''ஆமை வேகத்துல பணிகள் நடக்குல்லா...'' என, கருப்பட்டி காபிக்கு 'ஆர்டர்' கொடுத்தபடியே, பெஞ்சில்அமர்ந்தார் அண்ணாச்சி.
''எந்த வேலையை சொல்றீர் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.
''கோவையில விமான நிலைய விரிவாக்கம், மேற்கு புறவழிச்சாலை, ரயில்வே மேம்பாலங்கள் கட்டுறதுன்னு பல வேலைகள் நடக்க இருக்கு... இந்த திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்த தனித்தனியா டி.ஆர்.ஓ., தாசில்தார், சர்வேயர்களை அரசு
நியமிச்சிருக்கு வே...
''இழப்பீடு வழங்க, 1,000 கோடி ரூபாய்க்கு மேல நிதியையும் ஒதுக்கீடு செஞ்சிருக்கு... ஆனா அதிகாரிகள், நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு நிர்ணயிக்கிறதுலயும், வழங்குறதுலயும் பெரிய அளவுல கமிஷன் கேட்காவ வே...
''பலரும் கமிஷன் தர மறுத்துட்டதால, நிலங்களை கையகப்படுத்துறது வருஷக் கணக்கா இழுத்துட்டே போவுது... 'இந்த மாதிரி வேலைக்கு நேர்மையான அதிகாரிகளை போட்டா தான், காரியம் சீக்கிரமா நடக்கும்'னு வருவாய் துறையிலயே பேசிக்கிடுதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''மனுவை கையால கூட தொட மாட்டேங்கறார் ஓய்...'' என்றார் குப்பண்ணா.
''எந்த துறை விவகாரம் பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''சென்னை எழும்பூர்ல, சி.எம்.டி.ஏ., அலுவலகம் இருக்கோல்லியோ... இங்க, 800க்கும் மேற்பட்ட அதிகாரிகள், பணியாளர்கள் வேலை பாக்கறா ஓய்...
''பணியாளர் சங்க நிர்வாகிகள், தங்களுக்கு இருக்கற பொதுவான பிரச்னைகளை உயர் அதிகாரியிடம் முறையிட, மனுவா எழுதி எடுத்துண்டு போயிருக்கா ஓய்... அதிகாரியோ, குறைகளை வாய்மொழியா மட்டும் கேட்டுண்டு, மனுவை கையால கூட தொடாம திருப்பி அனுப்பிட்டாராம்... விரக்தியில இருக்கற பணியாளர்கள், தலைமைச் செயலர் கவனத்துக்கு விஷயத்தை கொண்டு போக போறா ஓய்...'' என்றார் குப்பண்ணா.
மொபைல் போனை பார்த்த அந்தோணிசாமி, ''அன்சுல் மிஸ்ரா மெசேஜ் பண்ணியிருக்காரு...'' என முணுமுணுத்தபடியே, கடைசி மேட்டரை பேச
ஆரம்பித்தார்...
''வருஷா வருஷம் டில்லியில நடக்கிற குடியரசு தின அணிவகுப்புல, மாநிலங்கள் வாரியா அலங்கார ஊர்திகள் இடம்பெறும்... இந்த வருஷம் ஜனவரி 26ல நடந்த அணிவகுப்புல, தமிழக ஊர்திக்கு இடம் கிடைக்காம, பெரிய சர்ச்சையானதுங்க...
''இப்ப, வர்ற ஜனவரியில நடக்கிற அணிவகுப்பு சம்பந்தமான ஆலோசனை கூட்டம், டில்லியில போன 24ம் தேதி நடந்துச்சு... தமிழகம் சார்புல செய்தித் துறை இயக்குனர் ஜெயசீலன் தலைமையில கூடுதல் இயக்குனர்கள், டிசைனர் எல்லாம் கலந்துக்கிட்டாங்க... நம்ம ஊர் சார்புல, சிறுதானியங்களின் பயன்களை விளக்குற அலங்கார ஊர்திக்கான டிசைன்களை குடுத்தாங்க...
''ஆனா, அதை மத்திய பாதுகாப்பு துறை அதிகாரிகள் நிராகரிச்சிட்டாங்க... அதுக்கு பதிலா, 'தொழில் துறை சாதனைகளை விளக்கும் டிசைனை
உருவாக்கிட்டு, அடுத்த வாரம் வாங்க'ன்னுசொல்லிட்டாங்க...
''இயக்குனர் ஜெயசீலனிடம் அரசு கேபிள் 'டிவி' பொறுப்பும் கூடுதலா இருக்கிறதால, அடுத்த கூட்டத்துக்கு கூடுதல் இயக்குனர்களை போக சொல்லியிருக்கார்... அவங்களோ, 'நாங்க மட்டும் போய், டில்லி அதிகாரிகள் ஏதாவது கட்டையை குடுத்துட்டா, வம்பா போயிடும்'னு தலைமை செயலர் மற்றும் முதல்வர் அலுவலகசெயலர்களிடம்சொல்லிட்டாங்க...''அவங்களோ, இயக்குனரை கண்டிப்பா போக சொல்லிட்டாங்க... இதனால, செய்தி துறைக்குள்ள பனிப்போர் ஓடிட்டு இருக்குதுங்க...'' என முடித்தார்,அந்தோணிசாமி.அரட்டை முடிய, பெஞ்ச் கலைந்தது.
இழப்பீட்டுக்காக ஒதுக்கிய தொகையே நாவில் நீர் ஊற வைத்திருக்கும் நில உரிமையாளர்களிடம் கொழுத்த 'தேட்டை' கிடைக்கும் என்று எதிர்பார்த்திருப்பார்கள்