'அப்படி நடக்குமென்று எதிபார்த்தேன், கடைசியில் இப்படியாகிவிட்டதே', 'அவனிடம் நிறைய எதிர்பார்த்தேன், ஆனால் ஏமாற்றிவிட்டான்' இப்படியான புலம்பல்கள் தினசரி வாழ்வில் காதில் வந்துவிழுகின்றன. இப்படி, எதிர்பார்த்து ஏமாற்றமடைந்தவர்களிடம் நீங்காமல் குடிகொள்ளும் அரக்கன்தான் மனச்சோர்வு. இதற்கு தீர்வுதான் என்ன?! இதோ சத்குரு சொல்கிறார்!
சத்குரு:
சில சமயம் நீங்களே உணர்ந்திருக்கலாம். எதைப் பார்த்தாலும் வெறுப்பாக இருக்கும். யாரைப் பார்த்தாலும் எரிச்சல் வரும். மனதுக்குள் தோற்றுவிட்டதுபோல் ஒரு வெறுமை உண்டாகும். அப்படியானால், மனச்சோர்வு என்ற எதிரியை உள்ளே அனுமதித்துவிட்டீர்கள் என்று அர்த்தம்!
மனச்சோர்வு எதனால் வருகிறது... அடிப்படையில் உங்களுக்கு என்ன நிகழ்கிறது?நீங்கள் விரும்பியபடி யாரோ நடக்கவில்லை. எதிர்பார்த்தபடி எதுவோ நிகழவில்லை. ஆசைப்பட்டபடி வாழ்க்கை அமையவில்லை. சுருக்கமாகச் சொன்னால், உங்களுக்கு என்ன கிடைத்திருக்கிறதோ, அதை ஏற்றுக் கொள்ள முடியாமல், நீங்கள் தவிக்கிறீர்கள். அதை எதிர்க்கிறீர்கள்.
நீங்கள் மனச்சோர்வுடன் இருக்கும்போது எல்லாம், மற்றவர்கள் உங்களைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள். உங்களுடன் உட்கார்ந்து மற்றவர்களும் அழ வேண்டும் என்று விரும்புகிறீர்கள். இரக்கத்தை யாசிக்கிறீர்கள். என்ன பைத்தியக்காரத்தனம் இது?
உங்கள் விருப்பப்படி எல்லாம் உலகம் ஏன் நடக்க வேண்டும்? நீங்கள் விரும்பியபடியெல்லாம் தங்களை ஏன் மற்றவர்கள் ஏய்த்துக் கொள்ள வேண்டும்?
அகங்காரம் எங்கே இருந்தாலும், அதற்கு அடி விழத்தான் செய்யும். அப்போது, மனச்சோர்வு முளைத்து எழும். அது உங்களைப் பற்றிய நம்பிக்கைகளைத் தகர்த்துவிடும்.
வெளியே இருந்து ஆயுதங்களால் தாக்குபவர்களைக் கூட சரியாகக் கையாண்டால், சமாளித்துவிடலாம். மனச்சோர்வு என்பது உள்ளிருந்து கொண்டே, கீறிக் கிழித்துக் குடைந்து உங்களை உபயோகமில்லாமல் அழித்துவிடும் விஷ ஆயுதம். உங்களை நீங்களே தாக்கி அழித்துக் கொள்வதைப் போன்ற முட்டாள்தனம் அது!
எதை நினைத்தும் சும்மா வருத்தப்பட்டுக் கொண்டு இருப்பதால், எந்தப் பலனும் இல்லை. வருத்தம் என்பதும், துக்கம் என்பதும் ஆளுக்கு ஆள் மாறுபடும். ஒருவர் தீக்குச்சி பற்றவில்லை என்றாலே துக்கமாகிவிடுவார். இன்னொருவர் வீடே தீப்பற்றி எரிந்தாலும், அலட்டிக் கொள்ள மாட்டார்.
இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னர் ஒருநாள், ஜெனரல் ஐஸனோவர் சொர்க்கத்துக்குப் போனார்.
"வாரக் கடைசியில் நரகத்தைச் சுற்றிப் பார்க்க எனக்கு அனுமதி வேண்டும்" என்று கடவுளிடம் அவர் கோரினார்.
"நரகத்தில் இருப்பவர்கள் சொர்க்கத்தைப் பார்க்க விரும்பினால் அர்த்தம் இருக்கிறது. உனக்கு நரகத்தைப் பார்க்கும் ஆசை எதற்கு?" என்று கேட்டார் கடவுள்.
"அங்கே ஹிட்லர் என்ன வேதனைகளை அனுபவிக்கிறார் என்று பார்க்க வேண்டும்" என்றார் ஐஸனோவர். கடவுள் நரகத்துக்கான பாஸ் கொடுத்தார்.
நரகத்தில் ஹிட்லர் சித்ரவதை செய்யப்படும் முகாமுக்கு ஐஸனோவர் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கே அசிங்கங்களால் நிரப்பப்பட்ட இரண்டு ஆள் உயரத் தொட்டி ஒன்றில், ஹிட்லர் அமிழ்த்தப்பட்டிருந்தார். தொட்டிக்கு வெளியே தெரிந்த அவருடைய முகத்தில், பிரகாசமான புன்னகையைப் பார்த்து ஐஸனோவர் ஆச்சர்யம் அடைந்தார்.
"சகிக்க முடியாத நாற்றத்தில், அருவருப்பான அசிங்கத்தில் அழுத்தியபோதும், எதைப் பற்றி நினைத்து இப்படி வெட்கமில்லாமல் சிரிக்கிறாய்?" என்று ஹிட்லரிடம் கேட்டார்.
"எனக்கு கீழே சிக்கிக் கொண்டு இருப்பது யார் தெரியுமா? முசோலினி! அவன் தோள்களில்தான் நான் நிற்கிறேன். அவன் நிலைமையை நினைத்துப் பார்?" என்று ஹிட்லர் பொங்கிப் பொங்கிச் சிரித்தார்.
துக்கம் என்பதும், வருத்தம் என்பதும் ஒருவருக்கொருவர் மாறுபடும். மற்றவருடன் ஒப்பிட்டுப் பார்த்தால் வருத்தம் கூடும் அல்லது குறையும் என்றால், அவை வெளியிலிருந்தா வருகின்றன? இல்லை. உங்கள் மனதுக்கு உள்ளேயேதான் உற்பத்தியாகின்றன.
உங்கள் மனத்தைச் சந்தோஷமாக வைத்துக் கொள்வதோ, சோர்வாக வைத்துக் கொள்வதோ உங்கள் கையில்தான் இருக்கிறது.
நீங்கள் நினைத்தபடி உலகம் நடக்க வேண்டும், மற்றவர்கள் இயங்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் உங்கள் அகங்காரம் வீண் சுமை. அதைக் காலடியில் போட்டு நசுக்கி விட்டு மேலே தொடரவில்லை என்றால், நீங்கள் வைக்கும் ஒவ்வொரு அடியும் வலிக்கும். ஒவ்வொரு திருப்பத்திலும் அச்சம் வரும். நம்பிக்கை குறைந்து, மனச்சோர்வு எழும்.
மனச்சோர்வு வரும்போதெல்லாம் மற்றவர்கள் மீது எரிச்சல் கொள்வதை நிறுத்திவிட்டு, அதற்குக் காரணம் நீங்கள்தான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
உலகத்தின் மீது கோபம் கொள்ளாதீர்கள். உங்கள் குறைகளை உணர்ந்து அவற்றை மாற்றிக் கொள்ளக் கிடைத்த அற்புதமான வாய்ப்பு இது என்று உணருங்கள். வலிகளும், வேதனைகளும் நிரம்பிய அனுபவங்களையே வாழ்க்கைப் பாடங்களாக ஏற்று, உங்களைப் பக்குவப்படுத்திக் கொள்ள வழங்கப்பட்ட வரம் இது!
எதிர்பார்ப்பை வளர்த்துக் கொண்டதால்தான் ஏமாற்றங்கள் என்பதை உணருங்கள். அகங்காரத்தை விட்டொழியுங்கள். மாற்றுக் கருத்துக்களையும் எதிர்க்காமல் ஏற்கப் பழகுங்கள். அவற்றையே உங்களுக்குச் சாதகமாக மாற்றக் கொள்வது எப்படி என்று திட்டமிடுங்கள். கிடைக்கும் அனுபவங்களை உங்களுக்குப் பயனுள்ளதாக மாற்றிக் கொள்ளுங்கள்!
மிகவும் அருமை , நன்றி சத்குரு அவர்களே