Load Image
Advertisement

கமிஷன் வாங்குறதுல காட்றாங்க கெத்து... கார்ப்பரேஷன்ல ரெண்டு டெண்டர் ரத்து!

தொடர் விடுமுறையில் வெறிச்சோடியிருந்த கோவை மாநகர ரோடுகளில், 'ஹாயாக' டூ வீலரில் வலம் வந்து கொண்டிருந்தனர் சித்ராவும், மித்ராவும். காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில், மெதுவாக வண்டியை ஓட்டிக் கொண்டே மித்ராதான் பேச்சை ஆரம்பித்தாள்....

''அக்கா! இந்த வருஷம் பொங்கலுக்கு சென்னையிலயிருந்து ஆயிரக்கணக்கான ஸ்பெஷல் பஸ்களை இயக்கிருக்காங்க...ஆனா சென்னைக்கு அடுத்த பெரிய ஊரான நம்ம ஊர்லயும், வெளி மாவட்டத்துக்காரங்க பல லட்சம் பேரு இருக்காங்க அப்படிங்கிறதையே மறந்துட்டாங்க...அதுலயும் பாவம், தென் மாவட்ட மக்கள் படாதபாடுபட்டு, கடுமையான கோபத்தோட இருக்காங்க!''

மித்ராவின் பேச்சை பலமாகத் தலையாட்டி ஆமோதித்த சித்ரா, அதே மேட்டரைத் தொடர்ந்தாள்...

''மித்து! பிரைவேட் பஸ்களை கவர்மென்ட் அனுமதியோட இயக்கி, எஸ்.இ.டி.சி.,கிட்டயே 'புக்கிங்'கை ஒப்படைச்சிருந்தா, மக்களுக்கும் பஸ் வசதி கிடைச்சிருக்கும். கவர்மென்ட்டுக்கும் வருமானம் கிடைச்சிருக்கும்.

அதை பண்ணாததால, பிரைவேட் பஸ், வேன்கள்ல அநியாயத்துக்கு காசு வாங்கிட்டு இஷ்டம்போல ஓட்டிருக்காங்க. இதுல ஆர்.டி.ஓ.,க்கள்தான் நல்லா காசு பாத்திருக்காங்க!''

''அவுங்க மட்டுமா...போலீஸ்காரங்களும் அந்த வண்டிகள்ல நல்லா வசூல் போட்டாங்க...வண்டி இல்லாம மக்கள் அல்லாடிட்டு இருக்குறப்போ, இவங்க வண்டிகள்ல பகிரங்கமா காசு வாங்குறதை மக்களே பாத்திருக்காங்க!''

''வண்டிகள்ல வசூல்னதும் எனக்கு, போத்தனூர் ஏரியாவுல இருக்குற ஹைவே பேட்ரோல் போலீஸ் எஸ்.ஐ., ஞாபகம் வருது. தீயா வேலை செய்யணும் குமாருன்னு யாரோ சொன்னதை, அவர் தப்பாப் புரிஞ்சுட்டு, வண்டிகள்ல தீயா வசூல் பண்றாராம். கூட இருக்கிற போலீஸ்காரங்க, ஏதாவது சொன்னா, அவுங்களை மாத்தி விட்றாராம். கன்ட்ரோல் ரூம்ல இருக்குற ஒரு எஸ்.ஐ., தான் இதுக்கு உதவி பண்றாராம்!''

''ரெண்டு பேரும் கூட்டணியா?''

''ஆமா...அந்த எஸ்.ஐ., ஏழு வருஷமா கன்ட்ரோல் ரூம்லயே ராஜாவாட்டம் வாழுறாராம். போத்தனுார்ல மட்டுமில்லாம, பல ஏரியாவுல இருக்குற பேட்ரோல் போலீஸ்கள்ட்ட இருந்தும், அவருக்கு பங்கு போகுதாம்!''

''அதை விடு...கலெக்டர் பங்களாவுக்குப் பக்கத்துலயே கோவில்கிட்ட வண்டியை நிறுத்தி துாங்கிட்டு, சந்தன மரக் கொள்ளைக்காரங்களை கோட்டை விட்ட, ரோந்து போலீஸ் பத்தி பேசுனோமே...அந்த வண்டி இப்போ அங்கே நிறுத்துறதேயில்லை. கலெக்டர் பங்களாகிட்டயும், ஜூடிஷியல் அகாடமி முன்னாலயும், ரெண்டு ரெண்டு மணி நேரம் நிறுத்தி கண்காணிக்கிறாங்க. மத்த நேரம் வண்டி சுத்திச்சுத்தி வருது!''

மித்ரா சொன்னதைக் கேட்டு, ''எத்தனை நாளைக்குன்னு பார்ப்போம்!'' என்று சிரித்த சித்ரா, ''அதென்னவோ நம்ம ரெண்டு பேரும் ஏதாவது ஒரு பிரச்னையைப் பத்திப் பேசுனா, அதுக்கு உடனே ஆக்சன் எடுத்துர்றாங்க!'' என்று சொல்லி விட்டு, சில விஷயங்களை விளக்க ஆரம்பித்தாள்...

''வடக்கு தாலுகா ஆபீஸ்ல ஆதார் மையத்துல இருக்குற ஒருத்தரு, அந்த வேலைகளைச் செய்யாம, புரோக்கர் வேலை பார்த்ததா பேசுனோமே...தாசில்தார் கூப்பிட்டு வாங்கு வாங்குன்னு வாங்கிருக்காரு...இப்போ ஆதார் கார்டு வேலைகளை, சத்தமில்லாமப் பண்ணிட்டு இருக்காராம்!''

''பரவாயில்லையே...வேற ஏதாவது 'பீட்பேக்'?''

''கார்ப்பரேஷன் கிழக்கு மண்டலத்துல, லஞ்சப்பணத்தை வாங்கிட்டு, ஸ்கெட்ச் கொடுக்க மாட்டேன்னு சொன்ன சர்வேயர் பத்திப் பேசுனோமே...சேர்மன் கூப்பிட்டு அவரைத் திட்டி, பணத்தைக் கொடுக்கச் சொல்லிருக்காங்க. இனிமே என் பேரை எதுலயாவது இழுத்தீங்கன்னா நான் என்ன பண்ணுவேன்னே தெரியாதுன்னு, செம்ம மெரட்டு மெரட்டிருக்காங்க!''

''சூப்பர்! இதை கேளு...எப்பிடியும் தன்னோட மகளுக்கு மேயர் பதவியை வாங்கணும்னு, நம்ம ஊருல ஜல்லிக்கட்டுப் போட்டியை கஷ்டப்பட்டு நடத்துனாரே பழைய மாவட்டம்...கடைசியில அதுவும் கிடைக்காம, மாவட்டப்பதவியும் போயி, நொந்து போய்க் கெடக்குறாரே...இந்த வருஷம் யாருதான், நம்ம ஊருல ஜல்லிக்கட்டு நடத்தப்போறாங்க?''

''அது தெரியலை மித்து...! ஆனா புதுசா பொறுப்புக்கு வந்த ரெண்டு மாவட்டங்களும் எப்பிடியாவது, ஜல்லிக்கட்டை நல்லவிதமா நடத்தணும்னு, கட்சித் தலைமையில கண்டிஷன் போட்ருக்காங்களாம். இவுங்களால அந்தளவுக்கு சிறப்பா இல்லைன்னாலும், பேருக்காவது நடத்த முடியுமான்னு தெரியலை!''

''இன்னொரு விஷயம்...கிராம உதவியாளர்கள் போஸ்ட்டிங் போட்டதுல, கட்சிக்காரங்க ரெக்கமண்டேஷன், காசு கொடுத்தவுங்க எதையும் பார்க்காம, ரொம்ப நியாயமா தேர்வு பண்ணி அப்பாயின்ட்மென்ட் ஆர்டரைப் போட்டு, ஆளும்கட்சிக்காரங்களை ஆபீசர் கழுத்தறுத்துட்டார்னு, ஒரு பேச்சு வந்துச்சே...!''

''ஆமா மித்து! அது உண்மையில்லையா....!''

''அப்பிடித்தான் தெரியுது...ஏன்னா, வடக்கு தாலுகா ஆபீஸ்ல டெம்ப்ரரியா வேலை பார்த்த ஒருத்தரு, அஞ்சு லட்ச ரூபா கொடுத்து, அந்த போஸ்ட்டிங் வாங்குனது மட்டுமில்லாம, பெரியநாயக்கன்பாளையம் வி.ஏ.ஓ., ஆபீசை சொல்லி வச்சது மாதிரி வாங்கீட்டாராம். அந்த இடத்துக்கு, 10 பேருக்கு மேல முட்டி மோதியும், இவர் எப்பிடி வாங்குனார்னு கேட்டா, அஞ்சு விரலை விரிச்சுக் காட்றாராம்!''

''காசில்லாம இப்போ போஸ்ட்டிங் வாங்குறதெல்லாம், நடக்கிற காரியமா...நம்ம கார்ப்பரேஷன் ஸ்கூல்கள்ல, டாய்லெட்கள் எல்லாம் மோசமா இருக்குறதால அதையெல்லாம் பராமரிக்க ஒரு டெண்டர் விட்டு, கவுன்சில்ல தீர்மானம் நிறைவேத்துனாங்க.

அதே மாதிரி 100 வார்டுலயும் இருக்குற 'பார்க்'குகளை பராமரிக்கவும் டெண்டர் விட்டு தீர்மானம் போட்டாங்க...ரெண்டையும் இப்போ காசுக்காகவே ரத்து பண்ணீட்டாங்க!''

''என்னக்கா சொல்றீங்க...காசுக்காக ரத்து பண்ணீட்டாங்களா?''

''வேற எதுக்கு...இந்த ரெண்டு டெண்டரையும் எடுக்க ஆளும்கட்சி முக்கியப் புள்ளிகளும், கார்ப்பரேஷன்ல முக்கியமான ஆபீசர்களும் முட்டி மோதுறாங்க...யாருக்கு கெத்து இருக்குன்னு பேசி முடிவு பண்றதுக்காகத்தான் இப்போ இதை ரத்து பண்ணிருக்காங்க.

எப்பிடியும் டெண்டர் விட்டு ஸ்கூல் டாய்லெட், பார்க் எல்லாம் சரி பண்ணுவாங்கன்னு கனவு கண்ட நிலைக்குழுத் தலைவரெல்லாம், நிலை குலைஞ்சு போயிருக்காங்க!''

''கார்ப்பரேஷன்ல மட்டுமா...டவுன் பஞ்சாயத்துகள்ல முக்கியமான திட்டங்களுக்கு அப்ரூவலும், நிதியும் கேட்டு சென்னைக்கு கோப்பு போச்சுன்னா, கமிஷன் இல்லாம எதுவுமே திரும்பி வர்றதில்லையாம்.

துறையோட வி.ஐ.பி.,நேருக்கு நேராவே, 'இந்த புராஜெக்ட்டுக்கு கமிஷன் வந்துருச்சா'ன்னு கேட்டே திருப்பி அனுப்பிர்றாராம்...பாவம் டவுன் பஞ்சாயத்து இ.ஓ.,க்களும், கவுன்சிலர்களும் கதறுறாங்க!''

மித்ரா பேசிக் கொண்டிருக்கும்போது, பெரும் சத்தத்துடன் கடந்து சென்ற ஆம்புலன்சைப் பார்த்த சித்ரா, ஒரு வினாடி வானத்தை நோக்கிக் கும்பிட்டு விட்டு, அடுத்த மேட்டருக்குத் தாவினாள்...

''மித்து! போன வருஷம் நம்ம மெடிக்கல் காலேஜ்ல, ஆந்திராவைச் சேர்ந்த ஒரு பி.ஜி.,ஸ்டூடண்ட் தற்கொலை பண்ணுனானே...அந்தப் பையனுக்கு கல்வி உதவித் தொகை கிடைக்காமதான் தற்கொலை பண்ணிட்டதா ஒரு கம்பிளைன்ட் வந்துச்சு. அவுங்க அப்பா புகாரை வாங்கி விசாரணை பண்ணுனாங்க. அந்த கேஸ்ல டாக்டர்களை மட்டும் விசாரிச்சிட்டு, சம்பந்தப்பட்டவங்களை விட்டுட்டாங்களாம்!''

''சம்பந்தப்பட்டவங்கன்னா...யாருக்கா?''

''அந்த உதவித் தொகைக்கு ஏற்பாடு பண்ண வேண்டிய, மெடிக்கல் காலேஜ் அதிகாரிங்கதான்...அவுங்ககிட்ட இதுவரைக்கும் ஒழுங்காவே விசாரணை நடத்தலையாம். பேருக்கு விசாரிச்சிட்டு, நடந்ததை மூடி மறைச்சிட்டாங்களாம்.

அதை சரியா விசாரிச்சு நடவடிக்கை எடுத்தால்தான், மறுபடியும் இன்னொரு ஸ்டூடண்ட்டுக்கு இந்த நிலைமை வராம இருக்கும்னு, டாக்டர்கள் புலம்புறாங்க!''

''ஸ்டூடண்ட்டுன்னு சொன்னதும், நம்ம ஆதிதிராவிடர் நலத்துறை நடத்துற மாணவர் விடுதிகளைப் பத்தி ஒரு தகவல் ஞாபகம் வந்துச்சு...வெள்ளானைப்பட்டி, வெள்ளக்கிணறு ரெண்டு இடத்துலயும் நடக்குற ஹாஸ்டல்கள்ல, நிஜமாவே இருக்குற பசங்களைக் காட்டிலும் ரெண்டு மடங்கு அதிகமான பசங்க இருக்குறதாச் சொல்லி, பொய்க் கணக்கு எழுதுறாங்களாம். பசங்க கொதிக்கிறாங்க!''

பேசிக்கொண்டு வந்த மித்ரா, போலீஸ் வாகனத்தைப் பார்த்ததும், டக்கென்று டாபிக் மாறினாள்...

''அக்கா! நம்ம சிட்டி போலீசைக் காட்டிலும், டிஸ்ட்ரிக்ட் போலீசோட ட்விட்டர் பக்கத்துக்கு அதிகமான 'பாலோயர்ஸ்' இருந்தாங்க...அந்த ட்விட்டர் அக்கவுன்ட்டை ரொம்பவே பிஸியா வச்சிருந்தாங்க...ஆனா அதை திடீர்னு, க்ளோஸ் பண்ணீட்டாங்க தெரியுமா?''

''தெரியும் மித்து! அதுல யாரோ ஒருத்தரு தப்பா ஏதோ 'ஹேண்டில்' பண்ணி, சில அரசியல்வாதிங்க பக்கங்களுக்கு, 'லைக்' போட்டுட்டாங்க...அதைப் பத்தி சோஷியல் மீடியாவுல வறுத்து எடுத்துட்டாங்க... அதனால அந்த பிரச்னையை எப்பிடி டீல் பண்ணனும்னு தெரியாம 17 ஆயிரம் பாலோயர்ஸ் இருந்த பக்கத்தை, மொத்தமா க்ளோஸ் பண்ணீட்டாங்க!''

சித்ரா சொல்லிக் கொண்டிருக்கும்போதே, 'அக்கா! டீ சாப்பிடலாமா?' என்று கேட்டு, வண்டியை பேக்கரியின் முன்பாக ஓரம் கட்டினாள் மித்ரா.வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement