Load Image
Advertisement

பண மதிப்பிழப்பு தீர்ப்பு: பா.ஜ., அரசுக்கு உத்வேகம்

நம் நாட்டில், 1946, 1976 மற்றும், 2016 என மூன்று முறை, பண மதிப்பிழப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. முதல் முறை பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட போது, 1,000 மற்றும் பத்தாயிரம் ரூபாய் நோட்டுகள், புழக்கத்தில் இருந்து அகற்றப்பட்டன. ஆனாலும், உயர் மதிப்புடைய இந்த நோட்டுகள் நீக்கப்பட்டதால், சாதாரண மக்கள் பெரிய அளவில் பாதிப்பை சந்திக்கவில்லை.
இதன்பின், மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்த காலத்தில், 1976ல் பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டு, 1,000, 5,000 மற்றும் பத்தாயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து அகற்றப்பட்டன. கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையாகவே, இந்த அறிவிப்பை ரேடியோ வாயிலாக, மொரார்ஜி தேசாய் வெளியிட்டார்.

இதையடுத்தே, மூன்றாவது முறையாக, 2016 நவம்பர், 8ல், பணமதிப்பிழப்பு நடவடிக்கையை, பிரதமர் மோடி அறிவித்தார். இதன் வாயிலாக, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து அகற்றப்பட்டன. புதிதாக வேறு, 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன.
கருப்புப் பணப்புழக்கத்தை தடுப்பது, 'ஆன்லைன்' வாயிலான பண பரிமாற்றத்தை அதிகரிப்பது, முறையற்ற பொருளாதாரத்தை முறைப்படுத்துவது, போலி ரூபாய் நோட்டுகளை சந்தையில் இருந்து அகற்றுவது, தேசவிரோத சக்திகளுக்கு சட்டவிரோதமாக பணம் கிடைப்பதை தடுப்பது என்ற நோக்கத்துடன், இந்த நடவடிக்கையை பிரதமர் மோடி அறிவித்தார்.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில், 58 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை விசாரித்த, உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் இடம் பெற்ற அரசியல் சட்ட அமர்வு, 'பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மோடி அரசு அறிவித்தது செல்லும்' என, தீர்ப்பு வழங்கியுள்ளது.
அதாவது, 4:1 என்ற ரீதியில், நான்கு நீதிபதிகள், மோடி அரசு அறிவித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்றும், மற்றொரு நீதிபதி செல்லாது என்றும் தீர்ப்பு வழங்கினர். இந்த தீர்ப்பின் வாயிலாக, பிரதமர் மோடி தலைமையிலான, பா.ஜ., அரசின் நடவடிக்கைக்கு பச்சைக்கொடி காட்டப்பட்டதோடு, எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கும் வாய்ப்பூட்டு போடப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, நாட்டின் பல பகுதிகளிலும் வர்த்கம் பாதிக்கப்பட்டது, பலரின் வாழ்வாதாரங்கள் சீரழிந்தன என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. பணமதிப்பிழப்பு என்ற மிகப்பெரிய நடவடிக்கையை எடுக்க வேண்டியதன் அவசியம் மற்றும் அதை அமல்படுத்த பின்பற்றப்பட்ட முறைகள் குறித்தும், எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.
'இந்த நடவடிக்கையால், மக்கள் மத்தியில் பெருமளவு கோபம் உருவாகியுள்ளது. அது, பா.ஜ.,வின் தேர்தல் வெற்றி வாய்ப்பை பாதிக்கும். அடுத்த முறை, பா.ஜ., வெற்றி பெற முடியாது' என்றும் அரசியல்வாதிகள் பலர் புலம்பினர். ஆனால், அது பொய் என்பது, 2019 லோக்சபா தேர்தலிலும், சில மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், பா.ஜ., வெற்றி பெற்றதன் வாயிலாகவும் நிரூபணமானது.
அதேநேரத்தில், உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வு, இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளதால், அதற்கு எதிராகப் பேசி ஆதாயம் தேட முடியாத நிலைமையும், பணமதிப்பிழப்பு பிரச்னையில், இனி சட்ட ரீதியாக போராட்டம் நடத்த முடியாத நிலைமையும் எதிர்க்கட்சிகளுக்கு உருவாகி விட்டது.
தீவிரமாக ஆலோசித்து, நல்ல முறையில் திட்டமிட்டு, சில நடவடிக்கைகளை அரசு எடுத்தாலும், அவற்றில் எதிர்பாராமல் சில தவறுகள் நடந்து விடவும், எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் போகவும் வாய்ப்பு உண்டு. அந்த அடிப்படையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கையால், கறுப்பு பணத்தை பெருமளவு மத்திய அரசு மீட்டதா? அல்லது இதன் வாயிலாக ஊழல் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதா? என்ற கேள்விகள் எழுப்பினால், அதற்கு தீர்க்கமான விடை கிடைக்காது. அந்தக் கோணத்தில் பார்க்கையில், மத்திய பா.ஜ., அரசுக்கு, இது ஒரு பாடமாக அமைந்து விட்டது.
ஆனாலும், பண மதிப்பிழப்பு நடவடிக்கை விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, வரிசையாக பல மாநிலங்களில் தேர்தலை சந்திக்கவுள்ள, பா.ஜ.,வுக்கு உத்வேகம் தருவதாகவே அமைந்துள்ளது என்பதில் சந்தேகமில்லை.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement