Load Image
Advertisement

மறைந்த மகத்தான புகைப்படக் கலைஞர் ராம்கி சீனிவாசன்

இந்த புகைப்படக்கலைஞரின் மறைவால் என் மனம் அழுதுகொண்டே இருக்கிறது, அந்த துக்கத்தில் இருந்து நானும் என் மக்களும் மீளமுடியாமல் தவிக்கிறோம் என நாகலாந்து முதல்வர் நைபியூரியோ இரங்கல் தெரிவித்திருந்தார்.
ஒரு மாநில முதல்வரின் மனதை இந்த அளவு உலுக்கும் வகையில் மரணமடைந்த அந்த புகைப்படக்கலைஞர் யார்? அப்படி அவர் என்ன செய்தார்? என்பதை அறிந்து கொண்டால் உங்கள் மனமும் அழும் அவர் இருக்கும் திசை நோக்கி தொழும்.

ராம்கி சீனிவாசன் அவரது நண்பர்கள் மத்தியில் ராம்கி.
சென்னையில் பிறந்தவர் பெங்களூரில் செட்டிலானவர்.
சிறு வயது முதலே பறவைகள் இயற்கையின் மீது பிரியம் அதிகம்,கொஞ்சம் வளர்ந்ததும் அவைகளை புகைப்படமாக்கி அவ்வப்போது மகிழ்ந்து வந்தார்.
எம்பிஏ படித்த இயற்பியல் பட்டதாரியான ராம்கி, டேட்டா அனலிட்டிக்ஸ் நிறுவனமான மார்கெட்டிக்ஸ் நிறுவனத்தை நிறுவி, அதை பெரும் வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
நினைத்துப் பார்க்க முடியாத வருமானம் வந்தது. ஆனால் இந்தப்பணம் தனது இயற்கை சார்ந்த மனதை மாற்றிவருவதாக உணர்ந்தவர் சட்டென தனது நிறுவனத்தை விற்றுவிட்டு காட்டுயிர் புகைப்படக்கலைஞராகவும் இயற்கை பாதுகாவலராகவும் மாறினர். அப்போது அவருக்கு வயது 36 தான்.
நாட்டில் உள்ள காடுகள் பலவற்றிக்கும் சென்று அங்குள்ள காட்டுயிர்களை படம் எடுத்து அதற்கு ஏற்படும் பாதிப்புகளை களைய முற்பட்டார். அவரது பயணத்தில் ஒரு கட்டமாக நாகலாந்து சென்ற போது, அங்கு புலம் பெயர்ந்து வரும் ‛அமோர் பால்கன்' என்ற வெளிநாட்டு பறவையை அந்த மக்கள் உணவிற்காக வேட்டையாடி வருவதைப் பார்த்து மனம் நொந்து போனார்.தெற்கு ரஷ்யா மற்றும் வட சீனாவை பூர்வீகமாகக் கொண்ட இப்பறவைகள், இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தால் 'அழிந்துவரும் உயிரினங்கள்' பட்டியலில் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு குளிர்காலத்திலும், இந்தப் பறவைகள் இடம்பெயர்ந்து நாகாலாந்தின் வோகா மாவட்டத்தில் உள்ள டோயாங் பள்ளத்தாக்கு நீர்த்தேக்கத்திற்கு வந்து சேரும். பின் சில காலம் அங்கிருந்துவிட்டு தென்னாப்பிரிக்காவை நோக்கி நீண்ட பயணத்தை மேற்கொள்ளும்.
நம்மை நம்பி வரும் விருந்தினர்களை இப்படியா கொடுமைப்படுத்துவது என்று குமுறிப்போய் அதைத் தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளிலும் இறங்கினார். ஆரம்பத்தில் அவரை எதிரியாக பார்த்த அம்மக்கள் நாளடைவில் அவரது பறவைப்பாசத்தைப் பார்த்து நண்பர்களாக மாறிவிட்டனர்.
அமோர் பால்கன் பறவை பற்றி பெருஞ்செலவில் இவர் எடுத்த ஆவணப்படத்தால் அந்தப்பகுதியில் அமோர் பால்கன் பறவையை வேட்டையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. உலகம் முழுவதம் இந்தப்பறவை குறித்த விழிப்புணர்வு பெருகியது . இந்தப் பறவையை பார்ப்பதற்காகவே சுற்றுலா பயணியர் வருகை இங்கு அபரிமிதமாக அதிகரித்தது.
சுற்றுலா பயணியர் வருகை மூலம் கிடைத்த வருமானம் அதிகரிக்கவே மக்களே அந்தப் பறவைகளை பாதுகாத்தது மட்டுமின்றி, அதையும் தாண்டி தங்கள் குடும்பத்தில் பிறவாத ஒரு உயிராக இந்தப் பறவையை மிகவும் நேசிக்கத் துவங்கிவிட்டனர்.
இப்படி ஒவ்வொரு காட்டிற்கும் ஒரு சிறப்பு உண்டு என்பதைச் சொல்லி, நாடு முழுவதும் தனது இயற்கை பாதுகாப்பு பயணத்தை மேற்கொண்டு, இந்தியாவின் மகத்தான இயற்கை பாரம்பரியத்தை தனது புகைப்படம் மூலமாக உலகம் முழுவதம் கொண்டு போய்ச் சேர்த்வரை சில ஆண்டுகளுக்கு முன் கேன்சர் நோய் தாக்கியது.
இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டவர், அதில் இருந்து மீண்டு வர ஐந்து வருடங்கள் போராடினார். ஆனால் கேன்சர்தான் ஜெயித்தது. கடந்த 17 ம்தேதி தனது ஐம்பதாவது வயதில் இறந்து போனார்.
இந்த ஐந்து வருடங்களில் கேன்சர் நோய் தொடர்பான மையங்களுக்கு பொருளாதார ரீதியாக பெரும் உதவிபுரிந்தார். தனது படங்கள் அனைத்தையும் விற்பனை செய்து, அதில் வந்த பணம் முழுவதையும் புற்று நோய் பாதித்து ஏழைக் குழந்தைகள் நலனிற்கு செலவழித்தார். வனவிலங்குகள் மற்றும் இயற்கைப் பாதுகாப்பை செயல்படுத்தும் இந்தியாவின் முதல் மற்றும் ஒரே இணையதளமான கன்சர்வேஷன் இந்தியா என்ற அமைப்பை துவங்கி அதன் வழியாக மாணவர்களுக்கு இயற்கை மீதான பற்றை உருவாக்கினார்.
அவரது மறைவு இந்தியாவில் உள்ள வனவிலங்கு பாதுகாப்பு சமூகத்திற்கு மிகப்பெரிய இழப்பாகும், ”என்று ராம்கியை 20 ஆண்டுகளாக அறிந்த பறவையியல் நிபுணர் ஷஷாங்க் தல்வி கூறுகிறார்.
அவரது பள்ளிப்பருவத்து மாணவரான சென்னையைச் சேர்ந்த வெங்கட் கூறுகையில், நன்றாக படிக்கக்கூடியவர். அவரைப்பற்றி ஏதாவது ஒரு பத்திரிகையில் செய்தியோ படமோ வரும்போது எனது நண்பன் என்ற பெருமை இருந்து கொண்டே இருக்கும் . ஆனால் திடீரென அவர் இறந்துவிட்டார் என்ற செய்தியைத்தான் ஏற்கவும் முடியவில்லை தாங்கவும் முடியவில்லை என்றார்.
இப்படிப்பட்ட மகத்தான புகைப்படக்கலைஞருக்குதான் நாகலாந்து முதல்வர் கண்ணீர் சிந்தியுள்ளார். அவரது கண்கள் மட்டுமா கண்ணீர் சிந்தியது. இப்போது உங்களது கண்களும் கூட கண்ணீர் சிந்திக் கொண்டிருக்குமே.
-எல்.முருகராஜ்வாசகர் கருத்து (3)

  • Muthu - dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    மிக்க வருத்தம்...அன்னாரின் ஆன்ம சாந்தி அடையட்டும்...

  • Lion Drsekar - Chennai ,இந்தியா

    அன்னப்பறவை திரு முருகராஜ் ஐயா அவர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கம். ஒரு எம் பி எ பட்டதாரி, வேறு வாழ்ந்தது கர்நாடகம், பெயரும் புகழும் பெற்று விளங்குவது வேறு ஒரு மாநில முதல்வர் மனதில் இப்படி அடுக்கிக்கொண்டே அன்னாரது புகழை வெளியுலகுக்கு கொணர்ந்து அவர்களது படைப்புகளை மட்டும் அல்லாது அவரால் ஒரு பறவை தேசிய பறைவாய அங்கீகாரம் பெற்றிருக்கிறது. அந்த இனமே காப்பாற்றப்பட்டு உள்ளது என்பது மிகவும் பெருமைப்படவேண்டிய ஒரு செய்தி, அவரது பள்ளிப்பருவ மாணவர் பகிர்ந்தது கொண்ட செய்தியை வெளியுலகுக்கு பகிர்ந்தது அன்னாரது குடும்பத்துக்கும் மற்றும் இவ்வுலகுக்கு சேர்த்த பெருமை தினமலருக்கே, வாழ்க உங்கள் சேவை., வந்தே மாதரம்

  • திண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா

    சினிமா - அரசியல் - விளையாட்டு தாண்டி மற்றவர்கள் மக்கள் மத்தியில் அறியப்படுவதில்லை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement