தொப்பலாய் நனைந்தபடி, சித்ரா வீட்டுக்குள் நுழைந்த மித்ரா, ''என்னக்கா...நம்ம ஊருல குளிர் காலத்துல இப்படி மழை பெய்யுது; குளிரும் தாங்க முடியலை...ஏதாவது சூடா குடிக்கக் கொடுங்க!'' என கேட்டுக் கொண்டே, ஜெர்கினை அவிழ்த்து காயப்போட்டாள். அவளை வரவேற்ற சித்ரா, அடுக்களைக்குச் சென்று சுடச்சுட சுண்டலும், டீயும் எடுத்து வந்தாள்.
சூடான டீயைக் குடித்துக் கொண்டே, ''அக்கா! அமைச்சரான பிறகு நம்ம ஊருக்கு வந்த உதயநிதிக்கு சி.எம்., அளவுக்கு செம்ம வரவேற்பு கொடுத்திருக்காங்க...கட்சிக்காரங்க, ஆபீசர்கள்ட்ட அவர்தான் டெபுடி சி.எம்.,னு மறைமுகமா அறிவிச்சிட்டாங்களா?'' என கேட்டாள்.
இந்தக் கேள்விக்காகவே காத்திருந்தது போல ஆரம்பித்தாள் சித்ரா...
''அப்பிடித்தான் தெரியுது மித்து! மாவட்ட அளவுல நடந்த 'ரெவ்யூ மீட்டிங்'குக்கு, அதுல்ய மிஸ்ரா, நாகராஜன்னு நாலு மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், செகரட்டரியேட்ல இருந்து வந்திருக்காங்க. பெரிய கூட்டம் காட்டணும்னு, மக்களைக் கூப்பிட்டு வந்து, சில ரோடுகள்ல வண்டிகளை 'ப்ளாக்' பண்ணி, அங்கங்க டிராபிக் ஆகி, லோக்கல் மக்கள்தான் செம்ம கடுப்பாயிட்டாங்க!''
சித்ரா சொல்லிக் கொண்டிருக்கும் போதே, குறுக்கிட்டுப் பேசினாள் மித்ரா...
''ஆமாக்கா! இதெல்லாம் உதயநிதிட்ட பேரு வாங்கணும்னு மினிஸ்டர் பண்ணுனாரா, மினிஸ்டர்ட்ட நல்ல பேரு வாங்கணும்னு 'மாவட்டங்கள்' பண்ணுனாங்களான்னு தெரியலை!''
''கூட்டம் சேர்க்க மட்டும் நம்ம ஊர்ல ஆளிருக்கு. ஆனா, நம்ம ஊருக்குன்னு பேச யாருமே இல்லை. மதுரையில இருக்குற ரெண்டு மினிஸ்டரும் மாறிமாறிப் பேசி, அந்த ஊருக்கு நிறைய திட்டங்களை கொண்டு வர்றாங்க. அங்க ஏற்கனவே ஐகோர்ட் கிளை இருக்கு; எய்ம்ஸ் வரப்போகுது. எப்பவோ பை பாஸ் வந்திருச்சு. ஏர்போர்ட் எக்ஸ்பேன்ஷனுக்கு நிதின்கட்கரிகிட்ட பி.டி.ஆர்., பேசி வாங்கிருக்காரு!''
''உண்மைதான்க்கா...நம்ம ஊருக்காகப் பேசுறது மாதிரி ஆளும்கட்சிக்காரங்க யாருமே இல்லை. இங்க வந்து போறவுங்களுக்கு, வசூலில் பிரதானமா இருக்காங்க. இந்த ஊருக்கு ஏதாவது செய்யணும்கிற உணர்வு துளியும் இருக்குற மாதிரித் தெரியலை. அதே மாதிரி கட்சியில புதுசு புதுசா சேர்க்கிறதுலயும் ஜாதி, துட்டு எல்லாத்தையும் பார்க்குறதா ஒரு கம்பிளைண்ட் கிளம்பிருக்கு!''
மித்ரா சொன்னதை ஆமோதித்த சித்ரா, ''ஆளும்கட்சிக்காரங்க எங்க பார்த்தாலும் வசூல்ல இறங்கீட்டாங்க... அன்னுார்ல ஆளும்கட்சியில ரெண்டு மூணு கோஷ்டி இருக்காம். அவுங்களுக்குள்ளேயே கட்டப்பஞ்சாயத்து பண்றதுல தகராறு நடக்குதாம். ஒரு கோஷ்டி பண்ற பஞ்சாயத்தை அடுத்த கோஷ்டி, ஆபீசர்களுக்கும், மீடியாவுக்கும் போட்டுக் கொடுக்குறாங்களாம்!''
''அன்னுார் அ.தி.மு.க.,காரங்களும், பி.ஜே.பி.,காரங்களுக்கும் இதுல சந்தோஷம். ஆனா, ஆளும்கட்சிக்காரங்க, மாவட்ட வி.ஐ.பி., யோட ஆளுங்க செம்ம வசூல் பண்ணுனாலும், அ.தி.மு.க.,காரங்க எதையும் வெளியே சொல்லாம பதுங்கிட்டே இருக்காங்க !'' என்ற சித்ரா, ''அ.தி.மு.க.,வுல அதிருப்தியா இருக்கிறவங்களை ஆளும்கட்சியில் குறி வச்சுத் துாக்குறாங்க,'' மித்து... தடாகத்துல செங்கல் சூளை பிரச்னை உச்சக்கட்டத்துல இருக்குறதால, அங்க அதிருப்தியில இருக்குற அ.தி.மு.க., தலைகளைத் துாக்க வேலை நடக்குதாம். பதிலுக்கு சூளைப் பிரச்னையில, ஓணர்களுக்கு ஏத்தது மாதிரி முடிவெடுக்கப்படும்னு ஒரு உத்தரவாதம் கொடுக்குறாங்களாம்!''
''கோர்ட், பசுமை தீர்ப்பாயம் உத்தரவுகளை மீறி, ஆளும்கட்சி என்ன பண்ண முடியும்...?'' கேள்வி கேட்ட மித்ராவுக்கு, பதில் சொன்னாள் சித்ரா...
''அது தெரியலை மித்து...அதை விடு...ஏதோ அ.தி.மு.க., சார்புல அச்சடிச்சுக் கொடுத்த காலண்டர்களை ரத்தத்தின் ரத்தங்கள் வாங்க மாட்டேங்கிறாங்களாமே...என்னாச்சாம்!''
''அந்த மேட்டரா...மாவட்டம், எம்.எல்.ஏ.,க்கள் பேருல காலண்டர் அடிச்சு, பகுதிக்கழகம், வார்டு செயலாளர்கள்ட்ட கொடுத்து, கட்சிக்காரங்களுக்குக் கொடுக்கச் சொல்லிருக்காங்க. ஆனா, அந்த காலண்டரைப் பார்த்தா, கொடுக்குறது மாதிரி இல்லியாம்!''
''என்ன சொல்ற மித்து...?''
''எம்.எல்.ஏ., அம்மன் அர்ச்சுணன் கொடுத்திருக்குற காலண்டர்ல, ஜெயலலிதா படம் சின்னதா ஓரத்துல இருக்காம். பழனிசாமி படம் பெருசா இருக்காம். அதைப் பார்த்த சில தொண்டர்கள் கொந்தளிச்சுப் போய், இந்த காலண்டரே வேணாம்னு சொல்லீட்டாங்களாம். அதனால, அடிச்சதுல பெரும்பாலான காலண்டர்கள், கட்சி நிர்வாகிகள் வீட்டுல முடங்கிக் கிடக்குதாம்...அதுக்குச் செலவழிச்ச காசுதான் வேஸ்ட்!''
''காசு வேஸ்ட்ன்னதும் ஞாபகம் வந்துச்சு...இப்படித்தான் கார்ப்பரேஷன் சுகாதாரக்குழு அனுமதியில்லாம, வேற குழு கூட்டத்துல, தீர்மானம் நிறைவேத்தி, பல கோடி ரூபாய் செலவுல பேட்டரி வாகனங்கள் வாங்குறதுக்கு ஆர்டர் கொடுத்திருக்காங்க. சமீபத்துல நடந்த சுகாதாரக்குழு கூட்டத்துல, இதைச் சொல்லி, குழுத் தலைவரே கொதிச்சுப் போயி, அதிகாரிகளை 'வாங்கு வாங்கு'ன்னு வாங்கியிருக்காரு. அ.தி.மு.க., ஆட்சியில வாங்குன, 100 பேட்டரி வாகனங்களில் ஒன்னு கூட உருப்படியா இல்லை; ஏகப்பட்ட வண்டிகளை 'காயலான்' கடையில வித்துட்டாங்கன்னு நினைக்கிறேன். மறுபடியும் அதே மாதிரி வாகனங்களை, குழுவுக்கே தெரியாம ஏன் வாங்கணும்னு குடைஞ்செடுத்திருக்கார். ஆனா, அதிகாரிகள் எந்த பதிலும் சொல்லாம 'கப்-சிப்'னு இருந்தாங்களாம்!''
''வரவர...கார்ப்பரேஷன் நிர்வாகம் என்ன பண்ணுதுன்னே தெரியலை. துாய்மை பணியாளர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி தர்றதா மேயர், கமிஷனர் வாக்குறுதி கொடுத்திருந்தாங்க. போராட்டத்தை நிறுத்துனதும் மறந்துட்டாங்க. ஆளும்கட்சிக்கு ஆதரவான சங்கங்கள், மறுபடியும் போராட்டம் நடத்துறக்கு முட்டுக்கட்டையா இருக்குறதால பணியாளர்கள் குமுறிட்டு இருக்காங்க!''
''ஆமா மித்து...அந்த சங்கங்களை ஒதுக்கிட்டு, புதுசா வேறொரு கூட்டமைப்பு துவக்க வேலை நடக்குது. இந்த விஷயத்துல, கமிஷனர் மேல பணியாளர்கள் அதிருப்தியா இருக்காங்க!''
சித்ரா சொல்லும்போதே குறுக்கிட்டாள் மித்ரா...
''அக்கா! அவரும் வந்த புதுசுல ரொம்ப 'ஆக்டிவ்'வா இருந்தாரு. இப்ப என்னாச்சுன்னு தெரியல. கார்ப்பரேஷன்ல எதுக்கெடுத்தாலும் காசு இல்லைங்கிறாங்க. ஆனா, எப்பவோ மூடுன போர்வெல்களுக்கு, ரெண்டு மாசத்துக்கு ஒரு வாட்டி, ஏழெட்டு லட்ச ரூபா கரண்ட் பில் கட்டுறாங்க. அதே மாதிரி, ரோடு விரிவாக்கம் பண்ணுனப்போ, சென்டர் மீடியனுக்கு மாத்துன லைட்களுக்கு தனியா கனெக்சன் வாங்குன பிறகு, ரோட்டோரம் இருந்த பழைய லைட் கனெக்சன்களுக்கும் இப்பவும் பல ஆயிரம் ரூபா பில் கட்டுறாங்க. இந்த தொகையெல்லாம் அந்த இன்ஜினியர்கள் சம்பளத்துல பிடிக்கணும்,''
''மேற்கு மண்டலத்துல தண்ணி சப்ளை பண்ற பொறுப்புல இருக்குற இன்ஜினியர் ஒருத்தரு, பிளம்பர்களை வாட்டி வதைக்கிறாராம். அவுங்களே பாவம் பர்மணென்ட் ஆகாம, ஆறாயிரம் ரூபா சம்பளத்துல அல்லாடுறாங்க. அவுங்களைப் போட்டு பாடாப்படுத்துறாராம். எல்லாரும் அவருக்கு எதிரா ஸ்டிரைக்ல இறங்கலாமான்னு பேசிட்டு இருக்காங்களாம்!''
''ஆமா மித்து... கூட்டத்துல கோவிந்தா போடுறவரைத்தானே சொல்ற. அவரு, அதே மண்டலத்துல ஏழெட்டு வருஷமா அசையாம இருக்குறதா, ஏற்கனவே கம்பிளைண்ட் வந்திருக்கு!''
''இப்பிடித்தான் மாவட்டத்துல சப்ளை ஆபீசரா இருக்குற ஒரு லேடி ஆபீசரைப் பத்தி, ஏகப்பட்ட புகார் வந்து, அவரை மாத்தி ஒரு வாரமாச்சாம். ரேஷன் கடைகள்ல இருந்து மாமூல் கொட்டுறதால, அந்த போஸ்ட்டிங்கை விட்டுப் போக மாட்டேங்கிறாங்களாம். வேற வழியில்லாம, அவரை மாத்துன ஆதிதிராவிடர் நலத்துறை ஆபீசர் பொறுப்பை, வேற ஒருத்தர்ட்ட 'இன்சார்ஜ்' கொடுத்துட்டாராம் கலெக்டர்!''
''கவர்மென்ட் மேல எந்த ஆபீசருக்குமே பயம் இருக்குற மாதிரித் தெரியலை...தொண்டாமுத்துார் சப்-ரிஜிஸ்டர் ஆபீசுக்குப் போயிருந்தேன். காலையில, 10:00 மணிக்கு ஆபீசுல யாருமே இல்லை. ஆபீசர்ல தொடங்கி, கிளார்க் வரைக்கும் எல்லாரும், 11:00 மணிக்கு ஹாயா வர்றாங்க! எப்பக் கேட்டாலும், சர்வர் பிரச்னைன்னு சொல்லி, ரிஜிஸ்ட்ரேஷனுக்கு வர்றவுங்களைப் படுத்தி எடுக்குறாங்க!''
''சிட்டி போலீஸ்காரங்க பண்ற அலும்பு, அதுக்கு மேல இருக்கு மித்து...!''
மித்ரா சொல்லும்போது, குறுக்கிட்டுக் கேட்டாள் சித்ரா...
''இவ்வளவு ஸ்ட்ரிக்ட் ஆன கமிஷனர் இருக்கிறப்பவா?''
''ஆமாக்கா...ராமநாதபுரத்துல க்ரைம் பார்க்குற ஒரு லேடி இன்ஸ்., பத்தி ஏகப்பட்ட கம்பிளைண்ட். ஒரு சீட்டிங் கேஸ்ல சம்பந்தப்பட்ட 'அக்யூஸ்ட்'கிட்ட இருந்து, 20 லட்ச ரூபா ரெக்கவரி பண்ணியும், பாதிக்கப்பட்ட யாருக்கும் கொடுக்கலையாம். அந்த சீட்டிங் கம்பெனி இருந்த பில்டிங்கோட ஓனரிடம், அட்வான்ஸ்க்குக் கொடுத்த அஞ்சு லட்சத்துக்கு வட்டி போட்டு, ஏழு லட்சம் கொடுக்கணும்னும் மெரட்டுறாராம்!''
''அங்க அப்பிடியா....பக்கத்துல இருக்குற சிங்காநல்லுார் ஸ்டேஷன்ல எப்.ஐ.ஆர்., கூட போடாத கேசுல, ஒரு பாங்க் அலுவலரை விசாரணைக்குன்னு கூப்பிட்டு, போன், லேப்-டாப் எல்லாத்தையும் வாங்கி வச்சுக்கிட்ட ஒரு போலீஸ், அதைத் திருப்பியே கொடுக்க மாட்டேங்கிறாராம்!''
சித்ரா சொல்லி முடிக்கும் முன், மணியைப் பார்த்த மித்ரா, ''அக்கா! அடுத்த மழை வர்றதுக்குள்ள நான் கிளம்புறேன்!'' என, ஜெர்கினை மாட்டிக் கொண்டு, வண்டியைக் கிளப்பினாள்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!