குஜராத் மாநிலத்தில், சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், பா.ஜ., அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. அத்துடன், மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து ஏழு முறை ஆட்சியை பிடித்து சாதனை செய்தது போல, இங்கும் பா.ஜ., வரலாற்று சாதனை படைத்துள்ளது.
அதுமட்டுமின்றி, பா.ஜ., மேலிட தலைவர்களே வியக்கும் வகையில், இதுவரை இல்லாத வகையில், அம்மாநிலத்தில் மொத்தமுள்ள, 182 சட்டசபை தொகுதிகளில், 156 தொகுதிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கிறது. இதன் வாயிலாக, காங்கிரஸ் மற்றும் தங்களது சொந்தக் கட்சியின் முந்தைய சாதனைகளை முறியடித்திருக்கிறது.
இந்த வெற்றியின் வாயிலாக, 13 ஆண்டுகளாக மாநிலத்தில் முதல்வராக பதவி வகித்த, தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி மீது, குஜராத் மக்கள் இன்னும் அபார நம்பிக்கை வைத்திருப்பது தெரியவந்துள்ளது. 2014ல் மோடி பிரதமராக பதவியேற்ற பின், புதுடில்லிக்கு இடம் பெயர்ந்து விட்டார்.
இந்த எட்டு ஆண்டுகளில், குஜராத் மாநிலமானது ஆனந்திபென் படேல், விஜய் ரூபானி, பூபேந்திர படேல் என, மூன்று முதல்வர்களை கண்டுள்ளது. இருந்தாலும், யார் முதல்வர் பதவியில் உள்ளனர் என்பதை கவனத்தில் கொள்ளாமல், மோடியின் வேண்டுகோளை ஏற்று, பா.ஜ.,வுக்கு குஜராத் மக்கள் அமோக ஆதரவு தந்துள்ளனர்.
பிரதமர் மோடியும், அவரது நம்பிக்கைக்குரிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், மத்திய அரசில் கோலோச்சி வந்தாலும், குஜராத் மாநிலத்தின் நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சி திட்டங்களில் சிறப்புக் கவனம் செலுத்தி வந்துள்ளனர்.
அதனால் தான், பஞ்சாபில் ஆட்சியை பிடித்த, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சி, குஜராத்தில் புதிதாக தேர்தல் களமிறங்கி கடும் சவாலை உருவாக்கினாலும், அதை வெற்றிகரமாக முறியடித்துள்ளது பா.ஜ.,
அதேநேரத்தில், குஜராத்தில் ஆத் ஆத்மி கட்சி களமிறங்கியதால், அதிகம் பாதிக்கப்பட்டது காங்., கட்சியே. 2017ல் இங்கு நடந்த சட்டசபை தேர்தலில், காங்கிரஸ், 77 இடங்களில் வெற்றி பெற்று, பா.ஜ.,வுக்கு கடும் போட்டியை உருவாக்கியது. ஆனால், இம்முறை வெறும், 17 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அத்துடன் ஓட்டு வங்கியும் பெருமளவு சரிந்துள்ளது.
ஆத் ஆத்மியும், காங்கிரசும் பல்வேறு இலவச வாக்குறுதிகளை அறிவித்தன. அவற்றை எல்லாம் குஜராத் மக்கள் புறந்தள்ளி விட்டனர் என்றாலும், ஆம் ஆத்மி கட்சி இம்மாநிலத்தில் தன் கணக்கை துவக்கி விட்டது. அதேநேரத்தில், ஆட்சி மாற்றத்தை குஜராத் மக்கள் விரும்பவில்லை என்பதும் தெளிவாகியுள்ளது.
குஜராத்தில் கிடைத்துள்ள பிரமாண்டமான வெற்றி, கர்நாடகா, ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில், அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலை சந்திக்க பா.ஜ.,வுக்கு ஒரு உத்வேகமாக அமையும் என்றாலும், டில்லி மாநகராட்சி மற்றும் சில மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தல்களின் முடிவுகளும், மலை மாநிலமான ஹிமாச்சல பிரதேசத்தின் சட்டசபை தேர்தல் முடிவுகளும், பா.ஜ.,வுக்கு சாதகமாக இல்லை என்பது, அந்தக் கட்சிக்கு பாதகமான அம்சமே.
அத்துடன், குஜராத் வெற்றியை நினைத்து பெரிய அளவில் பெருமைப்பட முடியாத நிலைமையை ஏற்படுத்தியுள்ளன.மேலும், ஹிமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் முடிவுகள் ஒரு பாடமாகவும் அமைந்துள்ளன. அதுமட்டுமின்றி, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தல்களையும், 2024ல் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலையும், பா.ஜ., எச்சரிக்கையாகவும், கவனமாகவும் அணுக வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளன.
பா.ஜ., ஆளும் மாநிலங்களில், மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் விஷயத்தில், கட்சி மேலிடமும், மோடி அரசும் அதிகம் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. எந்தவிதமான மெத்தனத்திற்கும் இடம் கொடுக்காமல், பா.ஜ., தலைவர்களும், தொண்டர்களும் களப்பணியாற்றினால் மட்டுமே, அடுத்தடுத்த தேர்தல்களில் வெற்றிகளை காண முடியும்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!