100 வயதைத் தாண்டியும், இப்போதும் மருத்துவம் பார்க்கும் டாக்டர் ஹாவர்ட்டை உலகின் வயதான மருத்துவர் என்று கின்னஸ் சாதனை புத்தகம் அங்கீகரித்து பாராட்டு பத்திரம் வழங்கியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள ஒஹியோ மாநிலம் கீளிவ்லாண்டைச் சேர்ந்தவர் டாக்டர் ஹாவர்ட்,கிட்டத்தட்ட 75 வருடங்களுக்கு மேலாக மருத்துவம் பார்த்துவருகிறார். சிறந்த நரம்பியல் நிபுணரான இவர் இன்றைக்கும் ஒரு நாளைக்கு 9 மணிநேரம் வேலை செய்கிறார் அதவாது நோயாளிகளுக்காக மருத்துவ சேவை செய்கிறார்.
கோவிட் நேரத்தில் டாக்டர்கள் பலர் ஆன்லைனில்தான் சிகிச்சை தந்தனர் ஆனால் இவரோ கோவிட் நோய்த்தொற்று பற்றியோ முதுமையில் கூடுதல் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்பது பற்றிய கவலையின்றி வழக்கம் போல அவரது கிளினிக்கை திறந்துவைத்து சிகிச்சை அளித்தார் என்கின்றனர் அவரது உறவினர்கள் .இரண்டாம் உலகப் போர் மற்றும் கொரியப் போரின் போது சேவையாற்றிய அனுபவம் இவருக்கு நிறையவே உண்டு இதன் காரணமாக உயிரின் அருமை தெரியும் எப்பாடுபட்டாவது நோயாளியை காப்பாற்ற முனைவார்.
நான் என் மருத்துவத்தை துவங்கிய நாள் முதல் அதை புனிதமாகவே கருதுகிறேன்,அணுகுகிறேன். இப்போதும் இந்த துறையில் உள்ள புதிய விஷயங்களை கற்றுக் கொள்கிறேன், எனது அனுபவத்தை புதியவர்களுக்கு கற்றுத்தருகிறேன்.
எனது நீண்ட ஆயுளுக்கு எனது குடும்பத்தினரின் ஒத்துழைப்பும் அவர்களது மகிழ்ச்சியும் கூட ஒரு காரணமாகும்.
ஓய்வு பெற திட்டமிட்டுள்ளீர்களா? என்று கின்னஸ் சாதனை புத்தகத்தார் கேட்ட போது "ஓய்வு என்பது நீண்ட ஆயுளுக்கு எதிரி என்று நான் நம்புகிறேன். நான் ஒரு போதும் ஓய்வு பற்றி யோசித்ததில்லை,நீங்கள் விரும்புவதை செய்யும்போது, ஏன் ஓய்வு பெற விரும்புகிறீர்கள் என்று தன்னைக் கேட்டவர்களை நோக்கியே பதில் கேள்வியை வீசினார்.
அந்த கேள்வியை நீங்களும் கேட்டுப்பாருங்கள் உண்மைதான் என்பதை உணர்வீர்கள்.
-எல்.முருகராஜ்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!