அண்மைக் காலங்களில் பலகோடிச் செலவில் நினைவிடங்களும், தலைவர்களின் அடையாளங்களும் உருவாக்கப்படுகின்றன. இன்று கூட ஐக்கிய நாடுகள் சபையில் காந்தி சிலை திறக்கப்படுகிறது. காந்தி வாழ்ந்த காலத்தில் அவரை மக்கள் கடவுளாகவே நினைத்தார்கள். அவருக்குத் தங்கள் செலவில் சிலை வைக்க முயற்சித்தார்கள். ஆனால் அதற்கு காந்தி கடும் எதிர்ப்பினைத் தெரிவித்தார்.
"இருபத்தையாயிரம் ரூபாய் செலவில் காங்கிரஸ் மைதானத்தில் வைப்பதற்காக எனது சிலை நிர்மாணிக்கப்பட்டு வருகிறது என்று கூறப்படுகிறது. அதைக் கண்டித்து எனக்குக் கடிதங்கள் வந்து குவிந்து கொண்டிருக்கின்றன. இந்தச் சிலையைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. அத்தகைய ஒரு சிலை நிர்மாணிக்கப்பட்டு வருவது உண்மையாயின், எனக்குக் கடிதம் எழுதியிருப்போரின் கண்டனத்தை நான் பலமாக ஆதரிக்கிறேன். நானே மண்ணாலான ஒரு மனிதன். ஒரு கை வளையலை ஜாக்கிரதையாக வைத்துக்கொண்டால் கூட, ஆயிரம் வருடங்கள் வரையில் அது அப்படியே இருக்கும். நானோ அதைவிட மிகவும் மெலிந்தவன். மனிதனின் உடல் நாள்தோறும் தேய்ந்து, ஆயுள் முடிந்ததும் சின்னாபின்னமாகி விடுகிறது. எனவே, இத்தகைய ஒரு மனிதனைப் போல் ஒரு மண் அல்லது உலோகச் சிலையை ரூ. 25,000 செலவு செய்து நிர்மாணிப்பது பணத்தை வீணாக்குவதாகும்."
சிலைகளுக்காகவும் படங்களுக்காகவும் அவர்கள் செலவு செய்யும் தொகையையாவது ஹரிஜன் சேவா சங்கம், அகில இந்திய நூற்போர் சங்கம், அகில இந்திய கிராமக் கைத்தொழில்கள் சங்கம் அல்லது ஹிந்துஸ்தானி தாலிமி சங்கம் முதலியவற்றின் அலுவல்களுக்கு அவர்கள் கொடுத்து உதவுவார்களாக" (ஹரிஜன் இதழ் 11.2.1939) என்று எழுதினார்.
அதுபோல ஒரு பொது இடத்தில் பல லட்சம் ரூபாய் செலவு செய்து காந்தி சிலை வைக்கப்போகிறார்கள் என்ற பேச்சு இருந்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துக் காந்திக்கும் கடிதங்கள் சென்றன. காந்தி இதற்குப் பதிலளிக்கையில், "என் சிலையைத் தயார் செய்யத் தொகை எதுவும் செலவு செய்வதை நான் பலமாக ஆட்சேபிக்கிறேன். அதிலும் குறிப்பாக, மக்கள் போதிய உணவும், உடையும் இல்லாமல் கஷ்டப்படும் சமயத்தில், சிலைக்காகப் பணம் செலவு செய்வதை நான் ஒப்புக் கொள்ளவே முடியாது. அழகான பம்பாய் நகரில், ஆரோக்கியமற்ற நிலைமை தாண்டவமாடுகின்றது. ஜன நெருக்கம் மிகவும் அதிகமாக இருக்கிறது.
ஏழை மக்கள் புளி மூட்டைகளைப் போல் அடைந்து கிடக்கிறார்கள். எனவே, ஏதாவது பொதுஜன நன்மைக்கான முறையில் அந்த ரூபாயைச் செலவு செய்வதே புத்திசாலித்தனமாகும். அதிக உணவுப் பயிர்களைச் சாகுபடி செய்வதற்காக அந்தத் தொகையைச் செலவழித்தால், பசியால் தவிக்கும் எத்தனை பேருடைய வயிறுகளை நிரப்பலாம் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள்" (ஹரிஜன் 21.9.1947) என்று எழுதினார்.
காந்திக்கு கோயில்
காந்திக்கு கோயில் என்று செய்தி ஒன்று வெளியான போது நடிகர், நடிகைகள் போல அதை ஏற்றுக்கொள்ளும் வகையில் காந்தி அமைதியாக இருந்து விடவில்லை. உடனடியாக அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்."இதை ஒரு மோசமான விக்கிரக வழிபாட்டு முறையாக நான் கருதுகிறேன். ஒரு மனிதரின் உள்ளத்தைக் கடவுள் ஒருவரால் மாத்திரமே அறிந்துகொள்ள முடியும். எனவே அபாயமில்லாத சிறந்த வழி என்னவெனில், உயிருடன் இருக்கும் அல்லது இறந்துவிட்ட எவரையும் வழிபடாமல் இருப்பதுதான். அப்பழுக்கற்ற பரிபூரண நிலை கடவுள் ஒருவரிடத்தில்தான் உண்டு. கடவுள்தான் சத்தியம். எனவே அவர் ஒருவரை மாத்திரமே பூஜிக்க வேண்டும்.
இந்தக் கோவிலின் சொந்தக்காரர் அங்கேயுள்ள எனது உருவத்தை அகற்றிவிட்டு, அந்தக் கட்டடத்தை நூற்கும் ஒரு ஸ்தாபனமாக மாற்றுவாராயின், அது எனக்கு ஆறுதலாகவும் வரவேற்கத்தக்கதாகவும் இருக்கும். அங்கே ஏழை மக்கள் ஊதியத்திற்காகப் பட்டை போட்டு நுாற்கலாம்; மற்றவர்கள் தியாகத்திற்காக அவ்விதமே செய்யலாம்; அவர்கள் யாவரும் கதர் கட்டிக் கொள்ளலாம். ராட்டினத்தையும் என்னையும் உண்மையாக வழிபடுவதும் இதுதான்." என்றார். (ஹரிஜன் 24.3.1946)
தெய்வமாக்கும் விபரீதம்
இன்றைக்கு நமக்கு பிடித்தமானவர்களை, "வாழும் கடவுளே" "வற்றாத அருள் தரும் கடவுளே" என்றெல்லாம் அழைத்துப் பூரித்துப் போகிறோம். இதற்குள் அர்த்தங்கள் இருக்கலாம். தனிமனிதனைக் கடவுளாக்குவது விபரீதம் என்றார் காந்தி.கன்னியாகுமரியிலிருந்து ஒருவர் காந்திக்கு, "இப் பகுதியில் நடைபெறும் ரதோற்சவங்களில் கடவுள் விக்கிரகத்தை ரதத்தில் வைத்து ஊர்வலம் செல்கிறார்கள். அந்த விக்கிரகத்தின் பக்கத்தில உங்களுடைய படத்தையும் வைத்து ஊர்வலம் செல்ல வேண்டும் என்று ஒரு பிரிவினர் விரும்புகிறார்கள். உங்களையும் கடவுளைப் போல் நினைத்து நடந்து கொள்வதை நீங்கள் விரும்ப மாட்டீர்கள் என்று மனப்பக்குவம் அடைந்த மற்றொரு பிரிவினர் கூறுகின்றனர். இந்த இரண்டு தரப்பினரும் தங்கள் கருத்துகளில் உறுதியாக இருக்கிறார்கள். அந்தக் கோஷ்டியினருக்குப் புத்திமதியாக ஒரு வார்த்தை கூற வேண்டுமென உங்களை வேண்டிக் கொள்கிறோம்'' எனக் காந்தியிடம் கேட்டிருந்தார்.
மதுரையிலிருந்து ஒருவர், ஆயிரம் தலைகள் உள்ள ஆதிசேஷனின் மடியில் காந்தி படுத்துக் கொண்டிருப்பதாக ஒரு படத்தை அனுப்பியிருந்தார். அதில் காந்தியின் ஒரு கையில் ஒத்துழையாமைச் சக்கரமும் மற்றொரு கையில் ராட்டினம் தொங்கவிடப்பட்டிருந்தது. இது குறித்துக் காந்தி கூறுகையில், "அந்தப் படத்தில், என் மனைவி எனது கால்களைப் பிடித்துக் கொண்டிருக்கிறாள். பாவம் அவள். சேஷநாகத்தின் உடலில் விஷ்ணு சயனம் செய்து கொண்டிருப்பதாக வைஷ்ணவச் சம்பிரதாயம் உண்டு. அந்த ஸ்தானத்தில் என்னை வைத்து கேலிக்கூத்தான இந்தப் படத்தை வரைந்திருக்கிறார்கள். வைதிகர்களான வைஷ்ணவர்கள் அதையெட்டி தங்களுடைய கோபத்தைப் பகிரங்கமாகத் தெரிவிக்க முன்வராமல் இருக்கலாம். என்றாலும், அந்தப்படம் அவர்களுடைய உணர்ச்சிகளைப் புண்படுத்தும். ஒரு மனிதரை இவ்விதமாக வணங்க முற்படுவது, ஆட்சேபகரமான விக்கிரக வழிபாட்டின் எல்லையை எட்டுவதாக இருக்கிறது. எனது உணர்ச்சிகளுக்கு அவர்கள் மரியாதை காட்ட விரும்பினால், ரதோற்சவத்தின்போது ரதத்தில் என் படத்தை வைக்க விரும்புவோரும், மனதைப் புண்படுத்தும் படத்தின் பிரசுரகர்களும் அத்தகைய நடவடிக்கைகளைத் தவிர்ப்பார்களாக. தேச பக்தியை, உணர்ச்சியைக் காட்டவும், வளர்க்கவும் ஆட்சேபிக்க முடியாத வேறு பல சிறந்த வழிகள் இருக்கின்றன" என்றார். (யங் இந்தியா' 4.6.1931).
மூட நம்பிக்கை
"ஏற்கனவே நமது தேசத்தில் போதிய அளவு மூட நம்பிக்கை நிலவி வருகிறது. மனிதனை வழிபடும் முறைகள் யாவும் எனக்கு நடுக்கத்தை உண்டாக்குகின்றன. ஒரு நபரின் தரும குணத்தை வழிபடுவதில் எனக்கு நம்பிக்கை உண்டு. அதுவும், அவரது மரணத்திற்குப் பிறகுதான் அக்குணத்தை வழிபட வேண்டும். உடல் அழியக்கூடியது. தருமத்திற்கு அழிவில்லை. கள்ளங்கபடமற்ற மக்களுக்கு, மூடநம்பிக்கையுள்ள ஒரு வழக்கத்தைப் பின்பற்ற உற்சாகம் அளிப்பது ஒரு பாவமாகும்" (யங் இந்தியா' 20.11.1924) என வேதனைப்பட்டார் காந்தி. காந்தியின் முற்போக்குச் சிந்தனைகள், மூடநம்பிக்கை எதிர்ப்பு போன்றவை நமக்கு அவர் மீதான மதிப்பை அதிகப்படுத்துகிறது. தனது சிலையை மட்டுமல்ல.. ராட்டையைக் கூட அவர் சின்னமாக வைத்துக்கொள்ள விரும்பமாட்டார் என்பதே நிஜம்.
ப.திருமலைபத்திரிகையாளர் மதுரைthirugeetha@gmail.com
எப்படி எல்லாம் யோசித்தது இருக்கிறார் மஹாத்மா .இன்று இறைச்சி ஏற்றுமதியில் முதலிடம் .மது வருமானத்தை நம்பி அரசு .இரண்டு ஆயிரம் கோடிக்கு சிலைகல் .அவர் நினைப்புக்கு நேர் மறையாக அனைவரும் ஆட்சி செய்கிறார்கள் .