பொங்கல் ஷாப்பிங் போகலாம் என்று வண்டியை எடுத்துக் கொண்டு, சித்ரா வீட்டுக்கு வந்த மித்ரா, வீட்டில் 'டிவி' முன் அமர்ந்து கடமையாக கரும்பு சாப்பிட்டுக் கொண்டிருந்த சித்ராவைப் பார்த்து ஆச்சரியப்பட்டாள்.
தானும் ஒரு கரும்புத் துண்டை எடுத்துக் கொண்டு உட்கார்ந்த மித்ரா, ''என்னக்கா! ரேஷன் கடை கரும்பா... இந்த வருஷம் பொங்கல் தொகுப்பு பத்தி புகார் வரவாய்ப்பில்லை...கரும்பாவது நல்லாருக்கா?'' என்று கேட்டாள்.
அதற்குப் பதிலளித்த சித்ரா, ''ஆமா மித்து! பச்சரிசி, கரும்பு பரவாயில்லை...ஆனா வெள்ளை சர்க்கரைங்கிற பேருல அவுங்க கொடுக்குற அஸ்கா, பிரவுன் கலர்ல இருக்கு...ஏதாவது ஒரு குறை வைக்கணும்னு, நேர்த்தி வச்சிருக்காங்களோ என்னவோ....!'' என்றாள்.
''அது சரிக்கா...நம்ம ஊரு டாப் ஆபீசரை இந்த வாரம் மாத்தப் போறதா சொன்னீங்க...ஒரு லிஸ்ட்டும் வரலை!''
''அதுவா...பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்துல எந்த குழப்பமும் வரக்கூடாதுன்னு, கவர்மென்ட்ல கடுமையான உத்தரவு போட்ருக்காங்க. அதனால, பொங்கல் வரைக்கும் டிரான்ஸ்பர் ஆர்டரை, தற்காலிகமா நிறுத்தி வச்சிருக்காங்களாம்!''
பேசிக் கொண்டே எழுந்து சென்ற சித்ரா, சிறிது நேரத்தில் இருவருக்கும் 'கருப்பட்டி காபி' எடுத்துக் கொண்டு வந்து, அடுத்த 'டாபிக்'கை ஆரம்பித்து வைத்தாள்...
''தி.மு.க., அரசை கண்டிச்சு அ.தி.மு.க., நடத்துன ஆர்ப்பாட்டம் அவ்வளவு சூடா இல்லை...சொல்லப்போனா, கூட்டமும் பெருசா வரலையாமே?''
''இல்லைக்கா...எக்ஸ் மினிஸ்டர் வேலுமணியும், எம்.எல்.ஏ.,க்களும்நடத்துன ஆர்ப்பாட்டங்கள்ல நல்ல கூட்டம் இருந்திருக்கு...ஆனா, வார்டு செயலாளர்கள் தலைமையில நடந்த ஆர்ப்பாட்டங்களுக்கு, விரல் விட்டு எண்ணுற அளவுலதான் ஆள் வந்திருக்காங்க...இத்தனைக்கும் 100 வார்டுக்கு 50 இடங்கள்லதான் ஆர்ப்பாட்டமே நடத்திருக்காங்க. அதுக்கே கூட்டம் வரலைன்னதும், நிர்வாகிகள் அதிர்ச்சியில் இருக்காங்க!''
மித்ரா சொல்லி முடிப்பதற்குள் குறுக்கிட்ட சித்ரா, ''அதை விடு மித்து! நம்ம கலெக்டரோட வீட்டுல சந்தன மரங்களை வெட்டிக் கடத்திட்டுப் போயிட்டாங்களே...அதைப் பத்தி ஏதாவது ஸ்பெஷல் தகவல் இருக்கா?'' என்று கேட்டாள். அதற்காகவே காத்திருந்ததைப் போல, அதை விளக்க ஆரம்பித்தாள் மித்ரா...
''போன திங்கட்கிழமை நைட் சம்பவம் நடந்திருக்குக்கா... ஒரு வாரமாகியும் போலீஸ் தரப்புல ஒருத்தரையும் அரெஸ்ட் பண்ணலை...ஆனா, சந்தன மரக்கட்டைகளை பறிமுதல் செஞ்சிட்டதா சொல்றாங்க. அதெப்பிடின்னு தெரியலை.
''அதே கலெக்டர் பங்களாவுக்குப் பக்கத்துல, சாரதாம்பாள் கோவில் கல்யாண மண்டபத்துக்கு முன்னாலதான், நைட் ரவுண்டு வர்ற 20ம் நம்பர் போலீஸ் பேட்ரல் சிகப்பு வண்டி நிக்குமாம்!''
''அது உண்மைதான்க்கா...ராத்திரி 12 மணிக்கெல்லாம் அந்த வண்டியை அங்க நிறுத்தி துாங்கிர்றாங்களாம். மார்கழி மாசம் காலையில கோவிலுக்கு வர்ற நிறைய்யப்பேரு, அந்த வண்டி அங்க நிக்கிறதையும், அதுல போலீஸ்காரங்க துாங்குறதையும் பத்தி புகார் பண்ணிருக்காங்க. ஒரு நடவடிக்கையும் இல்லைன்னு, போட்டோ எடுத்தும் அனுப்பிருக்காங்க!''
''அப்போ, போலீஸ் பக்கத்துல துாங்கிட்டு இருக்கிறப்பதான் இந்த கடத்தல் நடந்திருக்கணும். கலெக்டர் பங்களாவுல இருந்த போலீஸ், வெளிய இருந்தவுங்க எல்லாரும் துாங்கிருக்காங்க!''
''மித்து! நம்ம ஆர்ட்ஸ் காலேஜ்லயும்,150 வருஷம் பழமையான ஸ்பைகஸ் மரத்தை வெட்டிக் கடத்திருக்காங்க. ஆனா இது நடந்து சில மாசமாகியிருக்கும் போலிருக்கு...அந்த மரம் என்னாச்சுன்னே தெரியலையாம். அதேமாதிரி, நல்லா முத்துன ஒரு சந்தனமரத்தையும் வெட்டிருக்காங்க!''
''என்னக்கா...கொடுமையா இருக்கு...ரேஸ்கோர்ஸ் ஏரியாவுல மரம் வெட்டுறதுக்குன்னே ஒரு 'மாபியா', ரொம்ப நாளா சுத்திட்டு இருக்கும் போலிருக்கே!''
''முழுசாக் கேளு...அந்த சந்தனமரத்துல மேல் பக்கம் இருக்குற கட்டையெல்லாம் அங்க கெடக்குதாம். ஆனா வேர்ப்பகுதியை மட்டும் காணோம்கிறாங்க...அது என்ன மாயம்னே தெரியலை. பாரஸ்ட் டிபார்ட்மென்ட்ல அதையும் விசாரிச்சிட்டுப் போயிருக்காங்க''.
சித்ரா பேசிக் கொண்டிருக்கும்போது, தனது லேப்டாப்பை திறந்த மித்ரா, அதிலிருந்த சில தகவல்களை எடுத்துக் காட்டி, அதை விளக்க ஆரம்பித்தாள்...
''அக்கா! நம்ம சிட்டிக்குள்ள சில யூனியன்கள் பேர்ல இருக்குற சொத்துக்களைக் கைப்பத்துறதுக்கு, ஏகப்பட்ட வேலை நடக்குதாம்!''
''என்ன மித்து சொல்ற...அதுக்கெல்லாம் 'ப்ராப்பர் டாக்குமென்ட்' இருக்கும்ல!''
''இருக்கு...அதெல்லாம் யார்ட்ட இருக்கு...யாரு பராமரிக்கிறா...சொத்து யாரோட பொறுப்புல இருக்குன்னு பார்த்தா, ஏகப்பட்ட விவகாரம் வெளிய வரும்கிறாங்க...இப்போ கோவை ஜில்லா பஞ்சாலை தொழிலாளர் சங்கத்துக்கு, சொந்தமான சில சொத்துக்களை, காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமானதா சித்தரிச்சு, சோஷியல் மீடியாவுல தகவல் பரப்புறாங்க. சீக்கிரமே இது கோர்ட்டுக்குப் போகப்போகுது!''
''இடம்னதும் ஞாபகம் வந்துச்சு...நம்ம கார்ப்பரேஷன்ல சர்வேயர் ஒருத்தரு, லஞ்சம் வாங்குனாலும், தப்பான விஷயத்தைச் செய்ய மாட்டேன்னு பிடிவாதமா இருக்குறாராம்!''
''என்னக்கா...ஏதாவது கனவு கண்டீங்களா?''
''மேட்டரைக் கேளு...கிழக்கு மண்டல ஆபீஸ்ல இருக்குற சர்வேயர்ட்ட, அண்ணன், தம்பிங்க மூணு பேரு, ஒரு ஸ்கெட்ச் வாங்கப் போயிருக்காங்க. அவரு 50 ஆயிரம் ரூபா லஞ்சம் கேட்ருக்காரு.
முதல் தவணையா 15 ஆயிரம் ரூபா கொடுத்துட்டாங்க. ஒரு வாரத்துல ஸ்கெட்ச் கொடுக்குறேன்னு சொன்னவரு, கொடுக்காமலே இழுத்தடிச்சிருக்கிறாரு...பொறுமையிழந்த பிரதர்ஸ், மண்டலத்து கிட்ட கம்பிளைன்ட் பண்ணீட்டாங்க!''
''சூப்பரு...அப்புறம்...?''
''போலீஸ்லயும் கம்பிளைன்ட் கொடுத்துட்டாங்க...பிரச்னை பெருசாயிருச்சு...அப்புறம் சர்வேயரைக் கூப்பிட்டு, ஜோனல் சேர்மன்- ஏ.சி., சிங்காநல்லூர் போலீஸ், பணம் கொடுத்தவுங்கன்னு, நாலு தரப்பும் பேச்சு வார்த்தை நடத்திருக்காங்க. அப்போ அந்த சர்வேயர், 'அதுல ஒரு சிக்கல் இருக்குங்க. என்னால ஸ்கெட்ச் தரமுடியாது'ன்னு சொல்லீட்டாராம். பணத்தைத் திரும்பக் கொடுக்குறதா சொல்லிருக்காராம்!''
''அடேங்கப்பா...என்ன ஒரு நேர்மை...வரவர நம்ம சிட்டியில பட்டா மாறுதல், சர்வே வேலைக்கு லஞ்சம் எகிறிட்டுப் போகுதுக்கா...வடக்கு தாலுகா ஆபீஸ்ல இருக்குற ஆதார் மையத்துல இருக்குற ஒரு சின்ன வயசுப் பையன், ஒரு நாளுக்கு மூணு நாலு பேருக்கு ஆதார் எடுத்துக் கொடுத்துட்டு, சர்வர் பழுதுன்னு மத்தவுங்களை துரத்தி விட்டுட்டு, நாள் முழுக்க புரோக்கர் வேலைதான் பார்க்குறாராம்!''
''ரெவின்யூ டிபார்ட்மென்ட் மட்டுமா... வெள்ளமடை பஞ்சாயத்துல புது வீடு கட்டுறதுக்கு அனுமதி வாங்க, வரி போட, குடிதண்ணி கனெக்சன் கொடுக்கன்னு....எதுக்கெடுத்தாலும் அநியாயமா பணம் பறிக்கிறாங்களாம்.
கார்ப்பரேஷன்ல கேக்குறதை விட அதிகமா, ஆபீசர்கள் கேக்குறாங்க. பிரசிடெண்ட்டும் சரியில்லை. கலெக்டர்ட்ட சொல்லியும் பிரயோஜனமில்லைன்னு, மெம்பர்களே புலம்புறாங்க!''
சித்ரா முடிப்பதற்குள் அதேபோல மற்றொரு மேட்டரைத் தொடர்ந்தாள் மித்ரா....
''அக்கா! மேற்கு மண்டலத்துல தண்ணி விநியோகம் பண்ற பொறுப்புல, ரொம்ப வருஷமா இருக்குற இன்ஜினியரு ஒருத்தரு, அங்க இருக்குற 40க்கும் அதிகமான பிளம்பர்கள், வாட்டர்மேன்களை பாடாப்படுத்துறார்னு பேசுனோமே...அவரை டிரான்ஸ்பர் பண்ணியும் எப்பிடியோ அதைத் தடுத்து, மறுபடியும் அங்கேயே பணியில தொடர்றாரு...பிளம்பர்கள் எல்லாம் ரத்தக்கண்ணீர் வடிக்கிறாங்க!''''அப்பிடி என்ன பண்றாராம்?''
''ஏரியாவுக்குள்ள எங்கேயாவது புதுசா வீடு கட்ட யாராவது போர்வெல் போட்டா, கார்ப்பரேஷனுக்கு 10 ஆயிரம் ரூபா வாங்கிட்டு வரச் சொல்லி, அந்த ஏரியா பிளம்பர்களை டார்ச்சர் பண்றாராம்.
கவுன்சிலர்கள், புது தண்ணி கனெக்சனுக்கு ஆர்டர் வாங்கிக் கொடுத்து, ஏதாவது காசு பார்க்கலாம்னு வேலை பார்த்தா, அந்த வீடுகள்லயும் தனியா பணம் வாங்கிட்டு வரச் சொல்றாராம். அவர் சொன்ன மாதிரி துட்டு வாங்கித்தராத மூணு பேரை வீட்டுக்கே அனுப்பீட்டாராம்!''
''என்ன மித்து...சிட்டிக்குள்ள முழுசா ஆக்கிரமிப்புகளை அகற்றிருவாங்களா?''
''அது தெரியலைக்கா...ஆனா ஆக்கிரமிப்புன்னதும் ஒரு இன்ட்ரஸ்ட்டிங் மேட்டர் ஞாபகம் வந்துச்சு...நம்ம இ.எஸ்.ஐ., ஹாஸ்பிடல் பக்கத்துல, பல கோடி ரூபா மதிப்பிருக்கிற 12 சென்ட் கவர்மென்ட் இடத்தை, ரொம்ப வருஷமா ஒருத்தரு ஆக்கிரமிச்சு கடை நடத்திட்டு இருந்தாரு...ரெண்டு வருஷத்துக்கு முன்னால, ரெவின்யூ டிபார்ட்மென்ட்காரங்க அதை எடுத்து போர்டும் வச்சிட்டாங்க!''
''இந்த கவர்மென்ட்ல, மறுபடியும் அவரே ஆக்கிரமிச்சிட்டாரா?''
''அதான் இல்லை...அவரு அதுக்காக பல வகையில முயற்சி பண்ணிருக்காரு. எதுவும் ஒர்க் அவுட் ஆகலை... ஆனா அதே ஏரியாவைச் சேர்ந்த வேறு சில ஆளுங்க, அதே இடத்தை இப்போ ஆக்கிரமிச்சிட்டாங்க. பின்னணியில ஆளும்கட்சிக்காரங்க இருப்பாங்க போலிருக்கு...உடனே பழைய ஆக்கிரமிப்பாளர், அதை அகற்றச் சொல்லி ஆவேசமா ஆபீசர்கள்ட்ட சண்டை போட்ருக்காரு!''
''இப்போ எடுத்துட்டாங்களா?''
''இன்னும் இல்லை...ஆக்கிரமிப்பு எடுக்குறதுக்கு எங்களுக்கு நீ ஆர்டர் போட வேணாம்...நாங்க எப்போ எடுக்கணுமோ எடுப்போம்னு, துரத்தி விட்டுட்டாங்களாம். அதனால என்ன பண்றதுன்னு தெரியாம, அந்த 'எக்ஸ்' ஆக்கிரமிப்பாளர் மண்டை காய்ஞ்சு, கோர்ட்டுக்குப் போலாமான்னு ரூம் போட்டு யோசிச்சிட்டு இருக்காராம்!''
மித்ரா சொல்லிக் கொண்டிருக்கும்போதே, ''மித்து! பத்தே நிமிஷம்...கிளம்பி வந்துர்றேன்!'' என்று வேகமாக தன் அறைக்குள் நுழைந்தாள் சித்ரா.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!