வெண்புள்ளி(Vitiligo) என்பது நோயல்ல அது ஒரு நிறமிக் குறைபாடுதான்
தோலுக்கு நிறத்தைக் கொடுக்கும் மெலனின் என்ற நிறமி தோலில் எங்கெல்லாம் குறகைிறதோ அங்கெல்லாம் திட்டுத்திட்டாக வெண்புள்ளி ஏற்படும்
வெண்புள்ளி என்றாலும் இது புள்ளியைப் போல சிறிதாக இருப்பதில்லை நன்றாக தெரியுமளவு விரிவாகவே இருக்கும்
கை கால் முகம் என்று உடலின் எந்த பாகத்திலும் எந்த வயதினருக்கும் வரலாம் இப்போதெல்லாம் ஆரம்ப நிலையிலேயே கவனித்து சிகிச்சை எடுத்துக் கொண்டால் அதிகம் பரவாமல் கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம்.இந்த நிறமிக் குறைபாடால் எவ்வித உடல் உபாதைகளும் ஏற்படாது, ஆனால் முகம் சுளிக்க பார்ப்பவர்களாலும், கைகுலுக்க தயங்குபவர்களாலும்,தொற்றிக்கொள்ளுமோ என்று விலகுபவர்களாலும், கேலி பேசுபவர்களாலும் விநோதமாக பார்ப்பவர்களாலும் ஏற்படும் வலிதான் மனதை அதிகம் காயப்படுத்தும்.
அவர்களும் நம்மில் ஒருவர்தான் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்
இந்த விழிப்புணர்வை ஏற்படுத்திவருபவர்தான் வின்னி ஹார்லோ என்ற அமெரிக்க மாடல் அழகி
இன்றைய பாஷன் உலகின் முன்னனி மாடல்களில் ஒருவராக வலம்வருபவரும், பல்வேறு ‛பிராண்டட்' உடைகளின் துாதராக இருப்பவருமான வின்னிக்கு சிறு வயதிலேயே வெண்புள்ளி ஏற்பட்டுவிட்டது.அவரை வரிக்குதிரை என்றும் வேற்றுலகவாசி என்றும் கேலி கிண்டல் செய்தனர், விளையாட்டில் தள்ளிவைத்தனர் இதன் காரணமாக பள்ளி செல்வதும் தடைபட்டது.எல்லா கதவுகளும் அடைபட்டது போல வேதனைப்பட்டவர் ஒரு கட்டத்தில் தற்கொலை செய்து கொள்ளலாமா? என்றுகூட ஆலோசித்தார்.
சாவது என்பது முடிவாகிவிட்டது அதற்கு முன் கொஞ்சம் போராடிப்பார்ப்போமே என்று தனது பலம் பலவீனத்தை எடைபோட்டார்.
சிறந்த உடலமைப்பு கொண்ட தான் ஏன் மாடலிங் செய்யக்கூடாது என்று எண்ணினார், தோழிகள் உறவுகளிடம் சொன்ன போது ,இந்த முகத்தை வைத்துக் கொண்டு எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறாய் என்று கிண்டல் செய்தனர், ஆனால் அந்த கிண்டலை எல்லாம் புறந்தள்ளிவிட்டு தனக்கு ஒரு வாய்ப்பு வழங்கும்படி பல மாடல் ஏஜன்சிகளின் படிகளில் ஏறி இறங்கினார்.கிட்டத்தட்ட எல்லோருமே‛நோ' சொன்ன நிலையில் பிரபலமான மாடல் போட்டோகிராபரான நிக்நைட்டியின் கண்களில் வின்னி பட்டார்.
வின்னியிடம் வெண்புள்ளியைத்தாண்டி ஒரு ஈர்ப்பு இருக்கிறது அது கண்களிலா உதடுகளிலா உடல் அமைப்பிலா என்பதை பார்த்துவிடுவது என்று தனது திறமையை எல்லாம் காண்பித்து வின்னியை போட்டோ ஷூட் செய்தார் படங்களை பிரிண்ட் செய்து பார்த்த போது ‛வாவ்' சொல்லக்கூடிய அழகுடன் வின்னி வெளிப்பட்டார்
2014 ம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற நெக்ஸ்ட் டாப் என்ற சர்வதேச அளவிலான மாடல் அழகிப்போட்டியில் கலந்து கொண்டார் போட்டியில் இறுதி வரை வந்து கடைசி கட்டத்தில் தோற்றுப்போனார் ஆனால் உண்மையில் அன்றுதான் எல்லோரது மனதையும் வென்றார், போட்டியில் வெற்றி பெற்றவரை விட தோற்ற வின்னியை ஊடகங்கள் சூழ்ந்து கொண்டன அவரை பலவிதங்களில் படமெடுத்து போட்டி போட்டு பேட்டிஎடுத்து வெளியிட்டன
அதன்பிறகு வின்னிக்கு ஏறுமுகம்தான் சென்ற போட்டிகளில் எல்லாம் வென்று வந்தார் பிரபல ஆடை நிறுவனங்களின் துாதுவரானார் பணமும் புகழும் கொட்டியது ஒரு முறையாவது வின்னியின் கைபிடித்து குலுக்கவாய்ப்பு கிடைக்காதா? கூட நின்று ஒரு படம் எடுத்துக் கொள்ளமுடியுமா? என்று ரசிகர்களும் பிரபலங்களும் அவரை சுற்றி சுற்றி வந்தனர்.
தனக்கு கிடைத்த இந்த பாப்புலாரிட்டியை வெண்புள்ளிக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு வின்னி பயன்படுத்திக் கொண்டதுதான் பெரிய விஷயம்
தற்போது 28 வயதாகும் வின்னிக்கு திருமணமாகிவிட்டது, உலகின் சிறந்த மாடல் என்று கொடுகப்பட்ட விருதுகளும் வீடு நிறைய காணப்படுகிறது , இவரை மாடலாக வைத்து படம் எடுக்க பல ஏஜன்சிகள் தேதி கேட்டு காத்திருக்கின்றனர் ஆனால் மாடலிங் செய்வதை விட இப்போது எனக்கு முக்கிய வேலை இருக்கிறது என்று வெண்புள்ளிக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டு அவர்களின் நம்பிக்கை குரலாக வலம் வருகிறார் வின்னி
அந்தக்குரலை நாமும் வழிமொழியலாம்.
-எல்.முருகராஜ்.
நல்ல பதிவு