புரட்சித் தலைவரின் ரசிகன் என்றாலே, மக்களிடம் தனி மதிப்பும், மரியாதையும் இன்றும் இருக்கிறது. புரட்சித் தலைவரின் பக்தன் என்று ஒவ்வொரு நபரும் கம்பீரமாகவும், கர்வமாகவும் சொல்கின்றனர். இதற்கெல்லாம் காரணம், அவரின் நற்பண்புகள், சேவை மனப்பான்மை, மனித நேயத்தை அவரது ரசிகர்கள் இன்றும் தொடர்வது தான்.
தன்னுடைய ஒவ்வொரு ரசிகரும், ஒவ்வொரு தொண்டனும் தன்னைப் போலவே மக்கள் சேவையில் ஈடுபட வேண்டும் என்பது அவரின் விருப்பமாக இருந்தது. அதேநேரம், திரைப்பட துறையிலும், ஆட்சியிலும் தன்னுடைய செல்வாக்கை தன் குடும்பத்தாரும், நண்பர்களும் தவறாக பயன்படுத்த அவர் ஒருபோதும் அனுமதித்ததே இல்லை. இதற்கு அவர் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை உதாரணமாக சொல்கிறேன்...
தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரை சந்திக்க ராமாபுரம் தோட்டத்திற்கு வந்த ஒரு நபர், அவர் காலில் விழுந்து அழுதார். 'என்ன பிரச்னை?' என்று அவர் கேட்டதும், 'உங்களுடைய உதவியாளர் 45 ஆயிரம் ரூபாயை ஏமாற்றி விட்டார்.
'என் பையனுக்கு இன்ஜினியரிங் காலேஜில் சீட் வாங்கித் தரேன்னு சொல்லிட்டு, இப்ப சீட்டும் வாங்கித் தரலை; ரூபாயும் தரலை' என்று அருகில் நின்ற உதவியாளரை சுட்டிக்காட்டியதும் அதிர்ந்து விட்டார் எம்.ஜி.ஆர்.,'உங்கள் மகனுக்கு சீட் கிடைத்திருந்தால் என்னிடம் வந்திருப்பீர்களா அல்லது என்னிடம் கேட்டு தான் பணம் கொடுத்தீர்களா... இப்படி தவறான வழியில் சீட்டு வாங்க முயற்சிப்பது சரியா?' என்று கேள்வி எழுப்பியவர், 'சரி, உங்கள் முகவரியை கொடுத்து விட்டு செல்லுங்கள்...' என்று அனுப்பி விட்டார். அவர் போனதும் தன் உதவியாளரை எல்லார் முன்னிலையிலும் ஓங்கி அறைந்தார்.
'ஏன் இப்படி செஞ்சே... உனக்கு என்ன குறை வைச்சேன்? நீ செய்த காரியத்தால் என்னிடம் வந்திருக்கிறார். உன் செயலால் என் பெயர் கெட்டுப்போகாதா?' என்று சத்தம் போட்டவர், அந்த இடத்திலேயே அவரை பணி நீக்கம் செய்து அனுப்பினார்.இந்த விஷயம் எப்படியோ அன்றைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த கருணாநிதிக்கு தெரிந்து விட்டது. சட்டசபை கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்த நேரம் அது. எனவே, அடுத்த நாளே இதுகுறித்து சட்டசபையில், 'முதல்வரின் உதவியாளர் ஒருவர் இன்ஜினியரிங் கல்லுாரியில் சீட் வாங்கி தருவதாக 45 ஆயிரம் ரூபாய் மோசடி செய்தாராமே?' என்று கேள்வி எழுப்பினார்.
உடனே எம்.ஜி.ஆர்., பதற்றமே இல்லாமல் எழுந்து நின்று, 'நீங்கள் கூறுவது உண்மை தான்... சம்பந்தப்பட்ட உதவியாளரை நேற்றே பதவியில் இருந்து நீக்கி விட்டேன். பணத்தை இழந்தவருக்கு திருப்பிக் கொடுக்கவும் ஏற்பாடு செய்தாகி விட்டது...' என்று வெளிப்படையாக பதில் கூறினார். அந்த குற்றச்சாட்டை மறுக்கவோ, மறைக்கவோ அவர் முயற்சி செய்யவில்லை. இந்த நேர்மையும், துணிச்சலும் தான் அவரின் சொத்து!
உடல் நலக் குறைவால் அமெரிக்காவில் எம்.ஜி.ஆர்., சிகிச்சை பெற்றுத் திரும்பிய பின், அவர் குடும்பத்தினர் சிலர், அரசு நிர்வாகத்தில் தலையிடுவதாக புகார் எழுந்தது. இது, அவரின் கவனத்துக்கு சென்றது. உடனே, 'அரசு நிர்வாகத்தில் சம்பந்தம் இல்லாத யாருடைய தலையீட்டையும், குறுக்கீட்டையும் நான் எப்போதுமே விரும்புவதில்லை. என் மனைவியாக இருந்தாலும் அல்லது என் உறவினர் என்று சொல்லிக் கொள்பவராக இருந்தாலும், அவர்களுக்கும் இது பொருந்தும். அமைச்சர்கள், அதிகாரிகள் என் அபிப்ராயத்தை அறிந்து நடக்க வேண்டும்...' என்று அதிரடி அறிவிப்பு வெளியிட்டார்.
அரசு அதிகாரத்தில் இருப்பவர்கள் பொதுவாழ்க்கையில் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்து காட்டியவர் எம்.ஜி.ஆர்., தான். சினிமாவில் முடிசூடா மன்னனாக விளங்கிய எம்.ஜி.ஆர்., நினைத்திருந்தால், எத்தனையோ அரண்மனை போன்ற பங்களாக்களை கட்டியிருக்க முடியும்.
ஆனால் ஒருபோதும் ஆடம்பரங்களை விரும்பியதே இல்லை எம்.ஜி.ஆர்.,சினிமா சம்பாத்தியத்தில் 1958ல் வாங்கிய ராமாபுரம் தோட்டத்தில், தான் மறையும் வரை குடியிருந்தார். அந்த தோட்டத்தில் தான் இப்போதும் காது கேளாதோர் மற்றும் பேச்சு திறனற்றோர் பள்ளி இயங்கி வருகிறது.
அன்னை ஜானகி
எம்.ஜி.ஆரால் தானம் கொடுக்கப்பட்ட இடத்தில் தான் இப்போது அ.தி.மு.க.,வின் தலைமை கழகம் இயங்கி வருகிறது. எம்.ஜி.ஆர்., முதல்வரான பின் தனக்கென்று ஒரு 'சென்ட்' இடம் கூட அவர் வாங்கவில்லை. மேலும் முதல்வருக்கான எந்த அரசு சலுகைகளையும் அவர் ஏற்கவில்லை. எம்.ஜி.ஆர்., சேவை செய்வதற்காக பணம் சம்பாதித்தாரே தவிர, பணத்துக்காக சினிமாவில் எப்படியும் நடிப்பதற்கு அவர் ஒப்புக் கொண்டதே இல்லை. தன் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு சாதனமாகவே சினிமாவை பயன்படுத்திக் கொண்டார்.
நல்லவன் வாழ்வான், தாய் சொல்லை தட்டாதே தர்மம் தலை காக்கும் நீதிக்கு தலைவணங்கு என்று ஒவ்வொரு படத்தின் தலைப்பின் மூலம் பாடம் நடத்தினார். சினிமா பாடல்கள், வசனம், காட்சியமைப்பு மூலம் மக்களுக்கு அறம் போதித்தார். அதனால் தான் எம்.ஜி.ஆரை 'வாத்தியார்' என்று மக்கள் கொண்டாடினர்.எந்த பாத்திரத்தில் நடித்தாரோ, அந்த பாத்திரமாகவே வாழ்ந்தார். பட்டியலின மக்கள் எம்.ஜி.ஆரை மதுரை வீரனாக, குலதெய்வமாக வணங்கி வருகின்றனர்.
விவசாயியாக, மீனவ நண்பனாக, தொழிலாளியாக ஊருக்கு உழைப்பவராக சினிமாவில் நடித்தது மட்டுமின்றி, அப்படியே நிஜ வாழ்க்கையிலும் வாழ்ந்து வழிகாட்டி வந்தார்.அத்தகைய மாபெரும் தலைவரின் தொண்டன் என்ற கவுரவத்துடன் வாழ்வதில் பெருமை கொள்கிறேன்!
- சைதை சா.துரைசாமி சென்னை பெருநகர முன்னாள் மேயர்
எம்ஜி ஆர் நிறைய பேரை அறைஞ்சிருப்பார் போலிருக்கு . ஏன் இன்னொருத்தரை கய் நீட்டி அறையனும்? வேலை விட்டு நீக்கினது சரி.