கடந்த, 2020ல், நம் அண்டை நாடான சீனாவில் தான் கொரோனா தொற்று உருவானது. பின், உலக நாடுகள் பலவற்றுக்கும் பரவி, பல லட்சம்உயிர்களை காவு வாங்கியது. ஒவ்வொரு நாடும், அந்நாட்டின் மக்களும், பொருளாதார ரீதியாக மட்டுமின்றி, பல வகையிலும் பாதிக்கப்பட்டனர். பல்வேறு தடுப்பூசிகளின் பலனால், தொற்று பரவல் படிப்படியாக குறைய ஆரம்பித்தது.
நம் நாட்டில் தொற்று பரவல் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டு விட்டது என்றே சொல்லலாம். தினமும், ௨௦௦ பேர் அளவுக்குள் தான், தற்போது பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதனால், தொற்று பரவலை தடுக்க விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் முற்றிலுமாக தளர்த்தப்பட்டு, பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டிருந்தனர்.
இந்நிலையில், உருமாறிய கொரோனா வைரசான, 'பி.எப்.7' சீனாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இது, ஒமைக்ரான் வைரசின் துணை வகையான, 'பிஏ - 5'ல் இருந்து உருமாறி வந்துள்ளது. ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களையும், தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களையும், இந்த வைரஸ் தாக்கி வருகிறது.
அதனால், சீனாவில் தற்போது, தினமும், 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்புக்கு ஆளாவதாகவும், 5,000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதாகவும், லண்டனை சேர்ந்த சுகாதார தரவு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், இந்த விஷயத்தில் உண்மை நிலையை தெரிவிக்க சீன அரசு மறுக்கிறது.
இந்தப் பிரச்னை தொடர்பாக ஆலோசனை நடத்திய மத்திய சுகாதார அமைச்சகம், சீனா, தாய்லாந்து, தென்கொரியா, ஜப்பான், ஹாங்காங் போன்ற நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருவோருக்கு, 'ஆர்.டி.பி.சி.ஆர்., எனப்படும், கொரோனா தொற்று பரிசோதனை அவசியம்' என, உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், ஆக்சிஜன் சிலிண்டர்கள், வென்டிலேட்டர்கள் உள்ளிட்ட உயிர் காக்கும் வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்கும்படியும், மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்குஅறிவுறுத்தியுள்ளது.
நம் நாட்டில், 2021 ஏப்ரல், மே மாதங்களில், கொரோனா இரண்டாம் அலை வேகம் எடுத்த போது, ஏராளமான உயிரிழப்புகள் நிகழ்ந்தன. 'இருந்தாலும், தற்போது நம் நாட்டில் ஏராளமானோர் தடுப்பூசி போட்டிருப்பதால், சீனாவில் தீவிரமாக பரவி வரும் கொரோனா பரவலை நினைத்து கவலைப்பட தேவையில்லை' என, மருத்துவ நிபுணர்கள் கூறி வருகின்றனர்.
இது, ஆறுதல் தரும் விஷயம் என்றாலும், மக்கள் இன்னும் கொஞ்ச காலத்திற்கு, உஷாராக இருக்க வேண்டியது அவசியம். அத்துடன், கொரோனா தடுப்பூசி இரண்டாவது டோஸ் மற்றும் பூஸ்டர் டோஸ் போடாதவர்கள் அதை உடனடியாக போட்டுக் கொள்ள முன்வர வேண்டும். அத்துடன், கொரோனா தொற்று பரிசோதனை எண்ணிக்கையையும், மாநில அரசுகள் அதிகரிக்க வேண்டும்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, மீண்டும் ஊரடங்கை அமல்படுத்துவதால், உருமாறிய கொரோனா வைரஸ்கள் உருவாவதை தடுக்க முடியாது என்பது, இதுவரை கிடைத்த அனுபவத்தின் வாயிலாக, நாம் கண்டறிந்துள்ள உண்மை.
நம் நாட்டில் தற்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகள், நோய் பரவலையும், உருமாறும் கொரோனாவையும் தடுக்க போதுமானதாக இல்லை எனில், புதிய தடுப்பூசிகளை கண்டுபிடிப்பது அவசியம். இந்தியாவிலும், பி.எப்.7 வைரஸ் பாதிப்பு சிலரிடம் கண்டறியப்பட்டு உள்ளதால், இப்போதே, மக்களும், மத்திய, மாநில அரசுகளும் உஷாராக வேண்டும்.
முன்னர் கொரோனா பரவல் காலத்தில் அமலில் இருந்த முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது போன்றவற்றை, மக்களும் சில நாட்களுக்கு கடைப்பிடிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, சீனா உள்ளிட்ட சில நாடுகளில் இருந்து வருவோரையும், குறிப்பிட்ட நாட்களுக்கு தனிமைப்படுத்தி, அவர்கள் வாயிலாக தொற்று பரவாது என்பதை உறுதி செய்த பின், வெளியில் செல்ல அனுமதிக்க வேண்டும்.
புதிதாக உருவாகியுள்ள இந்த சவாலை, மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட்டுமுறியடிக்க வேண்டும். மக்களும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!