சமீபத்தில், சென்னையில் ஒரு கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக அமைச்சர் ஒருவர், 'பிரிட்டிஷார் வந்து தான், இந்தியர்களுக்கு கல்வி கொடுத்தார்கள்' என்ற பொருள்பட பேசியிருந்தார்.
இந்த பொய் பிரசாரத்தை திராவிட இயக்கம் அதன் தொடக்க காலத்தில் இருந்தே செய்து வருகிறது.
ஏன் பொய் என்கிறோம்? என்ன ஆதாரம் இருக்கிறது?
திராவிட இயக்கம் போற்றி புகழும் பிரிட்டிஷார், தங்கள் காலனிய ஆட்சியின் தொடக்க காலத்தில் இங்குள்ள நிலவரத்தை பற்றி பல விரிவான ஆய்வுகளை நடத்தினர். அதில் ஒரு பகுதியாக, இங்கு நிலவிய கல்வி சூழல் பற்றியும் ஆய்வு நடந்தது. அந்த ஆய்வறிக்கைகளை இன்றும் பிரிட்டிஷ் நூலகத்தில் காணலாம்.
'தி ப்யூடிபுல் ட்ரீ'
அவற்றில் உள்ள தகவல்களை தொகுத்து, காந்தியவாதியும் வரலாற்று ஆய்வாளருமான தரம்பால், 1983ல் 'தி ப்யூடிபுல் ட்ரீ' என்ற நுாலை ஆங்கிலத்தில் வெளியிட்டார்.
தமிழில் பி.ஆர்.மகாதேவனால் மொழியாக்கப்பட்டு 'அழகிய மரம்' என்ற தலைப்பில், 'கிழக்கு பதிப்பகம்' 2020ல் அந்த நூலை வெளியிட்டது.
அதிலிருந்து சில தகவல்களை பார்ப்போம்:
l பஞ்சாப் மாகாணத்தின் பிரிட்டிஷ் ஆளுனரின் கணக்கெடுப்புப்படி இங்கு ஒரு லட்சம் பள்ளிகளுக்கு மேல் செயல்பட்டு வந்தன
l அனைத்து மாணவர்களுக்கும் ஐந்தில் இருந்து ஏழு ஆண்டுகள் கல்வி தரப்பட்டது
l பெரும்பாலும் கல்வி இலவசமாகவே தரப்பட்டது
l பெண்கள் சொற்ப எண்ணிக்கையில் மட்டுமே பள்ளியில் கல்வி பயின்றார்கள்.
அதுவும் ஒரு பொய்
'அதெல்லாம் சரி, இங்கு 2,000 ஆண்டுகளாக நான்காம் வர்ணத்தினருக்கும் தலித்துகளுக்கும் கல்வி மறுக்கப்பட்டது. பிரிட்டிஷார் தான் அவர்களுக்கு பள்ளியில் சேர இடம்கொடுத்தார்கள்' என்று, இந்த கட்டத்தில் திராவிட இயக்கத்தார் ஒரு வாதத்தை முன்வைப்பார்கள். அதுவும் ஒரு பொய்!
அதே 'அழகிய மரம்' நுாலில் இருந்து மேலும் தகவல்களை பார்ப்போம்:
ஆந்திரா, கேரளா, கர்நாடகா, ஒடிசா உள்ளிட்ட மதராஸ் மாகாணத்தைச் சேர்ந்த பகுதிகளின் பிரிட்டிஷ் கலெக்டர்கள் லண்டனுக்கு அனுப்பிய ஆய்வு அறிக்கைகளில் அனைத்து சாதியினரும் பள்ளிகளில் கல்வி கற்றார்கள் என்பது உறுதியாகிறது.
அதாவது, பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள் மட்டுமல்லாது பிற சமூகத்தினரும் பள்ளியில் கல்வி கற்றார்கள். இதை சொல்வது பிரிட்டிஷார்; நாம் அல்ல.
தமிழகத்தில், நமது பாரம்பரிய பள்ளிகளில் கல்வி கற்றவர்களில் பிராமண, சத்திரிய, வைசிய சமூகங்களை சேர்ந்த மாணவர்களின் சதவீதம்:
தென் ஆற்காடு, 13 சதவீதம்; மதராஸ்பட்டினம், 23 சதவீதம்; சேலம் 10 சதவீதம்; திருநெல்வேலி, 30 சதவீதம்.
பள்ளி சேர்க்கை
அப்போது, இந்த பள்ளிகளில் மீதம் 70 சதவீதத்திற்கும் மேல் படித்தவர்கள் யார்? சிந்தித்து பாருங்கள்.
அதேபோல, மலபார் பகுதி பள்ளிகளில் முஸ்லிம்கள், 27 சதவீதம்; சூத்திரர்கள் மற்றும் தலித்துகள் 54 சதவீதம்.
கர்நாடகாவில் உள்ள பெல்லாரி பகுதி பள்ளிகளில், சூத்திரர்கள் மற்றும் தலித்துகள் 63 சதவீதம். ஒடிசாவில் உள்ள கஞ்சம்பகுதி பள்ளிகளில், சூத்திரர்கள் மற்றும் தலித்துகள், 63 சதவீதம். இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். மேற்படி சதவீதங்கள் என்ன தெரிவிக்கின்றன?
ஒன்று, அந்தந்த பகுதியில் இருந்த சாதி ஜனத்தொகைக்கு ஏற்ப தான் பள்ளி சேர்க்கையும் இருந்துள்ளது.
இரண்டு, எந்த வர்ணத்தினருக்கும், எந்த ஜாதியினருக்கும், எந்த மதத்தினருக்கும் இங்கு கல்வி மறுக்கப்படவில்லை.
அன்று ஐரோப்பாவில் இருந்ததைவிட, சிறப்பான கல்வி முறை இங்கு இருந்ததை பிரிட்டிஷாரின் ஆவணங்கள் ஒப்புக்கொள்கின்றன.
இங்கு அனைத்து பிரிவினருக்கும், ஐந்திலிருந்து ஏழு ஆண்டுகள் முறையான கல்வி கிடைத்துவந்த அதே நேரத்தில், இங்கிலாந்தில் இரண்டு ஆண்டுகள் கூட கல்வி கிடைக்கவில்லை.
அதுவும் வெறுமே ஞாயிற்றுக் கிழமை சர்ச்சில், பைபிளை படித்துக் காட்டுவதை புரிந்துகொள்ளும் அளவுக்கு மட்டும் தான் கல்வி கொடுக்கப்பட்டது.
சிறப்பான கல்வி
பிரிடிட்ஷ் ஆசிரியர்கள், பள்ளிக்கு மது அருந்திவிட்டு வருவார்கள் என்றும்; ஆண்டில் பெரும்பாலான நாட்கள் விடுமுறையாகவே கழியும் என்றும் அதிகபட்சமாக பல பள்ளிகளில் நான்கு ஐந்து மாணவர்கள் தான் இருப்பார்கள் என்றெல்லாம், பிரிட்டிஷாரே ஆவணப்படுத்தி இருக்கிறார்கள்.
ஆக, நம் நாட்டில், அனைவருக்கும் முறையான கல்வி என்பதையும் தாண்டி அன்றைய சூழலுக்கு ஏற்ப சிறப்பான கல்வியும் அளிக்கப்பட்டு வந்தது.
அப்படி இருந்த சிறந்த கல்வி அமைப்பு எப்படி அழித்தொழிக்கப்பட்டது என்பதையும் பிரிட்டிஷ் ஆவணங்களே அழுத்தமாக முன்வைக்கின்றன. ஆனால், அது பற்றியது அல்ல இந்த கட்டுரை.
இன்று பிரிடிட்ஷாரும், ஐரோப்பியரும், அமெரிக்கரும் உலகில் கல்வி, மருத்துவம், தொழில்நுட்பம், வர்த்தகம், வானியல், அரசியல் என அனைத்திலும் முன்னணியில் இருக்கிறார்கள்.
பாரதமே முன்னணியில்
ஆனால், அவர்கள் நம்மை அடிமைப்படுத்துவதற்கு முன், பாரதமே உலகில் முன்னணியில் இருந்திருக்கிறது.
நாம், நம் பழங்காலத்தில் இருந்து, நவீன காலத்துக்கு இயல்பாக முன்னேறி வந்திருந்தால், இன்று போல் மேலை நாடுகளுக்கு அடிமைகளாக பின்தங்கி போயிருக்கமாட்டோம். அந்த நாடுகள் இன்று இருக்கும் இடத்தில் நாம் இருந்திருப்போம்.
தரம்பாலின், 'அழகிய மரம்' மட்டுமல்லாது இன்னும் பல அருமையான ஆய்வு நுால்கள் உள்ளன.
அவற்றில், நமக்கு தொடர்ந்து ஊட்டப்படும் மேலை நாட்டு மேன்மை எனும் நஞ்சுக்கு மருந்து உள்ளது. இந்த நுால்கள் தமிழகத்தின் பள்ளி, கல்லூரிகளில் கட்டாய பாடமாக ஆக்கப்பட வேண்டும்.
-டி.எம்.முகுந்தன் -
ஆய்வாளர், சமூக சேவகர்
நம்மை ஆண்டதன் மூலம் ஒரு இனத்தின் பெருமையை, அடையாளத்தை ஆங்கிலேயர்கள் எப்படி அழித்துவிட்டார்கள் என்பதை நினைக்கும்போது மிகவும் வருத்தமும் கோபமும் வருகிறது. மீண்டும் நமது பழம் பெருமையை உலகுக்கு உணர்த்த வேண்டும்.