ரயிலில் கேரளா செல்வதற்காக, சித்ராவும், மித்ராவும் கோவை ரயில்வே ஸ்டேஷனில் காத்திருந்தனர். ரயில் வருவதற்குநேரமிருந்ததால், இருவரும் நடைமேடையில் பேசிக் கொண்டே நடந்து கொண்டிருந்தனர். மேட்டுப்பாளையம் ரயில் பற்றிய அறிவிப்பைக் கேட்டதும் மித்ரா ஆரம்பித்தாள்...
''பரவாயில்லைக்கா...எப்பிடியோ பழையபடி மேட்டுப்பாளையம் டிரெயின் 'டிரிப்'பை அதிகப்படுத்திட்டாங்க. மக்களுக்கு பெரிய 'ரிலீப்'தான்!''
''ஆனாலும், நம்ம ஊரு ஸ்டேஷன்களை டெவலப் பண்ணனும்கிறதுல ஆரம்பிச்சு, சென்னை, தென் மாவட்டங்களுக்கு டிரெயின் விடணும்னு, ஏகப்பட்ட 'டிமாண்ட்ஸ்' இருக்கு.
''நம்ம ஊருல தாலுகா ஆபீஸ், ஆர்.டி.ஓ., ஆபீஸ்கள்ல புரோக்கர்கள் சுத்துறதுமாதிரி, இப்போ நம்ம ஊரு பி.எப்., ஆபீஸ்லயும் ஏகப்பட்ட புரோக்கர்ஸ் சுத்துறாங்க. பணம் உடனே எடுத்துக் கொடுக்குறோம், என்ன வேலைன்னாலும் முடிச்சுக் கொடுக்குறோம்னு, மக்கள்ட்ட பணம் கறக்குறாங்களாம். ஆபீசர்களே என்ன பண்றதுன்னு தெரியாம முழிக்கிறாங்க!''
சித்ரா சொன்ன மேட்டரை காதில் போட்டுக் கொண்டு, பழைய மேட்டரையே தொடர்ந்தாள் மித்ரா...
''அக்கா! போன வாரம் நம்ம சிட்டி போலீஸ் படாதபாடு பட்டுட்டாங்க...இந்நாள் முதல்வர், முன்னாள் முதல்வர்கள் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., சென்ட்ரல் மினிஸ்டர் முருகன்னு ஏகப்பட்ட வி.ஐ.பி.,கள், ஒரே வாரத்துல குவிஞ்சிட்டாங்க. பந்தோபஸ்து கொடுக்குறதுக்குள்ள, போலீசுக்குப் போதும் போதும்னு ஆயிருச்சு!''
''ஆமா மித்து! பெருமாநல்லுார்ல நடந்த கல்யாணத்துல சி.எம்.,குடும்பத்தோட கலந்துக்கிட்டாரு...அதுக்கு உதயநிதியும் வந்திருந்தாரு... அதெல்லாம் எல்லாருக்கும் தெரியும். மகன் வந்த மறுநாளே, மருமகனும் வந்திருந்தாரு...அது தெரியுமா?''
கேள்வி கேட்டு நிறுத்தினாள் சித்ரா...அவளே தொடர்ந்தாள்...
''ஐ.டி.,பிரிவு நிர்வாகி வீட்டுக் கல்யாணத்துக்கு வந்ததா சொன்னாங்க. அவரை நம்ம ஊரு ஆளும்கட்சி முக்கியப் புள்ளிகள் சில பேரு, சத்தமில்லாம சந்திச்சிட்டுப் போனாங்க. வலுவான 'ரீசன்' இல்லாம அவர் வர மாட்டாரேன்னு, ரியல் எஸ்டேட்காரங்ககிட்ட 'அவர் எதுக்கு வந்துட்டுப் போனார்'னு, எதிர்க்கட்சிக்காரங்க நைசா விசாரிச்சிட்டு இருக்காங்க!''
''அக்கா! போன வாரம் மட்டும் எ.வ.வேலு ஆரம்பிச்சு, பொன்முடி, முத்துசாமி, பெரியகருப்பன், சாமிநாதன், மதிவேந்தன்னு ஏகப்பட்ட மினிஸ்டர்ஸ் வந்துட்டே இருந்தாங்க. ரோடு சரியில்லைன்னு அ.தி.மு.க., நடத்துன போராட்டத்துக்கு இ.பி.எஸ்., வந்தாரு... காமாட்சிபுரி ஆதீனத்தைப் பார்க்க ஓ.பி.எஸ்., வந்தாரு...ரெண்டு பேர்ட்டயுமே பெருசா உற்சாகத்தைப் பார்க்க முடியலை. அதுலயும் ஓ.பி.எஸ்.,யார்ட்டயும் பேசவே இல்லை. கும்பிடு குருசாமி மாதிரியே, வழக்கமான கும்பிடு போட்டுட்டுப் போயிட்டாரு!''
''அதேதான்...இ.பி.எஸ்., கலந்துக்கிட்ட உண்ணாவிரதத்துக்கு, ஒரு லட்சம் பேரைத் திரட்டுறதா 'பில்டப்' கொடுத்தாங்க. 10 ஆயிரம் பேருக்கு மேல திரட்டிட்டாங்க. ஆனா அன்னிக்கு சிவானந்தா காலனியே ஜாம்ஜாம்னு கருப்பு சிவப்பு வெள்ளை கரை வேட்டியில கலக்குச்சு!''
''மித்து! நாம பேசுனது மாதிரியே, ஆளும்கட்சி ஐ.டி.,விங்க்காரங்க, 'அ.தி.மு.க., உண்ணாவிரதப் போராட்டத்தில் ஒரு லஞ்ச் பிரேக்'ன்னு அ.தி.மு.க.,காரங்க சரக்கு வாங்குறது, சாப்பிடுறது எல்லாத்தையும் வீடியோ போட்டுட்டே இருந்தாங்க. ஆனா அ.தி.மு.க., போராட்டம் நடத்துனதாலயோ என்னவோ, சுந்தராபுரம்-மதுக்கரை மார்க்கெட் ரோட்ல கொஞ்சம் 'பேட்ச் ஒர்க்' பண்ணி, டூ வீலர் போற மாதிரி ரெடி பண்ணீட்டாங்க!''
''அதே மாதிரி விளாங்குறிச்சி ஏரியா, குறிச்சி ரோடு, இடையர்பாளையம் ரோடுகளையும் கொஞ்சம் சரி பண்ணிக் கொடுத்தா நல்லாருக்கும்...!''
இதைச் சொல்லிக் கொண்டிருந்த மித்ரா,தங்களைக் கடந்து சென்ற போலீசாரைப் பார்த்ததும் 'டாபிக்' மாறினாள்...
''அக்கா! நம்ம சிட்டி போலீஸ் கமிஷனருக்குக் கீழ இருக்குற எஸ்.ஐ.சி.,க்கு, இன்னமும் அசிஸ்டென்ட் கமிஷனர் யாரும் கிடைக்கலையாம்...எவ்வளவு அடிச்சாலும் தாங்குற மாதிரி ஆளாத் தேடுறாங்க போலிருக்கு. இதுக்கு வந்தா வருமானமும் இல்லை; சிக்கலும் அதிகம்னு எல்லா ஆபீசர்களும், 'எனக்கு உடம்பு சரியில்லை'ன்னு ஏதேதோ சொல்லி 'எஸ்கேப்' ஆவுறாங்களாம்...!''
''இதை கேட்டியா...போனவாரம் ஒரு ரூரல் போலீஸ் ஸ்டேஷனுக்கு எஸ்.பி., திடீர் விசிட் அடிச்சிருக்காரு. அங்க இருந்த இன்ஸ்பெக்டர்ட்ட கேஸ் டீட்டெயில்ஸ், அது மேல எடுத்த ஆக்சன் எல்லாத்தையும் கேட்ருக்காரு. அதுக்கு அந்த இன்ஸ்., பதில் சொல்ல முடியாம திணறிருக்காரு. கோபமான எஸ்.பி., அந்த இன்ஸ்பெக்டரை'லெப்ட் அண்ட் ரைட்' வாங்கீட்டாராம். அதனால மத்த ஆபீசரும் ஆடிப்போயிருக்காங்க!''
''அப்பிடியே லாட்டரி, கஞ்சா, போதை, சேவல் சண்டைக்கு ஆதரவா இருக்குற சில ஆபீசர்கள் மேல கடுமையா ஆக்சன் எடுத்தா நல்லாருக்கும். அன்னுார்ல லாட்டரி வியாபாரம் சக்கைப் போடு போடுதாம். வீதிக்கு வீதி, டீக்கடைக்கு முன்னால விக்கிறாங்க.போலீஸ்ட்ட கேட்டா, ஒன்றியத்துல இருக்குற ஆளும்கட்சிக்காரர் பேரைச் சொல்றாங்களாம்...போலீசுக்கும்தான் அதுல மாமூல் போகுது!''
''ஆளும்கட்சின்னதும் வடக்கே இருக்குற மாவட்டத்தைப் பத்தி ஒரு தகவல் ஞாபகம் வந்துச்சுக்கா...அந்த மாவட்டம் எப்பவுமே அவர் தாய்மொழியிலதான் மாத்தாடுறாராம். போன்ல பேசுனாலும், நேர்ல கலந்துரையாடுனாலும் கன்னடத்துலயேபேசிட்டே இருக்குறதால, கூட இருக்கிற உடன் பிறப்புகள் எல்லாம், பேந்தப் பேந்த முழிக்கிறாங்க. இந்தி, இங்கிலீஷ் படிக்கிறோமோ இல்லையோ, கட்சியில கரையேறணும்னா கன்னடம் கத்துக்கணும்பா 'கமென்ட்' அடிக்கிறாங்க!''
பேசிக்கொண்டே ஆவின் பாலகத்தில் இருவருக்கும் பால் வாங்கினாள் மித்ரா. பாலைப் பருகிக் கொண்டே சித்ரா அடுத்த கேள்வியை ஆரம்பித்தாள்...
''மித்து! நம்ம கார்ப்பரேஷன் இளவட்ட ஆபீசர் மேல, கீழ இருக்குற ஆபீசரெல்லாம் ரொம்பவே கடுப்பா இருக்காங்களாமே...ஏதாவது தகவல் தெரியுமா?''
''சில தகவல் கிடைச்சதுக்கா....ஆபீசர்கள் தப்புப் பண்ணுனா வழக்கமா மெமோ கொடுப்பாங்க. சஸ்பெண்ட் பண்ணுவாங்க. இவரு, குற்றச்சாட்டு பதிவு பண்ணி 8(2) நோட்டீஸ் கொடுக்குறாராம்.
இதுவரைக்கும் 35 பேருக்கு நோட்டீஸ் கொடுத்துட்டாராம். அதுலயும் யாருக்குமேபயப்படாம, போலி வரைபடத்துக்கு கட்டட அனுமதி கொடுத்த, ஜெயலலிதாவோட தோழி பேருல முதல் பாதியை வச்சிருக்கற, அந்த 'பிரியமான' இ.இ.,க்கே நோட்டீஸ் கொடுத்ததுல, மத்தவுங்க அதிர்ந்து போயிருக்காங்க!''
''ஆனா மக்களோட வரிப்பணத்தை சுருட்டுனதா கம்பிளைன்ட் ஆன, லேடி ஆபீசர் மேல நடவடிக்கை எடுக்கலைன்னு, பல பேரும் குமுறிட்டு இருக்காங்க!''
''ஒரு சில ஆபீசர்கள், எந்த கவர்மென்ட் வந்தாலும், தப்பிச்சிட்டேதான் இருக்காங்க...நம்ம ஊர்ல பாரஸ்ட் டிபார்ட்மென்ட்ல இப்பிடித்தான், 'தில்' ஆன ஒரு ஆபீசர் இருக்காரு. பாரஸ்டரா இங்க வேலையில சேர்ந்தவரு, ஏ.சி.எப்.,வரைக்கும் 22 வருஷமா வேற எந்த மாவட்டத்துக்கும் மாறாம, இங்கேயே கோலோச்சுறாரு...கோலோச்சுறது மட்டுமில்லை...கோடிகள்ல சொத்தும் சேத்திருக்காராம்!''
மித்ரா சொல்லி முடிக்கும் முன், குறுக்கிட்டாள் சித்ரா...
''மித்து! நீ சொல்ற ஆபீசர் யாருன்னு தெரியும்...போன கவர்மென்ட் இருந்தப்போ, கோவையில கோலோச்சுன 'மாஜி'யோட அண்ணனுக்கு எல்லாமா இருந்தவரே அவர்தான். இப்பவும் துறை வி.ஐ.பி.,க்கு, ஒரு பெரிய 'அமவுன்ட்டை' அடிச்சு, இங்கேயே இப்பவும் கெத்தா சுத்திட்டு இருக்காரு. மாவட்டத்துல இருக்குற பெரிய ஆபீசரை விட, இவருக்குதான் எல்லாரும் பயப்படுறாங்க!''
அப்போது, ஆம்புலன்ஸ் சத்தத்தைக் கேட்ட மித்ரா, அடுத்த மேட்டரை ஆரம்பித்தாள்...
''அக்கா! நேத்து இ.எஸ்.ஐ.,ஹாஸ்பிடல் போயிருந்தேன்...ஏரியா முழுக்க அப்பிடி ஒரு நாத்தம்...விசாரிச்சா, ஹாஸ்பிடல் நிர்வாகத்துக்கும், கார்ப்பரேஷனுக்கும் பனிப்போராம்...கேம்பஸ்ல இருந்த குப்பைத் தொட்டி ஓட்டையா இருக்குன்னு துாய்மைப்பணியாளர்கள் மாத்தச் சொல்லிருக்காங்க...மாத்த முடியாது; நீங்களே மாத்துங்கன்னு சொன்னதும், குப்பை அள்ள முடியாதுன்னு இப்போ அள்ளுறதே இல்லையாம்,''
பால் குடித்து விட்டு, மீண்டும் நடக்க ஆரம்பித்தபோது, எதிரில் வந்த ஒருவரைப் பார்த்து வணக்கம் சொல்லி விட்டு கடந்த மித்ரா, அவரைப் பற்றி விளக்கினாள்...
''நம்ம ஊரு யுனிவர்சிட்டியிலதான் இவர் வேலை பாக்குறாரு...அங்க ரிட்டயர்டு ஆன வி.சி.,யோட ஆதிக்கம் இன்னமும் கொடிகட்டிப் பறக்குதாம். சிண்டிகேட்ல இருக்குற லேடி ஒருத்தவுங்க, அவர் சொல்றதைத்தான் கேக்குறாங்களாம்.. அந்த லேடி ஒரே ஆளு, ரெண்டு மூணு பொறுப்புல இருக்காங்களாம். அதைப் பத்தி மேல வரைக்கும் கம்பிளைன்ட் பண்ணியும் ஒரு நடவடிக்கையும் இல்லையாம்!''
மித்ரா சொல்லும்போதே, அவர்கள் செல்லும் ரயிலின்வருகை பற்றி அறிவிப்பு வந்தது. இருவரும் தங்கள் பெட்டி நிற்கும் இடத்தை நோக்கி, நடையை வேகப்படுத்தினர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!