பணி நிமித்தமாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்துக்கு சித்ராவும், மித்ராவும் வந்திருந்தனர்.
மரத்தடியில் இருந்த இருக்கையில் அமர்ந்த சித்ரா, ''என்ன மித்து, மேயரின் வீடியோ, அவரது கணவர் ஆடியோ ஆளுங்கட்சிக்குள் புகைச்சலை கிளப்பி விட்டிருக்காமே,'' என கிளறினாள்.
''ஆமாக்கா, குப்பை கிடங்குல ஊழல், முறைகேடு நடக்குற மாதிரி வீடியோ பதிவு செஞ்சு, தி.மு.க., ஆட்சி மீதே சேறை வாரி இறைச்சு ஊத்துனதுனால, கட்சிக்காரங்க அதிருப்தியில இருக்காங்க.
கட்சி தலைமைக்கு ஏகப்பட்ட பெட்டிஷன் அனுப்பியிருக்காங்க. துறை அமைச்சரான நேருவுக்கும் ஆடியோ, வீடியோ அனுப்பி வச்சிருக்காங்க.
தலைமை செயற்குழு உறுப்பினரா இருக்கற மேயர் கணவர், சொந்த கட்சிக்காரங்க மீதே புகார் சொல்லலாமான்னு நிர்வாகிகள் பலரும் புலம்பிட்டு இருக்காங்க.
'பொறுப்பானவர்' பரிந்துரையில நியமிக்கப்பட்டவருங்கறதுனால, இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்காம இருக்காங்க. அதேநேரம், பொறுப்பானவர் தரப்புல இருந்து, செம 'டோஸ்' விழுந்துச்சாம்,''
''அதெல்லாம் இருக்கட்டும். அ.தி.மு.க., கூடாரம் கலகலத்து போயிருக்கே,''
''முன்னாள் மேயர் ராஜ்குமார், முன்னாள் எம்.பி., நாகராஜன், முன்னாள் எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி வரிசையில், கோவை செல்வராஜ் தி.மு.க.,வுல இணைஞ்சாரு. இப்போ, இ.பி.எஸ்., ஆதரவாளரா இருந்த, மேயர் வேட்பாளரா பேசப்பட்ட கிருபாளினி, அவரது கணவர் செந்தில் கார்த்திகேயன் உள்ளிட்டோரை இணைச்சிருக்காங்க. இவரு, 'ரியல் எஸ்டேட்' பிசினஸ் பார்க்குறாரு.
தொழில் ரீதியா நெருக்கடி கொடுத்ததால, ஆளுங்கட்சிக்கு போயிட்டாருன்னு அ.தி.மு.க., தரப்புல பேசிக்குறாங்க. தி.மு.க., அலுவலகத்தை நீலாம்பூரில் கட்டுறதுக்கு இடம் தேர்வு செஞ்சு கொடுத்ததே அவருதானாம்.
''அடுத்ததா, 'ரியல் எஸ்டேட்' பிசினஸ்ல கொடி கட்டி பறக்குற அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வை துாக்குறதுக்கும் 'ஸ்கெட்ச்' போட்டிருக்காங்களாம். ஒன்பது எம்.எல்.ஏ.,க்களில் மூணு பேரை, எம்.பி., எலக்சனுக்கு முன்னாடி துாக்கறதுக்கு பிளான் இருக்குதாம்.
'மாஜி'க்கு பக்கபலமா இருக்கறவங்களை ஒவ்வொருத்தரா துாக்கிட்டு, கட்சியில அவரை தனி மரமா நிக்க வைக்கணுங்கிறதுதான், ஆளுங்கட்சிக்காரங்க திட்டமாம்,''
அப்போது, இ-சேவை மையத்தை தேடிக்கொண்டிருந்த தம்பதிக்கு வழிகாட்டிய சித்ரா, ''வடக்கு தாலுகா ஆபீசில் வேலைபார்க்குற இ-சேவை மைய ஊழியர் ஒருத்தர், புரோக்கர்களுக்கு மட்டுமே செஞ்சு கொடுக்குறாராம்; பொதுமக்கள் நேரடியா வந்தா, திருப்பி அனுப்பிர்றாராம்,'' என கூறியபோது, மொபைல் போனுக்கு அழைப்பு வந்தது.
அதை எடுத்து பேசிய சித்ரா, ''என்ன சுந்தர், நீங்களே இப்படி செய்யலாமா...வைங்க போனை,'' எனக் கூறி, கோபத்துடன் இணைப்பை துண்டித்து விட்டு, ''கார்ப்பரேஷன் ஆபீசர்களுக்கு துணிச்சல் ஜாஸ்தின்னு நினைக்கிறேன்,'' என, 'சப்ஜெக்ட்' மாறினாள்.
''என்னாச்சு, ஆக்கிரமிப்பு கட்டடங்களை துணிச்சலா இடிச்சிட்டாங்களா என்ன?''
''அதெல்லாம் செஞ்சிருந்தா, பாராட்டலாமே. துபாய் கம்பெனி, நம்மூர்ல ஷாப்பிங் மால் கட்டிட்டு இருக்கு. சொத்து வரி நிர்ணயிக்கறதுக்காக கார்ப்பரேஷன்ல கொடுத்த அப்ளிகேசனை, ஒன்றரை மாசமா, 'பெண்டிங்' போட்டுட்டாங்களாம். மேலிடத்துல இருந்து அழுத்தம் கொடுத்த பிறகு, சில ஆபீசர்ஸ் போயி, நீளம் அகலத்தை அளந்து பார்த்துருக்காங்க.
பிறகு, 36 ஆயிரம் ரூபாய் 'பைன்' போட்டு, சொத்து வரி நிர்ணயிச்சுக் கொடுத்திருக்காங்களாம். நகரமைப்பு பிரிவுல இருந்து, நோட்டீஸ் கொடுத்த விவகாரமும் அனலாய் கொதிச்சிட்டு இருக்குதாம்,''
''இதுவாவது பரவாயில்லை. நரசிம்மநாயக்கன் பாளையத்துல லஞ்சம் கொடுக்காம, சொத்து வரி நிர்ணயிக்கறதே இல்லையாம்,''
''அப்படியா,'' என, வாயை பிளந்தாள் சித்ரா.
''ஆமாக்கா, நரசிம்மநாயக்கன்பாளையம் ஏரியா 'ஹாகா' எல்லைக்கு உட்பட்டதால, புதுசா வீடு கட்ட 'அப்ரூவல்' தர்றதில்லை; வரியும் நிர்ணயம் செஞ்சு, 'வாட்டர் கனெக்சன்' கொடுக்கறதில்லை.
ஆனா, ஏற்கனவே கட்டுன கட்டடங்களுக்கு இப்போ, வரி விதிச்சுக் கொடுக்குறாங்களாம். இதுக்கு ஒரே ஒரு நிபந்தனையா, வரி விதிப்பு தொகையோடு, கூடுதலா, 10 ஆயிரம் ரூபாய் 'கப்பம்' கட்டணுமாம்.
லஞ்சப்பணம் கொடுத்தா மட்டும், வரி நிர்ணயம் செஞ்சு கொடுக்குறாங்களாம். ஆனா, நம்மூரு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், கவர்மென்ட் ஆபீஸ் பக்கம் எட்டியே பார்க்க மாட்டேங்கிறாங்க. ஒரு வேளை, தி.மு.க., ஆட்சிக்கு கெட்ட பெயர் வந்திரும்னு நினைப்பாங்க போலிருக்கு,'' என்றபடி, ஹெல்மெட் அணிந்து கொண்டு, ஸ்கூட்டரை 'ஸ்டார்ட்' செய்தாள் மித்ரா.
பின் இருக்கையில் அமர்ந்து கொண்ட சித்ரா, தெற்கு தாலுகா அலுவலகத்தை ஸ்கூட்டர் கடந்தபோது, ''மித்து, பட்டா மாறுதலுக்கு யாராச்சும் 'அப்ளிகேசன்' கொடுத்தால், 'ஸ்பாட்'டுக்கு நேரில் வந்து பார்த்துட்டு தான் கையெழுத்து போடுவேன்னு, கிழக்கு மண்டல கார்ப்பரேஷன் ஆபீசுல இருக்குற சர்வே செக்சன் அலுவலர் அடம் பிடிக்கிறாராம். 'ஸ்பாட்டு'க்கு வர்றதுக்கு விண்ணப்பதாரரே, கார் ஏற்பாடு செஞ்சு கொடுக்கணும்னு கண்டிஷன் வேற போடுறாராம். அதனால கொந்தளிச்ச பொதுமக்கள், அவரை சூழ்ந்துக்கிட்டு, வாக்குவாதம் செஞ்சாங்களாம்,''
''மித்து, இது கூட பரவாயில்லை. கணபதி பகுதியை சேர்ந்த வி.ஏ.ஓ., ஒருத்தரு, ஜாதி, வருமானம், இருப்பிட சான்று கேட்டு வர்றவங்ககிட்ட, மொபைல் போனுக்கு ரீ-சார்ஜ் செஞ்சு கொடுக்கச் சொல்றாரு; இல்லேன்னா, 500 ரூபாய் 'ஜீ பே' அனுப்புங்கன்னு சொல்றாராம்.
குறுஞ்செய்தி வந்தபிறகுதான் கையெழுத்து போடுறாராம். வி.ஏ.ஓ., - ஆர்.ஐ., - தாசில்தார் ஆபீசுக்கு திடீர் ஆய்வு செஞ்சு, டி.ஆர்.ஓ., லீலா, நிர்வாகத்தை சீர்படுத்தணும்னு மக்கள் விரும்புறாங்க,''
செஞ்சிலுவை சங்க ரவுண்டாவை கடந்து சென்றபோது, கமிஷனர் அலுவலகத்தை பார்த்ததும், ''போலீஸ் கமிஷனர், 10 நாள் லீவுல போறாராம்; அவரது பணியை, ஐ.ஜி., கூடுதலா கவனிப்பாராம்,'' என்ற சித்ரா, ''டி.ஜி.பி., சைலேந்திர பாபு நம்மூருக்கு வந்திருந்தாரே; எதுக்காம்,'' என கேட்டாள்.
''மாரத்தான் போட்டியில் கலந்துக்கிறதுக்காக வந்த அவரு, போலீஸ்காரங்க கரெக்டா வேலை பார்க்குறாங்களான்னு கண்காணிக்க, யுனிபார்ம்ல 'சிட்டி'க்குள்ள ஒரு ரவுண்டு வந்திருக்காரு. சத்தியமங்கலத்துக்கு போற வழியில, சரவணம்பட்டி ஸ்டேஷனுக்குள்ள நுழைஞ்சிட்டாரு.
அங்கிருந்த போலீஸ்காரங்க வெலவெலத்து போயிட்டாங்க. போலீஸ்காரங்ககிட்ட கொஞ்ச நேரம் பேசியிருக்காரு. புகார் கொடுக்க வந்தவங்கள்கிட்ட, 'போலீஸ் ஸ்டேஷன் எப்படி இருக்கு, புகாரை ஒழுங்கா விசாரிக்கிறங்களா'னு கேட்டிருக்காரு.
டி.ஜி.பி., வந்த நேரம் ஸ்டேஷன்ல இருந்ததால, தலை தப்பிருச்சுன்னு இன்ஸ்., செல்வராஜ் நிம்மதி பெருமூச்சு விட்டாராம்,'' என்ற மித்ரா, ஸ்டேட் பாங்க் ரோடு வழியாக வந்து, லங்கா கார்னர் பாலத்தை கடந்து, டவுன்ஹால் நோக்கி, ஸ்கூட்டரை திருப்பினாள்.
ஆம்புலன்ஸ் சத்தத்தை கேட்ட சித்ரா, ''கொஞ்ச நாளைக்கு முன்னாடி, நம்மூருக்கு வந்திருந்த ஹெல்த் மினிஸ்டர், கவர்மென்ட் ஆஸ்பத்திரிக்கும் ஆய்வுக்கு போயிருந்தாராம். அவர் கண்ல எந்த குறையும் தெரியக்கூடாதுன்னு, வரிசையா ஊழியர்களை நிறுத்தி இருந்தாங்க. பல இடங்களில் வெள்ளை துணியை தொங்க விட்டு மறைச்சிருந்திருக்காங்க,'' என்றாள்.
''புயல்னு சொன்னதும் எனக்கொரு விஷயம் ஞாபகத்துக்கு வருது. ஆளுங்கட்சியை விமர்சனம் செய்து, போராட்டம் அறிவிச்சிருந்த அ.தி.மு.க., புயலை காரணம் காட்டி, ஒரு வாரத்துக்கு ஒத்தி வச்சிருக்கு.
இன்னொரு புயல் வரப்போறதா அறிவிப்பு வந்திருக்கிறதுனால, ஆள் திரட்டி பலம் காட்ட வேண்டிய நெருக்கடியில இருக்கற, இலைக்கட்சி நிர்வாகிகள், மறுபடியும் போராட்டத்தை ஒத்திவச்சா நல்லாயிருக்கும்னு புலம்பிட்டு இருக்காங்க,''
''இதே மாதிரி, புறநகரை சேர்ந்த ஆளுங்கட்சி நிர்வாகிகளும் புலம்பிட்டு இருக்காங்க. 'பெர்மிட்' இல்லாம மண் எடுக்குறது; லாட்டரி விற்பனை; தாபா ஓட்டலில் மது விற்பனையில வர்ற வருமானத்தை, கரூர் 'டீம்' அள்ளுது.
ஆனா, பிறந்தநாள் விழா, தலைவர்கள் வரவேற்பு, ஓட்டுச்சாவடி முகவர்கள் கூட்டத்துக்கு லட்சக்கணக்குல செலவு செய்ய சொல்றாங்க; வரவெல்லாம் ஒரு பக்கம் போகுது; செலவெல்லாம் எங்கள் தலையில் விழுது'ன்னு புலம்புறாங்க. இப்போ, கார்ப்பரேஷன் டெண்டர் எடுக்குறதிலும் கரூர் 'டீம்' மூக்கை நுழைக்க ஆரம்பிச்சிருக்காம்,''
டவுன்ஹால் கார்ப்பரேஷன் அலுவலகத்துக்குள், வண்டியை ஓரங்கட்டிய மித்ரா, ''அன்னுார் தொழிற்பேட்டைக்கு நிலம் எடுப்பு எடுக்குற விவகாரத்துல, பா.ஜ.,வும், அ.தி.மு.க.,வும் களமிறங்கி, அரசியல் செய்ய ஆரம்பிச்சதால, ஆளும் தரப்பு உஷாராகிடுச்சு.
ரெண்டு நாளைக்கு முன்னாடி, கோவைக்கு வந்திருந்த நில நிர்வாக ஆணையர் நாகராஜன், நிலம் எடுக்குறது சம்பந்தமா, வருவாய்த்துறை அலுவலர்களுடன் ஆலோசனை பண்ணியிருக்காரு. அவரது அறிக்கை அடிப்படையில், அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும்னு அதிகாரிகள் சொல்றாங்க.
இதுக்கிடையே, சிப்காட் தொழில்பூங்கா கூட்டமைப்பு உதயமாகியிருக்கு. இந்த அமைப்பை சேர்ந்தவங்க, கலெக்டரை நேரில் சந்திச்சு, கண்டிப்பா தொழிற்பேட்டை அமைக்கணும்னு, பெட்டிஷன் கொடுத்திருக்காங்க,'' என்றாள்.
''அதெல்லாம் இருக்கட்டும். ஆளுங்கட்சிக்காரங்க மிரட்டியதால, குப்பை அள்ளிக்கிட்டிருந்த பேட்டரி ஆட்டோவை ஓரங்கட்டிட்டாங்களாமே...'' என, 'ரூட்' மாறினாள் சித்ரா.
''அதுவா, சூலுார் பேரூராட்சிக்கு புதுசா பேட்டரி வாகனங்கள் கொடுத்திருக்காங்க. உடனே, மாலை அணிவிச்சு, குப்பை அள்ள ஆரம்பிச்சாங்க. ஆளுங்கட்சியை சேர்ந்தவங்க, அமைச்சர் பெயரை சொல்லி, 'நீங்களா எப்படி தன்னிச்சையா குப்பை வண்டி ஓட்டலாம்'னு மிரட்டியிருக்காங்க. அதனால, அந்த வண்டிகளை ஓட்டாம, ஓரங்கட்டி நிறுத்தி வச்சிட்டாங்க,'' என்ற மித்ரா, ''குப்பை கிடங்கு விவகாரத்துல சிக்குன ஆளுங்கட்சி கவுன்சிலரை, சமூக வலைதளத்துல நெட்டிசன்கள் கழுவி, கழுவி ஊத்துறாங்களாமே...'' என கேட்டாள்.
''அதுவா, வெள்ளலுார் குப்பை கிடங்கில் மேயர் ஆய்வு செஞ்ச வீடியோவுல சில கவுன்சிலர்கள் பெயரை சொன்னாங்கள்ல. அதுல ஒரு கவுன்சிலர், கோவாவுக்கு போயிருந்த போட்டோவை 'வாட்ஸ் அப்' - 'ஸ்டேட்டஸ்' வச்சிருக்காரு.
அதை பார்த்த பொதுமக்கள், 'குப்பையில் அள்ளிய பணம்; கோவாவில் கரையுது. வார்டு பிரச்னையை எப்போ தீர்ப்பாரோ' என, கமென்ட் அடிச்சிருக்காங்க,'' என்றபடி, கேன்டீனுக்குள் நுழைந்தாள் சித்ரா.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!