Load Image
Advertisement

குப்பை கிடங்கு ஆபீசர்கள் கூண்டோடு மாற்றம்...: கோடிகளை அள்ள புதிதாக ஒரு திட்டம்!

தலையில் ஸ்கார்ப், கையில் கிளவுஸ், காலில் சாக்ஸ், மேலே ஸ்வெட்டர் சகிதமாக, ரேஸ்கோர்ஸ்க்கு 'வாக்கிங்' வந்திருந்தாள் மித்ரா.

சித்ராவுக்கும் ஒரு தலைக்குல்லா எடுத்து வந்திருந்தாள். அவளைப் பார்த்து ஆச்சரியப்பட்ட சித்ரா, ''என்ன மித்து! இது புது வேஷமா இருக்கு'' என்று கேட்க, ''நம்ம ஊரு கிளைமேட் அவ்ளோ மோசமாயிருக்கு. இதெல்லாம் போட்டுக்கிட்டா சேப்டி'' என்று தலைக்குல்லாவைக் கொடுத்தாள்.

அதை வாங்கி அணிந்து கொண்ட சித்ரா, பேசிக் கொண்டே நடக்க ஆரம்பித்தாள். காலையில் ரோட்டை சுத்தம் செய்து கொண்டிருந்த துாய்மைப் பணியாளர்களைத் பார்த்து விட்டு, மித்ராவிடம் கேட்டாள்...

''நம்ம கிட்ட இருக்கு. இதெல்லாம் போட்டுக்கிறோம். இவுங்கள்லாம் என்ன பண்ணுவாங்க...நமக்கு முன்னாலயே காலையிலயே, குளிர்லயும் பனியிலயும் டூட்டிக்கு வந்துர்றாங்க...இவுங்களுக்கு கலெக்டர் 'பிக்ஸ்' பண்ணுன சம்பளத்தைக் கூடக் கொடுக்காம, இப்பிடி கொடுமை பண்றாங்க...இதான் இவுங்களோட சமூக நீதி போலிருக்கு!''

சித்ரா முடிக்கும்முன், அதே கோபத்துடன் தொடர்ந்தாள் மித்ரா...

''உண்மைதான்க்கா... இப்பதான் ஒரு வழியா கான்ட்ராக்ட் துாய்மைப் பணியாளர்களுக்கு, 648 ரூபாய் சம்பளத்தைக் கூட்டுறதுக்கு தீர்மானம் போட்ருக்காங்க...ஆனா இந்த சம்பளத்தை கான்ட்ராக்ட்காரங்க கொடுப்பாங்களாங்கிறது சந்தேகம்தான்.

ஏற்கனவே சொன்னதுல 50 பர்சன்டேஜ்தான் சம்பளம் கொடுக்குறதா கிழக்கு மண்டலத் தலைவர் இளஞ்செல்வியே, பகிரங்கமா குற்றம்சாட்டுனாங்க!''

''அவுங்க பேசி என்ன பிரயோஜனம்....கார்ப்பரேஷன் தரப்புல இருந்து ஒரு பதிலும் இல்லைன்னு யூனியன்காரங்க புலம்புறாங்களே...கலெக்டர் நிர்ணயிச்ச 721 ரூபாய் தினக்கூலியைக் கொடுக்கச் சொல்லி, மறுபடியும் கோர்ட்டுக்குப் போறதுக்கு ஒரு சில யூனியன்ல முயற்சி எடுத்துட்டு இருக்காங்க!''

''இந்த தொழிலாளிங்களுக்கு சம்பளம் கொடுக்க மட்டும் கசக்குது...ஆனா போன கவர்மென்ட்ல எப்பிடி குப்பையில காசு அள்ளுனாங்களோ, அதே மாதிரி இப்பவும் அள்ள ஆரம்பிச்சிட்டாங்க!''

''என்ன மித்து சொல்ற...மேயர் குப்பைக் கிடங்கை ஆய்வு பண்ணப் போய், அதிகாரிகளோட சண்டை போட்ட வீடியோ, அவுங்க வீட்டுக்காரர் பேசுன ஆடியோ எல்லாம் வெளியான பிறகு, குப்பைக் கிடங்குல இருந்த மொத்த அதிகாரிகளையும் மாத்தீட்டாங்களே!''

சித்ரா முடிக்கும் முன், அதற்கு விளக்கம் அளிக்க ஆரம்பித்தாள் மித்ரா...

''உண்மைதான்...அங்க இருந்த மண்டல சுகாதார அலுவலர் ராமுவை, மறுபடியும் எஸ்.ஐ.,யா போட்டுட்டாங்க. குப்பைக் கிடங்குக்கு பொறுப்பா இருந்த திருமாலை மறுபடியும் மண்டலத்துக்கே மாத்தீட்டாங்க.

ஜே.இ.,ராஜேஷையும் அவர் ஏற்கனவே இருந்த வடவள்ளிக்கே அனுப்பீட்டாங்க. அ.தி.மு.க., ஆட்சியில 10 வருஷமா அங்க குப்பையில 'அள்ளிட்டு' இருந்தவரையே, திரும்பவும் அங்க போட்ருக்காங்க...ஆக, ஆபீசர்களுக்கு செம்ம ஜாலிதான்!''

''குப்பையில ஊழல் நடந்துச்சுன்னு வாய் கிழியக் கத்துனாங்க. இப்போ ஊழல் பண்ணுன அதே ஆபீசரைப் போட்டா, அதே மாதிரி எங்களுக்கும் பண்ணிக் கொடுங்கன்னுதானே அர்த்தமாகுது,''

''அது மட்டுமில்லைக்கா...போன கவர்மென்ட் இருந்தப்போ, 'பயோ மைனிங்'ல குப்பைய அழிச்சதா கணக்குக் காட்டுன மாதிரி, இப்பவும் ஆறு லட்சம் மெட்ரிக் டன் குப்பையை, 'பயோ மைனிங்'ல அழிக்க, 'ஸ்வச் பாரத்'ல பல கோடி ரூபா நிதி கேக்குறதுக்கு, கோப்பு தயார் பண்ணிட்டு இருக்காங்க!''

''குப்பை மேட்டரை விடு...தெருநாய்களுக்கு கருத்தடை ஆபரேஷன் பண்றதுக்கு 700 ரூபாய், கார்ப்பரேஷன்ல கொடுக்குறாங்களே...அதையும் ஒழுங்கா பண்ணாம பொய்க் கணக்கு எழுதுறாங்களாம். அதனாலதான், தெரு நாய்கள் எல்லாம் திரும்பத் திரும்ப ஏகப்பட்ட குட்டி போடுதுன்னு, கவுன்சிலர்கள் கொந்தளிக்கிறாங்க!''

''இவுங்க இப்பிடியெல்லாம் கொள்ளை அடிக்கிறதுக்கு, ஒண்ணுமே இல்லாத வ.உ.சி.,சிறுவர் பூங்காவுக்கு, 10 ரூபாய் டிக்கெட் போட்டு தீர்மானத்தை நிறைவேத்திருக்காங்க.

பூங்காக்கள் குழுத் தலைவர் மாலதி எதிர்ப்பு தெரிவிச்சும், கவுன்சிலர்கள் அஞ்சு ரூபாயா ஆக்கலாம்னு அஞ்சு விரலைக் காட்டுனதை, ஆதரவுக்குக் கை துாக்குனதா கணக்குப் பண்ணி, 10 ரூபாயா ஏத்திட்டாங்க...எல்லாம் ஆபீசர்களோட சேட்டை!''

கலெக்டரின் பங்களா பெயர்ப்பலகையைப் பார்த்த மித்ரா, வேறு 'டாபிக்'கிற்குத் தாவினாள்...

''அக்கா! நம்ம ஊரு பெரிய ஆபீசருக்கு டிரான்ஸ்பர் 'கன்பார்ம்' ஆயிருச்சாம். ஆனா, ஏதாவது நல்ல 'போஸ்ட்டிங்' வாங்கணும்னு தீவிரமா முயற்சி பண்ணிட்டு இருக்காராம். ஒரு வாரம்தான் இருப்போம்கிறதால, பெரிய ஆபீசர் ரொம்பவே 'அப்செட்'டா இருக்குற மாதிரித் தெரியுது!''

ஸ்கீம் ரோட்டைக் கடக்கும்போது, குறுக்கே வந்த ஆட்டோவைப் பார்த்ததும் சித்ரா, அடுத்த மேட்டரை ஆரம்பித்தாள்...

''மித்து! பொங்கலுக்குக் கொடுக்குற வேஷ்டி, சேலை பண்டல்களை, அந்தந்த தாலுகா ஆபீஸ்கள்ல இருந்து, ரேஷன் கடைக்கு அனுப்புற பொறுப்பை, வி.ஏ.ஓ.,க்கள்ட்ட கொடுத்திருக்காங்க...

அவுங்க அஞ்சு ஆளுகளை ரெடி பண்ணி, ஆட்டோக்களையும் பிடிச்சு, ஒவ்வொரு ரேஷன் கடைக்கும் அனுப்பிருக்காங்க...அந்த ஆளுகளோட சம்பளம், ஆட்டோ சார்ஜை ரேஷன் கடைக்காரங்கள்ட்ட கேட்ருக்காங்க!''

''ஏன் இதுக்கெல்லாம் கவர்மென்ட்ல காசு கொடுக்க மாட்டாங்களா?''

''அவுங்க கொடுத்ததை இவுங்க லவட்டிருப்பாங்க. ஆனா சில ரேஷன் கடைக்காரங்க, ஆள் கூலி, ஆட்டோ சார்ஜ் தரமுடியாதுன்னு சொல்லீட்டாங்களாம்...தகராறு நடந்திருக்கு.

உடனே காசு கொடுக்காத ரேஷன் கடைக்காரங்க பட்டியலை எடுத்து, சிவில் சப்ளை தாசில்தார்ட்ட கொடுத்துட்டாங்களாம். அவுங்களை இனிமே, 'வச்சு' செய்வாங்கன்னு வி.ஏ.ஓ.,க்கள் பேசிக்கிறாங்க!''

''வி.ஏ.ஓ.,ன்னதும் ஞாபகம் வந்துச்சுக்கா...பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள கிருஷ்ணராயபுரம் வி.ஏ.ஓ., போஸ்ட்டிங் ரொம்ப நாளா காலியா இருக்கு. அதனால அந்த ஏரியா மக்கள் சாதாரண சர்ட்டிபிகேட்டுக்கே மாசக்கணக்குல காத்துக் கிடக்குறாங்க!''

''அன்னுார் டவுன் பஞ்சாயத்து ஆபீசர் போஸ்ட்டிங் ரொம்ப நாளா காலியா இருந்துச்சு. அடிஷனல் சார்ஜ்ல போட்ட அதிகாரி, வசூல் பின்னி பெடலெடுத்துட்டாராம்.கலெக்டருக்கு ஏகப்பட்ட கம்பிளைன்ட் போயும், இன்னமும் அவரை மாத்தலையாம். புது ஆபீசர் போடுறதுக்குள்ள இங்க வாங்குன காசை வச்சு, அவர் புது பங்களாவே வாங்கிருவார்னு பேசிக்கிறாங்க!''

''இப்பிடித்தான் நம்ம மாவட்டத்துல, ஹெல்த் டிபார்ட்மென்ட்ல ஏகப்பட்ட போஸ்ட்டிங் காலியா இருக்கு. அதுல பல் டாக்டர்களை எடுக்க, இன்டர்வியூ நடத்தி பல வாரமாயிருச்சு. ஆனா முடிவை அறிவிக்காம, கிணத்துல போட்ட கல்லாட்டம் இருக்கு...யார்ட்ட கேட்டாலும் ஒழுங்கா பதில் வராததால, அதுல கலந்துக்கிட்ட சில டாக்டர்ஸ் கேஸ் போட முடிவு பண்ணிருக்காங்க. பேரம் நடக்குறதுதான் காரணம்னு ஒரு பேச்சு ஓடுது!''

''காரமடையில பாரஸ்ட் ஏரியாவுல, இதே மாதிரி ஒரு பேரம் நடக்குது மித்து! அங்க பில்லுார் டேம், பாரஸ்ட் ஏரியாவை ஒட்டி இருக்குற வெள்ளியங்காடு, தோலம்பாளையம் கிராமங்கள்ல, காட்டை ஒட்டியிருக்குற பட்டா லேண்ட்ல, கம்பியில சுருக்கு வச்சு, மான்களைப் பிடிச்சு அடிச்சு, கறியை விக்கிறாங்க. பழங்குடியினத்தைச் சேர்ந்த வயசானவுங்கள்ட்ட கொடுத்து அனுப்புறாங்க!''

''அடப்பாவிகளா...!''

''இவுங்க விக்கிற தொகையில, ரொம்ப ரொம்ப சொற்பமான காசை அவுங்களுக்குக் கொடுக்குறாங்க. ஆனா பாரஸ்ட்காரங்கள்ட்ட இவுங்க மாட்டுனா, அவுங்களை ஜெயில்ல போட முடியுறதில்லை.

கேசும் போட முடியலை...அபராதம் கட்டச் சொன்னாலும் காசு இல்லைன்னு சொல்றாங்களாம். ஆனா உண்மையான 'அக்யூஸ்ட்'கள் யாருன்னு தெரிஞ்சே, பிடிக்காம, பாரஸ்ட் ஆளுங்க பேரம் பேசுறாங்கன்னு ஒரு தகவல்!''

''எய்தவனிருக்க எல்லா இடத்துலயும், அம்புகள்தான் அடிவாங்குது...நம்ம டிஸ்ட்ரிக்ட்ல வடக்கு டாஸ்மாக் மாவட்டத்துல, 160 டாஸ்மாக் கடைகள்ல, புதுசா பாட்டிலுக்கு ரெண்டு ரூபா கொடுக்கணும்னு ஒரு உத்தரவு வந்திருக்காம்!''

மித்ரா சொல்லி முடிப்பதற்குள் குறுக்கிட்டுக் கேட்டாள் சித்ரா...

''அதான் ஒரு 'பார்'க்கு, கவர்மென்ட்டுக்கு கட்டுற 'டிடி' அமவுண்டுக்கு ஈக்குவலா, கட்சி நிதின்னு காசு வாங்குறாங்களே...அதுலயும் 70க்கும் மேல 'பார்'களை இல்லீகலா நடத்துறதுக்கு, கடைசியாப் போன 'டிடி' அமவுண்ட்டையும் அதோட பாதித் தொகையையும் சேர்த்து வாங்குறாங்களாமே!''

''ஆமாக்கா! இதுவரைக்கும் 'பார்'கள்ல மட்டும்தான் வசூல் நடந்துச்சு. இப்போ கடையில விக்கிற ஒவ்வொரு பாட்டிலுக்கும், ரெண்டு ரூபா தரணுமாம். அதாவது மாசத்துல 11, 21, 31 அல்லது 1ன்னு மூணு நாளு வசூலுக்கு வருவாங்களாம். அப்போ 10 நாள்ல வித்த பாட்டிலைக் கணக்குப் பண்ணி காசு கொடுக்கணுமாம். சாதாரணமா ஒரு கடையில 10 நாள்ல 15 ஆயிரம் பாட்டில் வித்தா, 30 ஆயிரம் கொடுக்கணும்!''

''என்ன மித்து...எது மாதிரியும் இல்லாத புது மாதிரி வசூலா இருக்கு....இதெல்லாம் யாரு வசூல் பண்றாங்க... யாரு இவுங்களை அனுப்புறாங்க?''

''அது தெரியலைக்கா...சஞ்சீவின்னு ஒருத்தரோட நம்பர்ல இருந்து, கடை சூபர்வைசருக்கு போன் வருதாம். அதுல திலக்ன்னு ஒருத்தரு, 'ஈஸ்வரமூர்த்தி ஆபீஸ்ல இருந்து பேசுறோம்'னு பேசி, ஆளை அனுப்புறதா சொல்றாராம்.

அப்புறம் நாலு பேரு வந்து, இந்த ஸ்கீமை கடை கடையா விளக்குறாங்களாம். இதைப் பத்தி நேத்து கலெக்டர்ட்ட சில பேரு புகார் பண்ணிருக்காங்க. அவர் என்ன பண்ணப் போறாரு பாவம்!''

''நல்ல திராவிட மாடல்!'' என்று சிரித்த சித்ரா, 'மித்து! ஒரு ஸ்மால் ஜாக்கிங் எடுப்போமா...!' என்று கேட்க, இருவரும் பேச்சை நிறுத்தி விட்டு, மெதுவாக ஓட்டத்தை ஆரம்பித்தார்கள்.வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement