Load Image
Advertisement

சாலை விபத்துகளை தவிர்க்க தீவிர நடவடிக்கை அவசியம்!

கடந்த 2021ல் நம் நாட்டில் நடந்த, 4 லட்சத்து 12 ஆயிரத்து 432 சாலை விபத்துகளில், 1 லட்சத்து 53 ஆயிரத்து 972 பேர் பலியாகி உள்ளனர். 3.84 லட்சத்திற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். அதாவது, நாள் ஒன்றுக்கு, 421 பேர் மரணித்துள்ளனர். கொரோனா பரவல் தடுப்பு காரணமாக, 2021ல், வாகன பயணங்களுக்கு பல நாட்கள் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்த போதும், சாலை விபத்துகள் அதிக அளவில் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 100 சாலை விபத்துகளில், 44 விபத்துகள், இரு சக்கர வாகனங்கள் தொடர்பானவை. அத்துடன், விபத்துகளில் இறப்பவர்களில், 18 ஆயிரத்து 800 பேர் பாதசாரிகள். இவர்கள் சாலைகளை கடக்கும் போது, வாகனங்கள் மோதி இறந்து உள்ளனர். அதேநேரத்தில், 2021ல் சாலை விபத்துகளில் இறந்தவர்களில், 16 ஆயிரத்து 397 பேர் காரில், 'சீட்' பெல்ட் அணியாமல் பயணித்த வர்கள். இவர்களில், 8,438 பேர் டிரைவர்கள், மற்றும் பயணியர்.

அதேபோல, சாலை விபத்துகளில் இறந்தவர்களில் மற்ற, 46 ஆயிரத்து 593 பேர் தலைக்கவசம் அணியாமல், இரு சக்கர வாகனங்களில் பயணித்தவர்கள். இவர்களில், 32 ஆயிரத்து 877 பேர் வாகனத்தை ஓட்டியவர்கள்; மற்றவர்கள் பின்னால் அமர்ந்திருந்தவர்கள். இரு சக்கர வாகன விபத்துகளில் இறந்தவர்களில், மூன்றில் இரண்டு பேர், 'ஹெல்மெட்' அணியாததால் தான், பலத்த காயமடைந்து இறந்துள்ளனர்.
மேலும், சாலை விபத்துகளால் நிகழ்ந்த இறப்புகளில், கடந்த ஆண்டு உ.பி., மாநிலம் முதலிடத்தையும், தமிழகம் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன. காரில் பயணிப்பவர்கள், சீட் பெல்ட் அணிந்து பயணித்தால், விபத்தில் சிக்கும் போது, அவர்கள் மோசமான அளவில் காயம் அடைந்து இறப்பது பாதி அளவுக்கு குறைவதாக, உலக சுகாதார நிறுவன தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேமாதிரி, இரு சக்கர வாகனங்களில் செல்வோர், முகத்தை முழுமையாக மூடக்கூடிய ஹெல்மெட் அணிந்து சென்றால், விபத்தில் சிக்கும் போது, மோசமான அளவில் காயம் அடைவது, 64 சதவீதம் குறைவதாகவும், மூளையை பாதிக்கும் அளவுக்கு காயம் அடைவது, 74 சதவீதம் குறைவதாகவும் ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.
'டாடா' நிறுவனத்தைச் சேர்ந்த பிரபல தொழில்அதிபர் சைரஸ் மிஸ்திரி, சில மாதங்களுக்கு முன் கார் விபத்தில் உயிரிழந்தார். அதற்கு அவர் சீட் பெல்ட் அணியாததே காரணம் என்று கூறப்பட்டது. அதனால், பல மாநிலங்கள் காரில் சீட் பெல்ட் அணியாமல் பயணிப்போருக்கு, அதிக அபராதம் விதிப்பது உட்பட பல நடவடிக்கைகளை எடுக்கத் துவங்கியுள்ளன.
இருப்பினும், சீட் பெல்ட் அணியாமல், ஹெல்மெட் அணியாமல் பயணிப்போரின் எண்ணிக்கை குறைந்த மாதிரி தெரியவில்லை. இந்த விஷயத்தில் இன்னும் தீவிர விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்வதுடன், அபராதத்தையும் அதிகரிக்க வேண்டும். தொடர்ந்து தவறு செய்வோரின் லைசென்ஸ் ரத்து உட்பட, பல கடுமையான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.
இதுதவிர, சாலை விபத்துகளுக்கு மற்றொரு முக்கிய காரணம் மோசமான சாலைகளே. நம் நாட்டில் நெடுஞ்சாலைகளில் பயணிக்க, குறிப்பிட்ட துாரத்திற்கு ஒரு முறை சுங்கம் வசூலிக்கப்பட்டாலும், சாலைகள் பராமரிப்பு என்னவோ மோசமாகவே உள்ளது. எனவே, சாலைகள் பராமரிப்பில் நெடுஞ்சாலை துறையினர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
மேலும், போக்குவரத்து விதிகளை மதிக்காமல் செல்லும் கலாசாரமும், தமிழகம் போன்ற மாநிலங்களில் அதிக அளவில் உள்ளது. அதற்கும் முடிவு கட்ட வேண்டும். போக்குவரத்து விதிகளை பள்ளிகளிலேயே மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில், பள்ளி பாடத்திட்டத்தில், அவை குறிப்பிட்ட அளவுக்கு இடம் பெறச் செய்ய வேண்டும்.
பிரதான சாலைகளில் மக்கள் குறுக்கும் நெடுக்குமாக செல்லாத வகையில், பாதசாரிகளுக்காக சிறிய அளவிலான பாலங்கள் அமைப்பது, சைக்கிளில் செல்வோருக்காக தனிப்பாதைகள் அமைப்பது போன்ற நடவடிக்கைகளையும் எடுக்கலாம். ஆண்டுதோறும் பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற வகையில், தரமான சாலைகள் அமைப்பது உட்பட பல உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினால் மட்டுமே, சாலை விபத்துகளை குறைக்க முடியும்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement