Load Image
Advertisement

பிரிந்து போன பிரியமான லட்சுமி


லட்சுமி..லட்சுமி
இன்று புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலைச் சுற்றிலும் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்ணீர் வழிய லட்சுமி..லட்சுமி..என்று பெருங்குரலெடுத்து அழுது கொண்டிருந்தனர்

காரணம் அவர்களின் அன்புக்கு பாத்தியமான தோழியுாகவும் சகோதரியாகவும் விளங்கிய மணக்குள விநாயகர் கோவில் யானையான லட்சுமி திடீர் என இறந்துபோனதுதான்.மணக்குள கோவில் விநாயகர் எவ்வளவு அழகோ அதே போன்ற அழகுடனும் கம்பீரமாகவும் காணப்பட்டவள்தான் லட்சுமி
லட்சுமி யானை கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் ரொம்பவே பாசம் காட்டுவாள், எத்தனை பேர் வந்தாலும் அசராமல் தும்பிக்கையை உயர்தி ஆசி வழங்குவாள்,அதிலும் குழந்தைகள் இந்த யானையிடம் கொஞ்சமும் பயமின்றி பழகுவர் அந்த அளவிற்கு சாந்த குணம் கொண்டதாகும் என்று அதன் நினைவுகளில் பக்தர்கள் கரைந்து போகின்றனர்.
கடந்த 96 ம் ஆண்டு கோவிலுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட நிலையில் ஐந்து வயதில் வந்து சேர்ந்த யானை லட்சுமிக்கு இப்போதுதான் 31 வயதாகிறது. மனிதனைப் போலவே ஆயுள் கொண்டதுதான் யானை என்ற நிலையில் அதன் திடீர் மரணத்தை தாங்கமுடியாமல் பலரும் கதறி அழுதனர்.
அதிலும் பாகன் சக்திவேல் யானை லட்சுமியை தனது குழந்தையைப் போல பராமரித்து வந்தார் அவரால் லட்சுமியின் பிரிவை தாங்கவே முடியவில்லை கதறி கதறி அழுதார்.காட்டில் வளரும் யானையை கோவிலுக்குள் பூட்டி வைப்பதால் ஏற்படும் மன அழுத்தத்தை போக்கும் வகையில் வருடத்திற்கு இரண்டு மாதம் புத்தாக்க பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.அது யானைகளுக்கு உண்மையிலேயே புத்துணர்வு தந்தது.கொரோனா காரணமாக இரண்டு வருடமாக இந்த முகாம் நிறுத்தப்பட்டுவிட்டதால் பல யானைகள் உடல் மனதளவில் சோர்ந்துதான் போயுள்ளது இதற்கு லட்சுமியும் விதிவிலக்கல்ல
இதன் காரணமாக யாருடைய தொந்திரவும் இன்றி பதினைந்து நாட்கள் ஒய்வு எடுக்கட்டும் என்ற வனத்துறையின் அறிவுறுத்தல்படி புதுச்சேரியில் உள்ள வேதபுரீஸ்வரர் கோவில் வளாகத்தில் லட்சுமி ஒய்வெடுத்துவந்தது.
மேலும் அதன் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் களி,தென்னை மட்டை,பனை,அரசமர இலை மற்றும் ஊட்டச்சந்து மருந்துகள் வழங்கப்பட்டது.அவ்வப்போது வனத்துறை மருத்துவர்கள் மட்டும் பார்த்துவந்தனர்.யானை அதன் இயல்புக்கு நிலை திரும்பியதும் கோவிலுக்கு அழைத்துக் கொள்ளலாம் என்றும் கூறியிருந்தனர்.
அன்றாடம் நடைபயிற்சிக்கு அழைத்துச் செல்லப்பட வேண்டும் என்றும் ஆலோசனை சொல்லப்பட்டிருந்தது அதன்படி இன்று காலை நடைபயிற்சிக்காக சென்ற போது திடீர் என மயங்கி ரோட்டில் விழுந்தது.உடனடியாக விரைந்து வந்த வனத்துறை மருத்துவர்கள் யானையை பரிசோதித்துப் பார்த்துவிட்டு மாரடைப்பு காரணமாக யானை உயிரிழந்ததாக அறிவித்தனர்.
கிரேன் மூலம் யானை அதன் விருப்பமான இருப்பிடமான மணக்குள விநாயகர் கோவில் வளாகத்திற்கு கொண்டுவரப்பட்டது.முக்கிய பிரமுகர் இறந்தால் மட்டுமே அடைக்கப்படும் கோவில் நடையும் யானை லட்சுமிக்காக அடைக்கப்பட்டது.தகவலறிந்த புதுச்சேரி மக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணியரும் வெளிநாட்டினரும் கூட லட்சுமி யானையைப் பார்த்து கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர்.
லட்சுமியின் நினைவுகள் நீண்ட காலம் நிலைத்திருக்கும் நீடித்திருக்கும்..
-எல்.முருகராஜ்



வாசகர் கருத்து (1)

  • Lion Drsekar - Chennai ,இந்தியா

    இந்த பதிவுக்கு நம் நிலையில் இருந்து பதிவு செய்ய பல ஆயிரம் எண்ணங்கள் அடுக்கடுக்காய் தோன்றுகின்றது ஆனால் பதிவு செய்தால் அனைத்துமே நீக்கப்படுவதால். அருமையான பதிவு என்று முடித்துக்கொள்கிறோம், வந்தே மாதரம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement