எண்ணத்தில் யதார்த்தமாக உதிக்கும் கற்பனைகள் முதல் நிஜத்தில் காணும் காட்சிகள் வரை எதுவானாலும் தன் வளைக்கரங்களால் சில நொடிகளில் தத்ரூப ஓவியங்களாக்கி உயிர்ப்புடன் வடித்தெடுத்து விடுகிறார் மதுரையை சேர்ந்த வளர்ந்து வரும் 'இளம் ஓவியர்' ஸ்ரேயா.
நான்கு வயதில் துாரிகையை துாக்கிய இவர் தற்போது படிப்பது பத்தாம் வகுப்பு என்றாலும் வயதை தாண்டிய சிந்தனை ஓட்டத்தில் உதித்த ஓவியங்கள் மூலம் 'அடடே...' என ஆச்சரியப்பட வைக்கிறார். போர்ட்ரைட், ரங்கோலி போர்ட்ரைட், கிராபைட் பென்சில், பிரீ ஹேன்ட், கேரிகேட்சர், டிஜிட்டல்... என பல வகை ஓவியங்களில் கலக்கி வரும் இவர் இதன் மூலம் படிக்கும் போதே வருமானம் ஈட்டி 'இளம் தொழில்முனைவோர்' பட்டியலிலும் இடம் பிடித்துள்ளார். அவர் நம்மிடம்...
எனக்குள் உருவான ஓவிய ஆசைக்கு வடிகாலாக வழிகாட்டியவர் அம்மா திவ்யா. பள்ளியில் ஓவியம், கிராப்ட், கிளே மாடலிங் என எந்த போட்டிகள் என்றாலும் பங்கேற்று பரிசுகளை தட்டிச்செல்கிறேன். அமைப்புகள் நடத்திய மாவட்ட, மாநில ஓவியப் போட்டிகளிலும் கிடைத்த தொடர் வெற்றிகள் என்னை மேலும் சாதிக்க துாண்டியது.
என் ஆர்வத்தை பார்த்த பெற்றோர் மதுரை ஓவியர் சந்திரசேகரிடம் ஓராண்டு பயிற்சிக்கு அனுப்பினர். இதன் மூலம் கூடுதல் அனுபவம் கிடைத்தது. என் முயற்சியாலும் கடவுள் அருளாலும் இப்போது ஒருவரை பார்த்தவுடன் சில நொடிகளில் அவரை வரைந்து விடும் திறமை உள்ளது. பெண்கள் சொந்த காலில் நின்று சாதித்தால் தான் பெருமை என்ற நிலையில் என் கைகளால் நான் சாதித்து சொந்த காலில் நின்று வருகிறேன்.
ஆம், யுடியூப், பேஸ்புக், இன்ஸ்டா... என நான் வரைந்த, வரையும் வித வித ஓவியங்களை வீடியோவாக பதிவிட்டும், ஆன்லைன் ஓவிய வகுப்பு நடத்தியும் 'வியூவர்'களை அதிகரித்து வருகிறேன். வீட்டில் குழந்தைகளுக்கு ஓவியம் பயிற்சி அளிக்கிறேன்.
விசேஷ நிகழ்ச்சிகள் குறித்த 'கேரிகேட்சர்' வரைவதற்கான ஆர்டர்கள் பெற்று படிக்கும் போதே வருவாய் ஈட்டுவதன் மூலம் பெற்றோர் கையை எதிர்பார்க்காமல் ஓவியங்களுக்கு தேவையான பொருட்களை இப்பணத்தில் வாங்குகிறேன்.
இனிவரும் உலகை ஆளப்போவது டிஜிட்டல் தொழில்நுட்பம் தான். அதிலும் ஓவியத் திறமையாளர்களுக்கு பிரகாசமாக இடம் உண்டு. டிஜிட்டல் ஓவியத்தில் சாதிப்பதே என் லட்சியம், என்கிறார் இவர்.
தொடர்புக்கு @shreyaz_arty_miracles
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!