அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் தங்கமணி பேச்சு:
தமிழகத்தில் சொத்து வரி, மின் கட்டணம், பால் உள்பட அனைத்து பொருட்களின் விலை உயர்வால், மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர். தி.மு.க., ஆட்சியின் அவலத்தை மக்களிடம் கொண்டு செல்ல, தமிழகம் முழுதும், அ.தி.மு.க.,வால் போராட்டம் நடத்தப்படுகிறது.
எல்லா அடியையும் மக்கள் வாங்கிட்ட பிறகு, எட்டி பார்த்து, 'வலிக்குதா'ன்னு கேட்கிற மாதிரி இருக்கு, இவங்க போராட்டம் நடத்துறது!
இந்திய கம்யூ., மாநில செயலர் முத்தரசன் பேட்டி:
'டேங்க் ஆப்பரேட்டர்'களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். தி.மு.க., அரசு தன் தேர்தல் அறிக்கையில் சிலவற்றை செயல்படுத்தி உள்ளது; பலவற்றை செயல்படுத்தவில்லை. மத்திய பா.ஜ., அரசின், 'அக்னிபத்' போன்றவற்றை எதிர்க்கும், தி.மு.க., அரசு, தமிழகத்தில் ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்.
இதை எல்லாம் தமிழக அரசு செய்யாட்டி, கூட்டணியில இருந்து வெளியில போயிடுவாராமா?
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:
சுதந்திர போராட்ட வீரரும், கவிஞருமான அர்த்தநாரீச வர்மா, பாரதியாரின் சம காலத்தை சேர்ந்தவர். பாரதியார் இறந்த போது, அவருக்கு இரங்கற்பா பாடியவர். 1934-ல், திருவண்ணாமலைக்கு காந்தி வந்த போது, மக்கள் சார்பில் பாராட்டு பத்திரம் வழங்கியவர். மதுவிலக்கை வலியுறுத்தி, தமிழகம் முழுக்க பிரசாரம் செய்தார். இதுவே, ராஜாஜி மதுவிலக்கை அமல்படுத்த காரணமாக அமைந்தது.
அர்த்தநாரீச வர்மா பிரசாரத்தால, மதுவிலக்கு வந்திருக்கு அப்போ... டாக்டரும் இப்போ எவ்வளவோ போராடித்தான் பார்க்கிறார்... ஆளுங்கட்சி அசைய மாட்டேங்குதே!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை அறிக்கை:
தாய்மொழி கல்வி அவசியம் என்றாலும், பொறியியல் படிப்புக்கென துவக்கப்பட்ட தமிழ் வழி பாடப்பிரிவுகளில், மாணவர்கள் சேர ஆர்வம் காட்டவில்லை. வேலைவாய்ப்பு குறித்த அச்சம், தமிழில் படித்த பிறகு, மேல் படிப்பை தொடர முடியுமா என்ற ஐயப்பாடு தான் இதற்கு காரணம். இது குறித்து, அரசு ஆழமாக ஆராய்ந்து வழி காண வேண்டும்.
ஒரு கொள்கையை வகுக்கும் முன்பே, அதனால் ஏற்படும் சாதக, பாதகங்கள் குறித்து யோசிக்கணுமா; வேண்டாமா?
அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா அறிக்கை:
வட மாநிலத்தவர் தமிழகத்திற்கு அதிகம் வரக் காரணமே, மது அடிமைகள் தமிழகத்தில் அதிகமானது தான். இதை ஆட்சியாளர்கள் கண்டுகொள்வதே இல்லை. ஒரு நபருக்கு இத்தனை மது பாட்டில்கள் தான் என்று நிர்ணயிப்பது, குடி நோயாளிகள் அதிகமாவதை தடுப்பதற்கான சிறந்த வழியாக அமையும்.
ரேஷன் சர்க்கரைக்கு, ஒருவருக்கு இத்தனை கிலோ தான் என, அளவுகோல் வைத்துள்ள அரசு, குடி கெடுக்கும் மதுவுக்கும் அளவு வைத்தால் என்ன?
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!