சித்ரா வீட்டில் ஹாலில் அமர்ந்து, பேப்பர் படித்துக் கொண்டிருந்தாள். பண்பலையில், 'கண்ணான கண்ணே கண்ணான கண்ணே என் மீது சாயவா...' ஒலித்துக் கொண்டிருந்தது. அதே பாட்டைப் பாடியபடி, துள்ளிக் கொண்டே, உள்ளே வந்த மித்ரா, கச்சேரியிலிருந்து தன் அரட்டைக் கச்சேரியை ஆரம்பித்தாள்...''என்னக்கா! ராஜா சார் தொடங்கி, அனிருத், சித் ஸ்ரீராம்னு அடுத்தடுத்து நம்ம ஊருக்கு வந்துட்டே இருக்காங்க. அடுத்த மாசம் நியூஇயர்க்கு யுவன் கச்சேரி...ஒரே இசை மழையா இருக்கு!''மித்ரா முடிக்கும் முன், சித்ரா குறுக்கிட்டுப் பேசினாள்...''வேறென்ன...நம்ம மக்கள் அவுங்க மேல காசு மழை பொழியுறாங்களே...எவ்வளவுக்கு டிக்கெட் போட்டாலும், அத்தனை டிக்கெட்டும் வித்துத் தீர்ந்துருது...உட்கார்றதுக்கு சீட்டு கூட போடாம நோட்டுகளை, மூட்டை மூட்டையா அள்ளிட்டுப் போறாங்க!''பலமாகத் தலையாட்டி அதை ஆமோதித்த மித்ரா, அதே மேட்டரைத் தொடர்ந்தாள்...''அக்கா! ஆனா நம்ம ஊர்லதான் ஓசி டிக்கெட்டும் அதிகமாப்போகுது...அனிருத் கச்சேரியில கூட பரவாயில்லை. சித் ஸ்ரீராம் புரோக்ராம்ல நம்ம ஊர் 'அபிஷியல்' பண்ணுனது ரொம்பவே ஓவர்க்கா... கலெக்டர், கார்ப்பரேஷன் கமிஷனர், போலீஸ் ஆபீசர்ஸ்ன்னு 250 சீட்களை வாங்கி, முன்னாடி முழுக்க ஆபீசர்கள் குடும்பங்களே ஆக்கிரமிச்சிட்டாங்க. அவுங்களுக்கு தனியா ஒரு வழி வேற வச்சுக்கிட்டாங்களாம்!''''ஆமா மித்து! நானும் கேள்விப்பட்டேன்...10 லட்சம், 20 லட்சம்னு ஸ்பான்சர் கொடுத்தவுங்களை எல்லாம், பின்னாடி தள்ளீட்டாங்களாம்...''''நம்ம கவுன்சில் கச்சேரி, ஏக ரகளையா போயிட்டு இருக்குறது மாதிரி தெரியுதுக்கா!'' என்ற மித்ரா, ஒரு நிமிடம் தன் ஆண்ட்ராய்டு போனிலிருந்து, ஒரு ஆடியோவைப் போட்டுக் காட்டி விட்டு, பேச்சைத் தொடர்ந்தாள்...''சிட்டி மம்மியும் அவுங்க வீட்டுக்காரரும் பேசுற பேச்சு, எல்லை மீறிட்டு இருக்காம். ரெண்டு பேரும் காசு காசுன்னு கோரஸ் பாடுறாங்களாம்....சீட்டுக்கு ரெக்கமண்ட் பண்ணவுங்க, மேயர் பதவி கொடுக்க விசாரிச்சப்போ நல்ல விதமா சொன்னவுங்க, காசு கொடுத்து உதவி பண்ணுனவுங்க, கட்சி சீனியர்கள்னு யாரையுமே மதிக்கிறதில்லையாம்!''மித்ரா சொன்னதையொட்டி, சித்ராவும் சில தகவல்களைப் பகிர்ந்தாள்...''நீ சொல்றது உண்மைதான்...வீட்டு வாடகையே கொடுக்க முடியாம இருந்தப்போ, உதவி பண்ணுன ஒரு குடியிருப்பு நலச்சங்கத்து நிர்வாகி, போன்ல பேசுனப்போ, சிட்டி மம்மியோட ஹஸ்பெண்ட், 'போனை வைங்க...இதெல்லாம் பேச நேரமில்லை'ன்னு கண்டபடி பேசிருக்காரு...அந்த சங்கத்துக்காரங்க கொந்தளிக்கிறாங்க!''''இதே மாதிரிதான் முன்னாடி ஒருத்தரு, யாரையுமே மதிக்காம பேசிட்டு இருந்தாரு. மக்களே நேரடியாத் தேர்ந்தெடுத்து, 'பவர்புல்'லா இருந்த அவரோட பதவியே பாதியில பறி போயிருச்சு. ''இவுங்கள்லாம் எம்மாத்திரம்னு எல்லாரும் பேச ஆரம்பிச்சிட்டாங்க!'' என்ற மித்ரா, ''மேயருக்கும், கார்ப்பரேஷன் ஆபீசருக்கும் இடையில விரிசல் அதிகமாயிருச்சாமே...!'' என்ற கேள்வியோடு நிறுத்தினாள்...''அப்பிடித்தான் தகவல்...ரெண்டு நாளைக்கு முன்னாடி, 'வருமுன் காப்போம்' மருத்துவ முகாம் நடந்திருக்கு. மேயர், கமிஷனர் ரெண்டு பேரும் கலந்துக்கிட்டாங்க...அது முடிஞ்சதும் மேயர் தலைமையில அதிகாரிகள் குழு, ரோடுகளை ஆய்வு பண்ணிருக்காங்க. ரோடு தரமாப் போட்ருக்கான்னு தோண்டிப் பார்த்தாங்களாம்!''''அப்போ நாளைக்கு கார்ப்பரேஷன் கவுன்சில் மீட்டிங்ல அனல் பறக்குமா?''மித்ராவின் கேள்வியை எதிர்பார்த்ததுபோல, சட்டென பதில் கொடுத்தாள் சித்ரா...''வாய்ப்பில்லை மித்து...ஆளுங்கட்சி கவுன்சிலர்களின் பல்ஸ் பார்க்க...கவுன்சில் அதிகாரத்தை குறைச்சு, கமிஷனருக்கான அதிகாரத்தை அதிகரிச்சு வெளியிட்ட அரசாணையைத்தான் முதல் தீர்மானமா வச்சிருக்காங்க. ஆனா அரசு உத்தரவுக்கு எதிரா பேச முடியாதேன்னு, ஆளும்கட்சி கவுன்சிலர்கள் தவிக்கிறாங்க. அதனால...!''''அதனால...?''''கம்யூ., கட்சிக்காரங்களை தூண்டி விட்டுப் பேசலாம்னு ஏற்பாடு நடக்குதாம்...ஆனா கம்யூ., கட்சியோட முக்கியமான கவுன்சிலர், தன்னோட வார்டுக்கு பக்கத்து வார்டுங்கிறதால, ஒரு பிரச்னைய சிட்டி மம்மிட்ட போய் சொல்லிருக்காரு. அப்போ, அவுங்க ஹஸ்பெண்ட், 'நீங்க போய் உங்க வார்டு வேலையைப் பாருங்க'ன்னு எல்லாருக்கும் முன்னால பேசி அனுப்பிருக்காரு. அதனால அவுங்களும் பேச மாட்டாங்க. ஆபீசர்களுக்கு நிம்மதி!''''நீங்க கவுன்சிலர், ஹஸ்பெண்ட்ன்னு சொன்னதும், இன்னொரு ஆளும்கட்சி லேடி கவுன்சிலர் ஞாபகம் வந்துச்சு...சிங்காநல்லுார் ஏரியாவைச் சேர்ந்த அந்த கவுன்சிலர், மறுபடியும் 'அட்ராசிட்டி'யை ஆரம்பிச்சிட்டாங்களாம்!''குறுக்கிட்டு கேள்வி கேட்டாள் சித்ரா...''அப்பிடி என்ன பண்றாங்க?''''செம்ம வசூலாம்...அவரோட வீட்டுக்கிட்ட, ஜே.இ., ஆபீசர் யார்ட்டயும் பெர்மிஷனே வாங்காம, அவுங்களா உப்புத் தண்ணி கனெக்சன் எடுத்திருக்காங்க. ஆபீசர்களையெல்லாம் தாறுமாறா பேசுறாராம்!''''கவுன்சிலர்க மட்டுமில்லை...ஆளும்கட்சிக்காரங்க பண்ற சேட்டை அதை விட அதிகமா இருக்கு...அதே சிங்காநல்லுார் பஸ் ஸ்டாண்ட் பின்னாடி, ஐயர் லே-அவுட்ல, தி.மு.க., வார்டு நிர்வாகி ஒருத்தரு, தன்னோட வீட்டுக்கிட்ட கான்கிரீட் போட்டு, 120 அடி நீள சாக்கடையையே முழுசா அடைச்சிட்டாராம்!''பேசிக்கொண்டே பேப்பரைப் புரட்டிக் கொண்டிருந்த மித்ரா, ''அக்கா! சிட்டி ரோடுகள் மோசமா இருக்குறதைப் பத்தி, ரொம்ப நாளா பேசிட்டு இருந்தோம். இப்போ அ.தி.மு.க., சார்புல போராட்டமே அறிவிச்சிட்டாங்க...இ.பி.எஸ்., கலந்துக்கிறதால, பல ஆயிரம் பேரைத் திரட்டப்போறாங்களாமே...ஆனா வருவாங்களாங்கிறதை டிசம்பர் ரெண்டுதான் பார்க்கணும்!''இதைச் சொல்லி முடித்த மித்ரா, சிறு இடைவெளி விட்டு தொடர்ந்தாள்...''அ.தி.மு.க.,உண்ணாவிரதத்தை அறிவிச்சதும், தி.மு.க., ஐ.டி., விங் அணியும் உடனே அறிவிப்பு வெளியிட்டுட்டாங்க. உண்ணாவிரதம் நடக்கப்போற சிவானந்தா காலனி, சுத்து வட்டாரத்துல இருக்குற எல்லா பேக்கரி, ஓட்டல்லயும் மொபைல் போனோட இருக்கணுமாம். கருப்பு, சிவப்பு வெள்ளை கரை வேட்டியோட யார் சாப்பிட வந்தாலும் சுடச்சுட படமெடுத்து, சோஷியல் மீடியாவுல போடணுமாம்!''''ஆக மொத்தத்துல, அன்னிக்கு சோஷியல் மீடியாவுல இவுங்க ஆட்டமாத்தான் இருக்கும்...ஆனா தி.மு.க.,வுல வர்ற அறிவிப்பை அவுங்க கட்சிக்காரங்களே மதிக்கிற மாதிரித் தெரியலை...உதயநிதி பிறந்தநாள் விழாவுக்கு 3069 ஓட்டுச்சாவடி ஏரியாவுலயும் கோலப்போட்டி நடத்தணும்னு மாவட்டங்கள் சார்புல அறிக்கை விட்டாங்க. பாதி ஏரியாவுல யாருமே நடத்தலையாம்!''உடனே மித்ரா, ''ஒரு புகார் வந்ததால ஒரு பெரிய ஆபீசர் கோவிச்சிட்டு 'ரிலீவ்' ஆயிட்டாராம்...ஏர்போர்ட் நிலமெடுக்குற பிரிவுல இருந்த அந்த அதிகாரி, போன வாரமே 'ரிலீவ்' ஆயிட்டாரு. ஆயிரத்து 200 கோடி ரூபாய்ல, நிலம் கையகப்படுத்துறதுக்கு 998 கோடி ரூபாய் 'டிஸ்பெர்ஸ்' பண்ணுனதுக்கு, நாங்க செஞ்ச வேலை தான் காரணம். அதை பாராட்டாம, எங்க மேல பொய்ப்புகார் சொல்றாங்க'ன்னு கோவமா போயிட்டாராம்!''''அவரு மேல யாரு புகார் சொன்னது?''''நிலமெடுக்குற பிரிவுல இருக்குற அதிகாரிங்க, 'கமிஷன் கேட்டு தராததால இழுத்தடிக்கிறாங்க'ன்னு, சில பேரு புகார் கிளப்புனதுல அவர் 'அப்செட்' ஆயிட்டாராம். ரொம்பவும் சிக்கலான, டாக்குமென்ட் இல்லாத, ஓனர்கள் ஒத்து வராத...ரெண்டு மூணு பேர் உரிமை கொண்டாடுற நிலங்கள் மட்டும் தான், இன்னும் கையகப்படுத்தலையாம்...மத்த எல்லா வேலையும் முடிஞ்சிட்டதா அவர் சொல்றாரு!''''அவர் வேணும்னா கமிஷன் கேக்காம இருக்கலாம். ஆனா அவருக்குக் கீழ இருக்குற அதிகாரிங்க எல்லாரும் நேர்மையா இருக்குறதா அவரால சொல்ல முடியுமா...இப்பல்லாம் இந்த மாதிரி போஸ்ட்டிங் வரவே, பெரிய தொகை கொடுத்துட்டுதானே வர்றாங்க!''''ஆமாக்கா! அன்னூர் பேரூராட்சி செயல் அலுவலர் பதவி அஞ்சு மாசமா காலியா இருக்கு...இந்த இடத்துக்கு வர்றதுக்கு சில பேரு, முயற்சி பண்ணிருக்காங்க. ஆனா டிரான்ஸ்பர் கேக்குறவுங்ககிட்ட நேருக்கு நேரா, 15 லட்ச ரூபா கேட்ருக்காங்க. அதுலதான் பல பேரு தலை தெறிக்க ஓடிட்டாங்களாம். அதனால அஞ்சு மாசமா இ.ஓ.,போஸ்ட்டிங் காலியா இருக்கு...ஒரு வேலையும் நடக்காம ஊரு நாறிட்டு இருக்கு!''மித்ரா சொல்லி முடிக்கும்போதே, இருவருக்கும் சித்ராவின் அம்மா டிபன் கொண்டு வர, இருவரும் பேச்சை நிறுத்தினர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!