சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் நியமனத்தில், 'கொலீஜியம்' முறை பின்பற்றப்படுகிறது. அதாவது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியுடன், அந்த நீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகள் அடங்கிய குழுவானது, நீதிபதிகளை தேர்வு செய்கிறது.
'இதேபோன்ற கொலீஜியம் முறையை, தேர்தல் கமிஷனர்கள் நியமனத்திலும் பின்பற்ற வேண்டும்; அதற்கான சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும்' எனக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கலாகின. இவற்றை சமீபத்தில் விசாரித்த நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அமர்வு, 'தேர்தல் கமிஷனர்கள் நியமனத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை; மத்தியில் ஆளும் கட்சியாக இருப்பவர்களுக்கு, ஆமாம் சாமி போடுபவர்களையே, தேர்தல் கமிஷனர்களாக நியமிக்கும் வகையில், தற்போதைய நடைமுறைகள் உள்ளன. 'அதனால், தேர்தல் கமிஷனர்கள் நியமன நடைமுறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். இந்த நியமனங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தும் குழுவில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும் இடம் பெற வேண்டும். அப்படி அவர் இடம் பெற்றால், வெளிப்படை தன்மை உருவாகும்' என்று தெரிவித்து உள்ளது.
மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி, 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த போது, ஆறு பேர் தலைமை தேர்தல் கமிஷனர்களாக பதவி வகித்துள்ளனர். 2014ல் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவியேற்ற பின், எட்டு பேர் தலைமை தேர்தல்கமிஷனர்களாக இருந்துள்ளனர். தேர்தல் கமிஷன் மற்றும் தேர்தல் கமிஷனர்கள் நியமனம் தொடர்பான, அரசியல் சட்டத்தின், 324வது பிரிவானது, எந்த விதமான விதிமுறைகளையும், நிபந்தனைகளையும் தெரிவிக்காததே இதற்கு காரணம்.
அத்துடன், 1991ல் நிறைவேற்றப்பட்ட தேர்தல் ஆணையம் தொடர்பான சட்டமும், தலைமை தேர்தல் கமிஷனர்களாக அல்லது தேர்தல் கமிஷனர்களாக நியமிக்கப்படுவோர், ஆறு ஆண்டு காலம் அல்லது 65 வயது, இவற்றில் எது முதலில் வருகிறதோ, அது வரை பதவி வகிக்கலாம் என்றே தெரிவிக்கிறது. இதனால், 2004முதல் எந்த ஒரு தேர்தல் கமிஷனரும், ஆறு ஆண்டு முழு பதவிக் காலத்தையும் முடிக்க மாட்டார்கள் என்று தெரிந்தும், அவர்களை மத்தியில் இருந்த அரசுகள் தேர்வு செய்துள்ளன. ஆறு ஆண்டுகள் அவர்கள் முழுமையாக பதவி வகிக்க வேண்டும் என்பது, கவனத்தில் கொள்ளப்படவில்லை.
தேர்தல் கமிஷனர்கள் நியமனங்களை பொறுத்தவரை, நாட்டின் முதல் தலைமை தேர்தல் கமிஷனராக நியமிக்கப்பட்ட சுகுமார் சென் தான், 8 ஆண்டுகள், 273 நாட்கள் பதவியில் இருந்துள்ளார். இதையடுத்து, டி.என்.சேஷன், 1990 முதல், 1996 வரை ஆறு ஆண்டுகள் பதவியில் இருந்துள்ளார். அதன்பின், எந்த கமிஷனர்களும் ஆறு ஆண்டு காலம் பதவியில் இருந்ததில்லை.
அதனால் தான், 'தேர்தல் கமிஷனர்கள் நியமனத்தில், நியாயமான, வெளிப்படையான அணுகுமுறையை பின்பற்ற வேண்டும். பிரதமரே தவறு செய்தாலும், அவருக்கு எதிராக துணிச்சலாக நடவடிக்கை எடுக்கக் கூடிய திறமையான நபர், தலைமை தேர்தல் ஆணையர் பதவிக்கு வர வேண்டும் என்றும் கூறியுள்ளது.
ஆனால், 'தேர்தல் கமிஷனர்கள் மற்றும் தலைமை தேர்தல் கமிஷனர்கள் நியமனம் தொடர்பான தற்போதைய நடைமுறையை பரிசீலிக்க வேண்டும் என, நீதிமன்றம் கூற முடியாது. அரசியல் சாசனத்தில், அதற்கான வழியில்லை' என, மத்திய அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது. இருந்தாலும், இந்த விஷயத்தில் மாற்றம் கொண்டு வந்தால் நல்லதே.
அமெரிக்கா போன்ற நாடுகளில், நீதிபதிகள் நியமனம் மற்றும் இதர உயர் அதிகாரிகள் நியமனம் விஷயத்தில், செனட் சபையின் ஆலோசனை மற்றும் ஒப்புதலை, அதிபராக இருப்பவர் பெறும் நடைமுறை உள்ளது. அத்தகைய நடைமுறையை அமல்படுத்துவது சாத்தியம் இல்லை என்றாலும், ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களின் விருப்பத்திற்கு ஏற்றபடி, அரசியல் சட்ட ரீதியான அமைப்புகளுக்கு பொறுப்பு வகிப்போரின் நியமனங்களை மேற்கொள்வது சரியாக இருக்காது. அது, அந்த பதவிக்குரிய புனிதத்தன்மையை குறைத்து விடும் என்பதில் சந்தேகமில்லை. எனவே, இந்த விஷயத்தில், மத்திய அரசு மாற்றி யோசித்து, உச்ச நீதிமன்ற பரிந்துரையை ஏற்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்பதே, சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!