கைக்குழந்தையுடன் பயிற்சிக்கு சென்றவர், ஒலிம்பிக் போட்டிக்கு மாணவர்களை தயார்படுத்துவதே லட்சியம் என்கிறார் ராமநாதபுரம் வில்வித்தை பயிற்சியாளர் மதுப்ரீத்தா.
வில்வித்தை போட்டிகள், அதற்கான பயிற்சிகள் ராமநாதபுரத்தில் அறிமுகம் ஆகாத காலத்தில் பள்ளிகள் தோறும் சென்று வில்வித்தை குறித்து எடுத்து கூறி தற்போது 400 பேருக்கு பயிற்சி அளித்து வருகிறார்.
அவர் கூறியதாவது:
பிறந்து வளர்ந்தது, பள்ளி படிப்பு எல்லாமே நாமக்கல். எங்கள் பள்ளிக்கு வந்த சங்கர் என்ற வில்வித்தை பயிற்சியாளர் என்னுடைய இன்ஸ்பிரேஷன்.அவர் மூலம்தான் வில்வித்தையில் எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. பின், எம்.எஸ்.சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் திண்டுக்கல்லில் படித்தேன்.
என்றாலும் வில்வித்தையில் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள முடிவெடுத்தேன். கணவர் செந்தில்குமார் கொடுத்த ஊக்கம் எனக்கு உத்வேகத்தை கொடுத்தது. வில்வித்தையில் முறையாக பயிற்சி பெற சென்னை ஒய்.எம்.சி.ஏ.,வில் சேர்ந்தேன். வார இறுதி நாட்களில் பயிற்சிக்கு செல்லும் போது மூத்த மகள் லோகப்ரியாவுக்கு ஒரு வயது. அவளையும் துாக்கிக் கொண்டுதான் பயிற்சிக்கு செல்வேன். கணவரும் உடன் வருவார்.
ஐந்து ஆண்டுகள் தீவிரமான பயிற்சி. அதன் பின் பல்வேறு கிளப் போட்டிகள், அசோசியேஷன் போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறேன். கடந்த 2017 ல் ராமநாதபுரம் வந்தேன். கணவருடன் இணைந்து வில்வித்தை குறித்தும் இத்துறையில் உள்ள வாய்ப்புகள் குறித்து பள்ளிகளுக்கு சென்று எடுத்து கூறினேன். ஆரம்ப காலங்கள் அவ்வளவு சாதகமாக இல்லை... நிறைய நிராகரிப்புகள்...வில்வித்தை பயிற்சிக்கான உபகரணங்களின் விலையும் அதற்கு ஒரு காரணமாக இருந்தது.
ஆர்வம் உள்ளவர்களுக்கு இலவச பயிற்சி கொடுத்தோம். இரண்டு முறை மாவட்ட போட்டிகளுக்கு வில் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வாங்கி கொடுத்தோம். தற்போது 15 பள்ளிகளில் வில்வித்தை பயிற்சி அளிக்கப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்ட வில்வித்தை கழக செயலாளராக இருக்கிறேன். 5 முதல் 17 வயதில் 400க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கிறேன்.
மாணவர்களை ஒலிம்பிக் போட்டிக்கு தயார் செய்வதே லட்சியமாக கொண்டிருக்கிறேன். ராமநாதபுரத்தில் ஸ்போர்ட்ஸ் அகாடமி ஒன்றை துவக்கி திறமையான, பொருளாதாரதத்தில் பின்தங்கியிருப்பவர்களை கண்டறிந்து பயிற்சிகள் அளிக்க உள்ளேன்.இவ்வாறு கூறினார்.
ஊருவிட்டு ஊரு வந்து...இலக்கு ஒன்றை தேர்வு செய்து... அதனை நோக்கி முயற்சி எனும் கணைகளைத் தொடுத்து வரும் இந்த வில்லாளி மதுப்ரீத்தா குறிக்கோளில் வெற்றி பெற வாழ்த்துவோம்.
மேலும் அறிய 82487 83741
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!