கதகதப்பின் மையம்!
பாலுாட்டிகளுக்கு உடலின் வெப்பம் எப்போதும் 98.6 டிகிரி பாரன்ஹீட் என்ற அளவிலேயே இருக்க மூளையின் மையப்பகுதியிலுள்ள, 'இ.பி.3' என்ற மூளை செல்களின் தொகுப்புதான் காரணம் என்பதை ஜப்பானிய விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர்.
'சயின்ஸ் அட்வான்சஸ்' இதழில் வெளியான இந்த கண்டுபிடிப்பு, காய்ச்சல் மரணம் முதல் உபரி உடல் கொழுப்பைக் கரைப்பது வரை பல நோய்களைத் தவிர்க்க உதவும்.
'ட்ரோன்' யுகம் பறக்கிறது!
நீண்ட வெள்ளோட்டத்திலேயே இருந்த 'ட்ரோன் டெலிவரி' திட்டத்தை, அமெரிக்காவின் இரண்டு மாநிலங்களில், 'ரெகுலர் சர்வீசாக' துவங்கியிருக்கிறது அமேசான்.
சில குறிப்பிட்ட வகைப் பொருட்களுக்கு மட்டும், 60 நிமிடத்திற்குள் கொண்டு சேர்க்கும் திட்டத்தை அமேசான் அறிவித்துள்ளது. அந்தப் பொருட்கள் 2.260 கிலோ கிராம் எடைக்குள் இருந்தால், அவற்றை அதிவேக அமேசானின் ட்ரோன்கள், குடோனிலிருந்து முகவரிதாரரின் வீட்டுக் கதவின் முன் கொண்டு போய் போட்டுவிட்டுத் திரும்பும்.
நீர்வளத்தின் மேல் ஒரு கண்
செவ்வாய், நிலா என்று விண்வெளிக் கோள் ஆராய்ச்சிகளிலேயே அதிக கவனம் செலுத்திவந்த அமெரிக்காவின் 'நாசா' இப்போது பூமியை மீண்டும் கண்டுகொள்ள துவங்கியுள்ளது. உலக நீர் நிலைகளைப் பற்றி, விரிவாகவும், ஆழமாகவும் ஆராய்ச்சி செய்வதற்காக 'ஸ்வோட்' என்ற செயற்கைக்கோளை நாசா விண்ணில் ஏவியது.
அந்த செயற்கைக்கோள், தன் சூரிய மின் பலகைகளையும், ஆண்டெனாக்களையும் வெற்றிகரமாக விரித்து, செயல்படத் துவங்கியுள்ளது. இனி எண்ணெய் வளத்தைவிட, தண்ணீரின் மதிப்பு தாறுமாறாக உயரப்போகிறது.
பாதுகாப்பற்ற செயற்கை நுண்ணறிவு
கட்டுரைகள், ஓவியங்களை படைப்பதில், மனிதர்களுக்கு உதவும் செயற்கை நுண்ணறிவு மென்பொருட்கள் வந்துவிட்டன. அண்மையில், ஓப்பன் ஏ.ஐ., அமைப்பு வெளியிட்டுள்ள, 'கோடெக்ஸ்' என்ற செயற்கை நுண்ணறிவு மென்பொருள் வந்தது.
இது, 'பைத்தான், ஜாவா ஸ்கிரிப்ட்' போன்ற மொழிகளில் நிரல்களை எழுதுகிறது. ஆம், மென்பொறியாளர்கள், கோடெக்சைப் பயன்படுத்தி நிரல்களை எழுதத் துவங்கிவிட்டனர். ஆனால், கோடெக்ஸ் எழுதும் நிரல்கள், 'ஹேக்கர்'களின் தாக்குதலுக்கு ஆளாகக்கூடிய வகையில் பாதுகாப்பற்றவை என, அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
வயிற்றை கெடுக்கும் வேதிப்பொருள்
பாத்திரங்களை அரை மணி நேரத்தில் கழுவி காயவைத்துத் தரும் 'டிஷ் வாஷர்கள்' இப்போது பரவலாகி வருகின்றன. ஆனால், டிஷ்வாஷருக்கான சோப்புத்துாள்களில் உள்ள சில வேதிப் பொருட்கள், பாத்திரத்தில் படிகின்றன.
அவை, பிறகு சாப்பாட்டில் கலந்து, வயிற்றுக்கு கெடுதல் உண்டாக்கக்கூடும் என சுவிட்சர்லாந்திலுள்ள ஜூரிச் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். குறிப்பாக பாத்திர பிசுக்குகளை நீக்கும் 'ஆல்கஹால் எதாக்சைலேட்' என்ற வேதிப்பொருள் வயிற்றில் நல்ல கிருமிகளை கொல்லக்கூடும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!