பிழைப்புக்காக நடிக்கத் துவங்கிய கஷ்ட காலத்திலும், சக கலைஞர்களுக்கு உதவி செய்தார் என்பது ஆச்சரிய வரலாறு.
நாடக கொட்டகையில் துவங்கிய அவரது வள்ளல் தன்மை, தமிழக முதல்வராக கடைசி மூச்சு வரையிலும் தொடர்ந்தது. அவரது மரணத்திற்கு பின்னும் தொடர்கிறது.
ஒருவருக்கு உதவுவதால், ஏதேனும் ஆதாயம் கிடைக்குமா என்ற கணக்கு பார்க்காமல், நேரம், இடம் பார்க்காமல் அள்ளிக் கொடுக்கும் வள்ளல் அவர்.
அதனால் தான் அடுப்பில் உலை வைத்து விட்டு, எம்.ஜி.ஆர்., வீட்டுக்கு நம்பிக்கையுடன் செல்லலாம். உலை கொதிக்கும் முன் உதவி கிடைத்து விடும் என்று மக்கள் உறுதியாக நம்பினர். இப்படி ஒரு நம்பிக்கையை உலகில் எந்த தலைவரும் மக்களிடம் விதைத்ததில்லை.
எம்.ஜி.ஆர்., கதாநாயகனாக நடிக்கத் துவங்கியதுமே, லட்சங்களில் சம்பளம் பெறத் துவங்கினார். அவர் நடிக்கத் துவங்கிய காலத்தில், 80 ரூபாயாக இருந்த 1 சவரன் தங்கத்தின் விலை, அவர் கடைசி படம் நடித்த காலத்தில், 1,200 ரூபாயாக மட்டுமே இருந்தது.
மேலும் ரியல் எஸ்டேட்டின் மதிப்பும் சதுர அடி 10 ரூபாய்க்கும் குறைவாகவே விற்பனையானது.
ஆனாலும் இவற்றில் முதலீடு செய்து, தனக்கென எதையும் சேர்த்து வைக்க விரும்பாமல், அத்தனை பணத்தையும் அள்ளியள்ளிக் கொடுத்தார்.
நேர்மை, கொள்கை
பணம் சம்பாதித்த சினிமாவில் ஒரு நேர்மையை, கொள்கையை கடைப்பிடித்தார். இந்த உலகிலேயே ஒரு தனி மனிதரின் கொள்கைக்காக திரைப்படம் எடுக்கப்பட்டு, அது வெற்றியும் அடைந்தது என்றால், அது எம்.ஜி.ஆரின் படங்கள் மட்டும் தான்.
ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும், எத்தகைய பண்புகளை கடைப்பிடிக்க வேண்டும் என்பதை படிக்காத பாமரனும் புரிந்து கொள்ளத்தக்க வகையிலும், தன்னால் மக்களுக்கு என்ன செய்ய முடியுமோ, அதையே திரைப்படத்தில் பாடல்கள் மற்றும் வசனங்கள் மூலம் சொன்னவர்.
தான் திரைப்படத்தில் சொன்னதை எல்லாம் ஆட்சிக்கு வந்து நிறைவேற்றவும் செய்தார்.
நேர்மையாக ஆட்சி
நாடோடி மன்னன் படத்தில் முதியோர், மாற்றுத் திறனாளிகளின் வாழ்வுக்காகவும், வேலை இல்லாத திண்டாட்டத்தை ஒழிக்க, தொழில் நிலையங்கள் அமைக்கவும், பள்ளிகள் கட்டுவதற்காகவும், என் சொத்தில் பாதியை அளிக்கிறேன் என்று சொன்னதை, நிஜமாகவே தன் வாழ்நாளில் நிகழ்த்திக் காட்டினார்.
ஆட்சிக்கு வந்த பின், ஒரே ஒரு சொத்து கூட வாங்காமல், நேர்மையாக ஆட்சி நடத்திய தனிப்பெரும் தலைவர் புரட்சித்தலைவர். அவர் உழைத்து, சம்பாதித்த சொத்துக்களை காது மற்றும் பேச முடியாத மக்களுக்கு உயில் எழுதி வைத்தார்.
சென்னை, ராமாபுரம் தோட்டத்தில் எம்.ஜி.ஆர்., பேச இயலாதோர் இல்லம் துவங்கினார்.
அங்கு தங்கிப் படிக்கும் குழந்தைகளுக்கு இலவச கல்வி, உணவு, உடை, வழங்குவதற்கு, சாலிகிராமத்தில் உள்ள சத்யா கார்டன் மூலம் வரும் வருமானத்தை செலவு செய்ய வேண்டும் என்று உயில் எழுதி வைத்தார்.
எம்.ஜி.ஆரின் மனிதநேய உள்ளத்தை உணர்ந்த காரணத்தாலே, 1965ல் முன்னாள் பிரதமர் லால் பகதுார் சாஸ்திரி அந்தமான் சுற்றுப்பயணத்தின் போது, பணத்தோட்டம் எம்.ஜி. ஆர்., ரசிகர் மன்றத்தை திறந்து வைத்தார்.
கடந்த, 1962 - 1967ல் நடைபெற்ற சீன படையெடுப்பின்போது நாட்டின் பாதுகாப்பு நிதிக்கு, 1 லட்சம் ரூபாய் தருவதாக அறிவித்து, முதல் தவணையாக 75 ஆயிரம் ரூபாயை பிரதமர் ஜவஹர்லால் நேருவிடமும், 1964ல் அவர் மறைந்த பின், இரண்டாவது தவணையான 25 ஆயிரம் ரூபாயை, ஜனாதிபதி ராதாகிருஷ்ணனிடமும் நன்கொடையாக அனுப்பி வைத்தார்.
நன்கொடை அளித்த எம்.ஜி.ஆரின் உயர்ந்த பண்பை பாராட்டி, நன்றி தெரிவித்து, இருவரும் நன்றிக் கடிதம் அனுப்பி வைத்தனர். எம்.ஜி.ஆர்., மறைவுக்கு பின், நாட்டின் மிக உயரிய, 'பாரத ரத்னா' விருது வழங்கி, மத்திய அரசு கவுரவித்தது.
வேண்டுகோள்
சிறுபான்மை மக்கள் மீது காட்டிய அதே அன்பை, அதே அக்கறையை, பெரும்பான்மை மக்களிடமும் எம்.ஜி.ஆர்., காட்டினார்.
அண்ணாதுரையின் வழியில் ஆட்சி நடத்தினார் என்றாலும், அன்னை மூகாம்பிகை கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தார்.
எம்.ஜி.ஆர்., உடல் நலன் குன்றியிருந்த போது அவர் உடல் நலம் பெற வேண்டி, மக்கள் கூட்டம் கூட்டமாக பிரார்த்தனை செய்த போது, ஆன்மிகம் தமிழகத்தில் மறுமலர்ச்சி பெற்றது. அதனால் தான், எம்.ஜி.ஆரை தங்கள் குடும்பத்தில் ஒரு உறுப்பினராக அனைத்து மக்களும் இன்று வரை நேசிக்கின்றனர்.
தேச பக்தி, மனித நேயம் மிக்க, மக்கள் திலகமாக வாழ்ந்த, எம்.ஜி.ஆரின் பெயரை தான், 2019ல் இந்திய பிரதமர் மோடி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு, 'டாக்டர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில்வே நிலையம்' என்று பெயர் சூட்டி, பெருமை சேர்த்தார்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பிறந்த தினமான, ஜனவரி 17ம் தேதியை, இந்தியாவின் மனிதநேய தினமாக அறிவிக்கக் கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக மக்கள் சார்பாகவும், எம்.ஜி.ஆர்., தொண்டர்கள் சார்பாகவும், இந்த தினத்தில் வேண்டுகோள் வைக்கிறேன்.
சென்ட்ரல் ரயில்வே நிலையத்திற்கு, எம்.ஜி.ஆரின் பெயர் சூட்டி, அவரது பெரும் புகழை அங்கீகரித்தது போல், மனிதநேய தின கோரிக்கையையும் நிறைவேற்றி, தமிழக மக்களின் அன்பை, மோடி பெறுவார் என்பது நிச்சயம்.
இந்த உலகில் மனித நேயம் உள்ள வரையிலும், எம்.ஜி.ஆரின் புகழ் நிலைத்திருக்கும்.
- சைதை துரைசாமி, சென்னை முன்னாள் மேயர்
மது ஆலைகளை தமிழகத்தில் அவர் திறந்தது , இன்றும் நமது குடும்பங்களில் துயரம் தொடர்வதற்கு வலி வகுத்தது. கோடிக்கணக்கான பணத்தை பிரபாகரனிடம் கொடுத்து ஆயுத போராட்டம் நடத்த வழி செய்தார். விளைவு ...ஒரு தலைமுறையை இலங்கை இழந்தது.. எம் ஜி ஆர் எடுத்த தவறான முடிவுகளால் இன்றும் நமது சமூகம் துயரில் வாழ்கிறது.