எரிமலை ஏற்படுத்திய தடை
ஹவாய் தீவிலுள்ள மவுனா லோவா எரிமலை கொந்தளித்தபோது, 60 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்துவந்த ஒரு அறிவியல் செயல்பாடு தடைபட்டது. அது என்ன தெரியுமா? காற்று மண்டலத்தில் கலக்கும் கார்பன் - டை - ஆக்ஸைடின் அளவை தொடர்ந்து அளந்து பதிவிட்டு வரும் கருவி இங்கு இருக்கிறது.
இதை ஸ்க்ரிப்ஸ் கடலாராய்ச்சி நிலையம் பராமரிக்கிறது. அண்மையில் எரிமலைப் பிழம்புகள் இந்த நிலையத்திற்கு அருகே ஓடியதால், மின்வெட்டு ஏற்பட்டு, தகவல் சேகரிப்பு தடைப்பட்டது. சில நாட்களுக்கு அந்நிலையம் செயல்படவில்லை.
பி.வி.சி., பிளாஸ்டிக்குக்கு மறு வாழ்வு
மறுசுழற்சிக்கு சவாலாக இருப்பது பி.வி.சி பிளாஸ்டிக்குகள்தான். இதற்கு தீர்வு கண்டுள்ளனர் அமெரிக்காவின் மிக்சிகன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள்.
வெப்பத்தின் மூலமே பிளாஸ்டிக்குகள் மறுசுழற்சி செய்யப்படும். ஆனால், வெப்பமூட்டினால், பி.வி.சி வெளியிடும். பொருட்களில் ஹைட்ரோகுளோரிக் அமிலமும் ஒன்று. இதற்கு தீர்வாக, மிச்சிகன் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள மின்வேதியல் முறை, ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை, பிரித்து, பிற பொருட்களைத் தயாரிக்கும் மூலப்பொருளாக மாற்றித்தருகிறது.
துப்பாக்கி ஏந்திய போலீஸ் ரோபோ
அமெரிக்காவிலுள்ள சான் பிரான்சிஸ்கோவில், மனிதர்களை சுடும் ரோபோக்களை பயன்படுத்த ஆலோசித்து வருகிறது காவல்துறை. பள்ளிகள், உணவகங்கள் போன்ற பொது இடங்களில் புகுந்து அப்பாவிகளை சரமாரியாக சுட்டுக் கொல்லும் சைக்கோ கொலையாளிகளை தடுக்க, இந்த ரோபோக்கள் பயன்படும் என கோரிக்கையில் தெரிவித்துள்ளது காவல் துறை.
தொலைவியக்க முறையில் ரோபோவை அனுப்பி, கொலையாளியை துல்லியமாக சுடமுடியும் என்றும், பல அப்பாவிகள் இதனால் சீக்கிரம் காப்பாற்றப் படுவர் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
10 லட்சம் ஆண்டு பழைய மண்டையோடு
மத்திய சீனாவில், உலகிலேயே மிகப் பழைய மனித மண்டையோடு கிடைத்துள்ளது. பத்து லட்சம் ஆண்டுகளுக்கு முன், இரு கால்களால் நடக்கப் பழகிய மனித இனத்தைச் சேர்ந்த மண்டையோடு அது.
வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தில், யூரேசியா பகுதியில் வாழ்ந்த ஆதி மனித இனங்களைப் பற்றிய ஆய்வுக்கு இந்தக் கண்டுபிடிப்பு உதவும். 'யுன்சியான் மனிதன்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மண்டையோடு துளியும் சிதிலமடையாமல் இருப்பதால், மானுடவியல் மற்றும் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
உலகின் பெரிய ரேடியோ தொலைநோக்கி
ஆஸ்திரேலியாவிலும் தென்னாப்ரிக்காவிலும் அமையவிருக்கும் உலகின் மிகப் பெரிய ரேடியோ தொலைநோக்கிக்கான வேலைகள் தொடங்கிவிட்டன.
இரு நாடுகளிலும் ஆயிரக் கணக்கான ஆண்டெனாக்களை நிறுவுவதன் மூலம், விண்வெளி ஆராய்ச்சிக்கு வேண்டிய அதி துல்லிய ரேடியோ தொலைநோக்கியை உருவாக்குவதே விஞ்ஞானிகளின் நோக்கம்.
ஒன்றாக சேர்ந்து செயல்படவிருக்கும் இரு நாட்டு மையங்களில் நிறுவப்படவுள்ள ஆண்டனாக்களின் மொத்த பரப்பளவு ஒரு சதுர கிலோ மீட்டராக இருக்கும். அதனால்தான் இத்திட்டத்திற்கு 'சதுர கி.மீ தொகுப்பு' என்று பெயரிடப்பட்டுள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!