இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு விலங்கின் மரணம் உலகம் முழுவதும் உள்ள விலங்கியல் பற்றாளர்களிடம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
நல்ல நட்பு இருந்த காலத்தில் தங்கள் நட்பின்,அன்பின் அடையாளமாக சீனா,தைவானுக்கு இரண்டு பெரிய பாண்டா கரடிகளை வழங்கியது.பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு தைவான் மிருகக்காட்சி சாலைக்கு வந்து சேர்ந்த அந்த இரண்டு பாண்டா கரடிகள் ஒன்று துவான் துவான் என்றும் மற்றொன்று யுவுான் யுவான் என்றும் பெயரிட்டு அழைக்கப்பட்டது.
கருப்பும் வெள்ளையுமாக அனைவரது உள்ளத்தையும் கொள்ளை கொள்ளும் வகையில் இருந்த இரண்டு பாண்டா கரடிகளில் துவான் துவானுக்குதான் ரசிகர்கள் அதிகம், இவரைக்காண்பதற்காகவே மிருகக்காட்சி சாலைக்கு அதிகம் பேர் வரத்துவங்கினர்.இவரும் அவர்களை சந்தோஷத்துடன் வரவேற்று தானும் மகிழ்ந்து வந்தவர்களையும் மகிழ்வித்துக் கொண்டிருந்தார் அதிலும் குழந்தைகளைக் கண்டுவிட்டால் போதும் குஷி அதிகமாகிவிடும்.
நாளடைவில் துவான் துவான் இரண்டு மக்களை பெற்றுப்போட்டு பாண்டா இனத்தை விரிவு படுத்தினாலும் அதற்கான மவுஸ் குறையாமலே இருந்தது.
இந்த நிலையில் துவான் சில நாட்களுக்கு முன்னதாக சோர்வாக காணப்பட்டார் நடக்க சிரமப்பட்டார் கொடுத்த மூங்கில் உணவுகளை சாப்பிடாமல் நிறைய மிச்சம் வைத்தார்.
மிருகக்காட்சி சாலை மருத்துவர்கள் துவானின் பிரச்னைக்கு முடிவு காண பல்வேறு உபாயங்களை கையாண்டனர் அதற்கு எக்ஸ்-ரே,சி.டி.,ஸ்கேன்,ரத்த பரிசோதனை என்று எல்லாவித டெஸ்ட்டுகளும் எடுக்கப்பட்டன.
ஆனாலும் கொஞ்சம் கொஞ்சமாக தனது வழக்கமான செயல்பாடுகளில் இருந்து விடுபட்டுக்கொண்டே வந்தது.
தற்போது தைவானுடன் சீனா மோதல் போக்கை மேற்கொண்டு இருந்தாலும் துவான் துவானுக்காக பாண்டா கரடி பாதுகாப்பு நிபுணர் குழுவை உடனடியாக தைவானுக்கு அனுப்பிவைத்தது.
அந்த குழுவினர் மேற்கொண்ட முயற்சிகளும் தோல்வியில் முடிந்ததை அடுத்து துவான் துவான் கண்களில் மட்டும் உயிரைத் தேக்கியபடி தனது நண்பர்கள் ஆதரவாளர்கள் பராமரிப்பாளர்களை பார்த்து ஜீவனற்ற சிரிப்பை உதிர்த்தபடி இருந்தது பின் எல்லோரும் பார்த்திருக்க தன் உயிரைவிட்டது.பொதுவாக பாண்டா கரடிகளின் ஆயுட்காலம் பதினைந்தில் இருந்து இருபது ஆண்டுகள்தான் , துவானும் 18 வயதில்தான் இறந்து போயிருக்கிறார் ஆகவே அவரை நல்லமுறையில் வழியனுப்பிவைப்போம் என்ற உள்ளூர் மேயரின் அறிவிப்பின்படி பல நுாறு பேர் துவான் துவானின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டனர் அவர்கள் அனைவரின் கண்களிலும் கலப்படமில்லாத கண்ணீர் நிறைந்திருந்தது.
-எல்.முருகராஜ்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!