Load Image
Advertisement

பள்ளியில் குறும்படம் காட்ட ரூ.5.50 கோடி வசூல்!

''தொழிற்சங்க நிர்வாகிகள், பிறந்த நாள் விழாவை புறக்கணிச்சிட்டு, முத்து விழாவுக்கு போயிட்டாங்க பா...'' என்றபடியே வந்தார், அன்வர்பாய்.

''முதல்வர் மகன் பிறந்த நாள் விழாவையா வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.

''ஆமாம்... போன 27ம் தேதி உதயநிதி பிறந்த நாள் கொண்டாடினாரே... அன்னைக்கு பல நிகழ்ச்சிகள்ல, வரிசையா கலந்துக்கிட்டாரு பா...

''சென்னை மாநகர போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் பக்கத்துல, நவீன தானியங்கி பஸ் நிறுத்தம் ஒலி அறிவிப்பு கருவியை அறிமுகப்படுத்தும் விழா நடந்துச்சு... இதை, உதயநிதி தான் துவக்கி வச்சாரு பா...

''இந்த விழாவுல, ஆளுங்கட்சியின் தொ.மு.ச., நிர்வாகிகள் பலரும் கலந்துக்கலை... எல்லாரும் தொ.மு.ச., பேரவை பொதுச் செயலரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான சண்முகத்தின் முத்து விழாவுல கலந்துக்க போயிட்டாங்க பா...

''இது பத்தி கட்சி நிர்வாகிகள் சிலர் கேட்டப்ப, 'எங்களுக்கு கட்சி நிகழ்ச்சியை விட பேரவை நிர்வாகி வீட்டு விசேஷம் தான் முக்கியம்'னு, முகத்துல அடிச்சாப்புல பதில் சொல்லிட்டாங்களாம் பா...'' என்றார் அன்வர்பாய்.

''விலையை உயர்த்தியும், ஆவினுக்கு லாபமில்லைன்னு சொல்லுதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.

''விளக்கமா சொல்லுங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''சென்னையில மட்டும் தினமும், 14 லட்சம் லிட்டர் ஆவின் பால் விக்குது... மொத்த மற்றும் சில்லரை ஏஜன்ட்கள் வழியா தான் பெரும்பாலான விற்பனை நடக்கு வே...

''சமீபத்துல, ஆரஞ்சு பால் விலையை லிட்டருக்கு 12 ரூபாய் ஏத்தினாங்கல்லா... இதனால, ஆவினுக்கு 12 ரூபாய் லாபம் கிடைக்கும்னு சொன்னாவ வே...

''ஆனா, ஆவின் அட்டைதாரர்களுக்கு பழைய விலையான 48 ரூபாய்க்கே கிடைக்கு... இன்னொரு பக்கம், இந்த பால் அட்டைகளை ஆவின் மொத்த விற்பனை ஏஜன்டுகள் முறைகேடா நிறைய வாங்கி வச்சிருக்காவ...

''அதே மாதிரி, நுகர்வோர் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் 50 பேரும், ஆவின் அட்டைகளை முறைகேடாக வாங்கி வச்சிருக்காவ... இதனால, விலையை உசத்தியும், அந்த தொகை ஆவினுக்கு வராம, இவங்களுக்கு தான் போவுதுன்னு சொல்லுதாவ... 'எந்த ஆட்சி மாறினாலும், ஆவின் நஷ்டத்தை தவிர்க்க முடியாது'ன்னு அதன் ஊழியர்களே புலம்புதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.

''குறும்படம் காட்டி, 5 கோடி ரூபாயை அள்ள திட்டம் போடற கதையை கேளும் ஓய்...'' என, முன்னுரை தந்த குப்பண்ணாவே தொடர்ந்தார்...

''பள்ளி மாணவர்களுக்கு நற்சிந்தனை வளரணும்கிற நோக்கத்துல, 'குழந்தைகளின் ஓட்டப்பந்தய வீராங்கனை' என்ற ஒரு குறும்படத்தை, எல்லா பள்ளி கள்லயும் போட்டுக் காட்ட அரசு உத்தரவு போட்டிருக்கு ஓய்...

''இந்தப் படம் பார்க்க, ஒவ்வொரு மாணவருக்கும் தலா 10 ரூபாய் கட்டணம்... படத்தை திரையிட்டு காட்டி, கட்டணம் வசூலிக்க, வேலுாரைச் சேர்ந்த தனியாருக்கு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அதிகாரிகள் அனுமதி குடுத்திருக்கா ஓய்...

''அவா ஒரு புரொஜக்டர், ஒரு பென் டிரைவுடன் பள்ளிகளுக்கு வந்து, 'படம்' காட்டிட்டு, வசூல் பணத்தை அள்ளிண்டு போயிடுவா... மதுரை மாவட்டத்துல மட்டும் எல்லா பள்ளிகள்லயும் சேர்த்து, 5.50 லட்சம் மாணவர்கள் இருக்கா ஓய்...

''தலைக்கு 10 ரூபாய்ன்னா 5.50 கோடி ரூபாய்க்கு மேல வசூலாகும்... 'ஒரு குறும்படத்துக்கு இந்த தொகை டூ மச்'னு ஆசிரியர் சங்கங்கள், பெற்றோர் எல்லாம் எதிர்ப்பு தெரிவிக்கறா ஓய்...'' என முடித்தார் குப்பண்ணா.

பெஞ்சில் மேலும் சிலர் அமர, பெரியவர்கள் கிளம்பினர்.வாசகர் கருத்து (3)

  • VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா

    விஞ்ஞான பூர்வ ஊழலுக்கு அச்சாரம்...

  • அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா

    விஞ்ஞானிகள்னு சர்க்காரியா சும்மாவா சொன்னார்?

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    அரசுத்துறை வெளியிடும், பள்ளிப்பிள்ளைகளுக்கு விளையாட்டினை அறிவுறுத்தும் படத்துக்கு, கட்டணமா? எப்படியெல்லாம் ரூம் போட்டு யோசிக்கிறாங்கப்பா?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

ஸ்ரீபெரும்புதூரில் சொந்த மனை வாங்க சரியான நேரம் வந்தாச்சு!

Advertisement
Advertisement