''ஆவினுக்கு நஷ்டம் அதிகரிக்குதுன்னு பயப்படுறாங்க பா...'' என்றபடியே, இஞ்சி டீயை உறிஞ்சினார் அன்வர்பாய்.
''விளக்கமா சொல்லும் ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''அ.தி.மு.க., ஆட்சியில, தினசரி 41 லட்சம் லிட்டர் பாலை, விவசாயிகளிடம் இருந்து ஆவினுக்கு கொள்முதல் செஞ்சிட்டு இருந்தாங்க... இது படிப்படியா குறைஞ்சு, இப்ப, 30 லட்சத்து 50 ஆயிரம் லிட்டர் மட்டுமே கொள்முதல் செய்றாங்க பா...
''அதாவது, 10.50 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் குறைஞ்சிருக்குது... 'இதுக்கு அரசும், திறமையற்ற அதிகாரிகளும் தான் காரணம்'னு ஆவின் ஊழியர்களே சொல்றாங்க... 'இப்படி, கொள்முதல் அளவு குறைஞ்சிட்டே போனா, ஆவின் நிர்வாகம் நஷ்டத்துல மூழ்கிடும்'னும் வருத்தப்படுறாங்க பா...'' என்றார் அன்வர்பாய்.
''பதவி உயர்வு இல்லாம பரிதவிச்சுண்டு இருக்கா ஓய்...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார் குப்பண்ணா.
''எந்தத் துறையிலங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''மின் வாரிய தலைமை அலுவலகம், சென்னையில 10 மாடி கட்டடத்துல இயங்கறதோல்லியோ... இங்க, எட்டாவது, 'புளோர்'ல, நிர்வாக பிரிவு இருக்கு ஓய்...
''இங்க தான், கள உதவியாளர் முதல், உதவி செயற்பொறியாளர் வரையிலான அதிகாரிகள், ஊழியர்களின் பதவி உயர்வு, இடமாறுதல் போன்ற பணிகளை கவனிக்கறா... இது போக, மின் கொள்முதல், மின் திட்டங்கள், நீர்மின் நிலையங்கள் போன்ற தொழில்நுட்ப அமைப்புகளின் நிர்வாக பிரிவுகளும் இங்க இருக்கு ஓய்...
''இந்தப் பிரிவுகள்ல உதவி தனி அலுவலர், கண்காணிப்பாளர், உதவியாளர், இளநிலை உதவியாளர் அந்தஸ்துல நிறைய பேர் வேலை பாக்கறா... மின் வாரியம் தரப்பு சமீபத்துல, நிர்வாகம் மற்றும் தொழில்நுட்ப நிர்வாக பிரிவுகளை இணைச்சிடுத்து ஓய்...
''இதனால, தொழில்நுட்ப நிர்வாக பிரிவுல இருந்த பலருக்கு பதவி உயர்வு அடிபட்டு போயிடறது... அதோட, பல பதவிகள் ரத்தாகற சூழலும் ஏற்பட்டிருக்காம்... அவாள்லாம், 'ஷாக்' அடிச்சா மாதிரி அதிர்ச்சியில இருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''மாஜி எம்.எல்.ஏ.,வை உட்கார கூட சொல்லாம அவமதிச்சு அனுப்பிட்டாங்கல்லா...'' என, கடைசி தகவலுக்கு மாறினார் அண்ணாச்சி.
''அடடா... யாருங்க அது...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''தி.மு.க., கூட்டணியில இருக்கிற முஸ்லிம் கட்சியைச் சேர்ந்த, 'மாஜி' எம்.எல்.ஏ., ஒருத்தர், சமீபத்துல, பள்ளிக்கல்வி அமைச்சரை பார்க்க, கோட்டைக்கு போயிருக்காரு... அப்ப, அமைச்சர் இல்ல வே...
''அங்க இருந்த ஊழியர், பக்கத்துல கிடந்த அழுக்கு ஸ்டூலை காட்டி, 'உட்காருங்க'ன்னு சொல்லியிருக்காரு... உட்காராத மாஜி, தன் விசிட்டிங் கார்டை எடுத்து, 'உள்ளே குடுங்க'ன்னு சொன்னதுக்கு ஊழியர், 'உங்களை தெரியாதா... கார்டெல்லாம் வேண்டாம்'னு சொல்லிட்டாரு வே...
''கொஞ்ச நேரம் கழிச்சு, 'அமைச்சர் பி.ஏ., உங்களை கூப்பிடுதார்'னு ஊழியர் சொல்ல, மாஜியும் உள்ள போயிருக்காரு... பி.ஏ.,வோ தலைவலி தைலத்தை நெத்தியில தடவிக்கிட்டே, 'என்ன விஷயம்'னு அசால்டா கேட்டிருக்காரு வே...
''ஒப்புக்கு கூட உட்கார சொல்லலை... நொந்து போன மாஜி, தன்னோட கோரிக்கையை சொல்லிட்டு, விருட்டுன்னு கிளம்பிட்டாரு வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
''வாங்க அபுபக்கர்... குவைத்துல இருந்து எப்ப வந்தீங்க...'' என, நண்பரிடம் அன்வர்பாய் பேச ஆரம்பிக்க, மற்றவர்கள் கிளம்பினர்.
மாஜி . மாஜி.. க்கு ஏது மரியாதை? இன்றைக்கு தாசில்தார் ரிடையார்ட் ஆனால் நாளைக்கு அவர் மாஜி. அவர் வேலைசெய்த ஆபீஸிலேயே அவருக்கு மதிப்பு இருக்காது. பணிகாலத்தில் நடத்தை அப்படி..