சீன ராணுவ அத்துமீறல் தக்க பதிலடி அவசியம்
லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், 2020- ஜூன், 15-ம் தேதி நள்ளிரவில், இந்திய எல்லைக்குள், சீன ராணுவத்தினர் ஊடுருவினர். அவர்களை நம் நாட்டு வீரர்கள் தடுத்த போது, இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற மோதலில், இந்திய வீரர்கள், 20 பேர் வீர மரணம் அடைந்தனர்.
இந்நிலையில், அருணாச்சல பிரதேசத்தின் தவாங் செக்டார் பகுதியில், இம்மாதம், ௯ம் தேதி, சீன ராணுவ வீரர்கள், ௨00க்கும் மேற்பட்டோர் கும்பலாக, இந்திய பகுதிக்குள் நுழைய முயன்றனர். இந்த ஊடுருவல் முயற்சியையும், நம் ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தி விட்டனர்.
அதாவது, அருணாச்சல பிரதேச எல்லை பகுதியில், தற்போதைய நிலைமையை மாற்ற, சீன ராணுவத்தினர் மேற்கொண்ட முயற்சி, இந்திய ராணுவ வீரர்களின் சிறப்பான கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கையால் முறியடிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, பார்லிமென்டில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதில் அளித்த ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், 'இந்திய பகுதிக்குள் ஊடுருவ முயன்ற சீன ராணுவ வீரர்களை, இந்திய வீரர்கள் சரியான நேரத்தில் தடுத்து நிறுத்தி விட்டதால், அவர் பின்வாங்கிச் சென்று விட்டனர். இந்திய தரப்பில் ராணுவ வீரர்கள் யாருக்கும் காயம் இல்லை' என்று கூறியுள்ளார்.
அதேநேரத்தில், இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த சீன வெளியுறவு அமைச்சகம், 'இந்திய - சீன எல்லைப் பகுதியில், நிலைமை சீராக உள்ளது. எல்லைப் பிரச்னை தொடர்பாக, இந்தியா - சீனா இடையேயான பேச்சு தடைபட்டு உள்ளது. அந்தப் பேச்சை ராணுவ ரீதியாகவும், துாதரக ரீதியாகவும் மீண்டும் தொடர வேண்டும்' என்று சப்பைக் கட்டு கட்டியுள்ளது.
சீனாவின் ஆளில்லா விமானங்கள், சமீப நாட்களில் இந்திய எல்லைப் பகுதியை நோக்கி அடிக்கடி வந்து சென்றுள்ளன. இதைக்கண்ட இந்திய ராணுவத்தினர் உஷார் நிலை அடைந்தனர்.
இதையடுத்து, அந்தப் பகுதியில், இந்திய விமானப்படை விமானங்களின் ரோந்தும் அதிகரிக்கப் பட்டுள்ளது.
இந்தியா - சீனா எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியிலிருந்து, ௧௦௦ கி.மீ., தொலைவில் உள்ள உத்தரகண்ட் மாநிலத்தில், இந்திய - அமெரிக்க ராணுவத்தினரின் கூட்டுப் பயிற்சி நடைபெற்றது. அதனால், எரிச்சல் அடைந்துள்ள சீன ராணுவத்தினர், அருணாச்சல பிரதேச தவாங் பகுதியில் அத்துமீறலில் ஈடுபட்டிருக்கலாம் என்று தெரிகிறது.
அதற்கேற்ற வகையில், இந்தியா - சீனா இடையே கையெழுத்தாகி உள்ள எல்லை தொடர்பான சில ஒப்பந்தங்களை மீறுவதாக, இந்திய அரசின் செயல்பாடுகள் உள்ளதாக, சீன அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்தியாவுடனான தங்களின் உறவுகளில், அமெரிக்கா தலையிடுவதை சீனா விரும்பவில்லை. இருப்பினும், எல்லையில் பதட்டத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகளில், அந்நாட்டு அரசு அக்கறை காட்டுவதில்லை. அதனால், சீன ராணுவத்தினரின் அத்துமீறல்கள் காரணமாக, இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவுகளானது மேலும் வலுப்பட்டு வருகிறது.
அதேநேரத்தில், எல்லையில் சீனப்படையினரின் அத்துமீறல்கள் அடிக்கடி நிகழ்வதை, தேசிய பாதுகாப்பு என்ற அம்சத்தில் மட்டும் கவனத்தில் கொள்ளாமல், சீன பொருட்களின் இறக்குமதியை இந்தியா அதிக அளவில் சார்ந்திருப்பதாலும், சீன ராணுவத்தினர் எல்லையில் வாலாட்டி வருகின்றனர் என்ற ரீதியிலும் கவனிக்க வேண்டும்.
இதைத் தவிர்க்க, 'மேன் இன் இந்தியா' திட்டம் வாயிலான, உற்பத்தி நடவடிக்கைகளை அதிகரித்து, சீனாவை அதிக அளவில் சார்ந்திருப்பதை தவிர்க்க வேண்டும். அப்போது, சீனாவின் ஏற்றுமதி குறையும். பொருளாதார ரீதியாக இப்படிப்பட்ட பாதிப்புகளை, சீனாவுக்கு இந்திய தரப்பில் அதிக அளவில் ஏற்படுத்தினால் மட்டுமே, அந்நாட்டு ராணுவத்தினரின் அத்துமீறல்கள் குறையும். இந்திய வீரர்கள் உயிர் பலியாவதும் தடுக்கப்படும்.
அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லையானது, இரு தரப்பினரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் முழுமையாக வரையறுக்கப்படவில்லை. அதுவும் பிரச்னை தொடர்வதற்கு காரணம். இந்த விஷயத்தில், இரு தரப்பினரும் துாதரக ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் பேச்சு நடத்தி, தீர்வு காண வேண்டியது அவசியம்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!