''விநாயகர் கோவில் கும்பாபிஷேகத்தை தடுத்து நிறுத்த கடுமையா முயற்சி நடக்குது பா...'' என்றபடியே பெஞ்சில் ஐக்கியமானார், அன்வர்பாய்.
''எந்த ஊர்ல ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.
''ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்துல, வலம்புரி விநாயகர் கோவில் இருக்குது... இந்த கோவில் கும்பாபிஷேகம் நாளைக்கு நடக்குது... எல்லா ஏற்பாடுகளையும் மாநகராட்சி நிர்வாகம் செஞ்சிட்டு வருது பா...
''ஈ.வெ.ரா., அமைப்புகளால இதை பொறுத்துக்க முடியலை... 'அதெப்படி, குறிப்பிட்ட மதம் சார்ந்த விழாவை மாநகராட்சி நிர்வாகம் பொறுப்பெடுத்து நடத்தலாம்'னு கேள்வி கேட்டு, கலெக்டர், எஸ்.பி.,யிடம் மனு குடுத்து, விழாவை நிறுத்த முயற்சி செஞ்சாங்க பா...
''அலுவலக வளாகத்துல இருக்கிற விநாயகர் கோவிலின் எல்லா விழாவையும், மாநகராட்சி நிர்வாகம் தான் ரொம்ப காலமா நடத்திட்டு வருது... 'இந்த வழக்கத்தை நிறுத்த முடியாது'ன்னு மாநகராட்சி தரப்புல பதிலடி குடுத்திருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''இந்த வயசுலயும் 'ஜம்'முன்னு, 'யங்ஸ்டர்' மாதிரி இருக்காரே எப்படின்னு யோசிச்சுண்டு இருந்தேன்... இப்ப தான், 'சீக்ரெட்' தெரிஞ்சது ஓய்...'' என, அடுத்த தகவலுக்கு வந்தார் குப்பண்ணா.
''யாரை சொல்லுதீரு...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.
''சென்னை, ஆழ்வார்பேட்டையில வசிக்கிற தலைவரை தான் சொல்றேன்... 'ஹெல்த்' விஷயத்துல ரொம்பவே அக்கறை எடுத்துப்பாருங்கறது எல்லாருக்குமே தெரிஞ்சது தான ஓய்...
''எந்த ஊருக்கு போனாலும், காலை நடைப்பயிற்சியை, 'மிஸ்' பண்ணவே மாட்டார்... அப்பப்ப, கிழக்கு கடற்கரை சாலையில சைக்கிள் ஓட்டிண்டு போறதும் உண்டு ஓய்...
''நீச்சல் பயிற்சியில ஈடுபட்டா உடம்புக்கும், மனசுக்கும் புத்துணர்வு கிடைக்குமோன்னோ... அதனால, தலைவர் நீச்சல் பயிற்சியிலயும் களம் இறங்கி, குளத்தை கலக்கிண்டு இருக்கார் ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
''அரசு கேபிள், 'டிவி' நிறுவனம் கடன் வாங்கி, பாக்கியை பைசல் பண்ணியிருக்குதுங்க...'' என, கடைசி தகவலுக்கு வந்தார் அந்தோணிசாமி.
''கடன் வாங்கறது எல்லா துறைகள்லயும் சகஜம் தானே ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''முழுசா கேளுங்க... அரசு கேபிள் 'டிவி' நிறுவனம், சேனல்கள் ஒளிபரப்புக்காக தனியார், 'டிவி' நிறுவனங்களுக்கு, பல நுாறு கோடி ரூபாய் பாக்கி வச்சிருக்குதுங்க... அந்தத் தொகையைக் கேட்டு, 'டிவி' நிர்வாகங்கள் நெருக்கடி குடுத்தும், அரசு கேபிள் நிறுவனம் அசைஞ்சு குடுக்கலைங்க...
''ஆனா, ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஒரு 'டிவி'க்கு மட்டும், பிரபல வங்கியில 230 கோடி ரூபாய் கடன் வாங்கி, 'செட்டில்' பண்ணிடுச்சுங்க... 'அரசு கேபிள் 'டிவி'க்கு கடன் குடுங்க... அதுக்கு நாங்க பொறுப்பு'ன்னு தமிழக அரசு தரப்புல உத்தரவாதம் குடுத்திருக்காங்க... ஆளுங்கட்சி சேனலுக்காக, அதிகார வர்க்கம் எப்படி எல்லாம் வளைஞ்சு குடுக்குது பாருங்க...'' என, முடித்தார் அந்தோணிசாமி.
''அது சரி... ஆட்சி, அதிகாரத்துக்கு வர்றதே, இந்த மாதிரி காரியங்களை 'ஈசி'யா முடிச்சுக்க தான வே...'' என்றபடியே அண்ணாச்சி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!