பா.ஜ.,வின் சிறுபான்மை பிரிவு தேசிய செயலர் வேலுார் இப்ராஹிம்: பயங்கரவாத பின்புலம் உடைய ஜாகிர் நாயக்கை, ஞானி என புகழ்வது, ஒரு எம்.எல்.ஏ.,வுக்கு அழகல்ல. விஜயதாரணி பேச்சு முழுக்க முழுக்க, ஓட்டு அரசியலை பின்புலமாக கொண்டது. பயங்கரவாதியாக பார்க்கப்படும் ஜாகிர் நாயக்கை ஆதரித்து பேசும் விஜயதாரணியை, இந்த சமூகம் புறக்கணிக்க வேண்டும். அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து, தண்டிக்க வேண்டும்.
டவுட் தனபாலு: இப்படி எல்லாம் பயங்கரவாதிகளை ஆதரித்து பேசினால் தான், சிறுபான்மையினர் ஓட்டு போடுவாங்க எனக் கருதுவது முட்டாள் தனம்... பெரும்பாலான சிறுபான்மையினர், இந்த மாதிரி பயங்கரவாதிகளை ஆதரிப்பவங்களை பக்கத்துலயே சேர்க்க மாட்டாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
பத்திரிகை செய்தி: மஹாராஷ்டிராவைச் சேர்ந்த டாக்டர் ஜாகிர் நாயக்கின் பேச்சு மற்றும் செயல்பாடுகளின் பின்னணியில், பயங்கரவாத நடவடிக்கை இருப்பதை கண்டறிந்த மத்திய அரசு, அவரை கைது செய்ய முயற்சித்தது. இதனால் ஜாகிர் நாயக், மலேஷியாவுக்கு தப்பிச் சென்று, தஞ்சமடைந்துள்ளார். இந்தச் சூழலில், கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு தொகுதி காங்., - -எம்.எல்.ஏ., விஜயதாரணி, 'ஜாகிர் நாயக் ஒரு ஞானி. அவர் மீது மத்திய அரசு தவறாக நடவடிக்கை எடுக்க முயல்கிறது. அப்படிப்பட்ட அரசு நமக்கு தேவையில்லை' என்று கூறியுள்ளார்.
டவுட் தனபாலு: ஜாகிர் நாயக் எல்லாம், காங்., - எம்.எல்.ஏ., கண்களுக்கு ஞானியாக தெரிகிறாங்க என்றால், ஒசாமா பின்லேடனும், தாவூத் இப்ராஹிமும் கடவுள்களாகவே காட்சி தருவாங்களோ... எந்த கருத்தையும் இஷ்டத்துக்கு பேசலாம் என்ற, இவங்களை போன்றவர்களுக்கு கடிவாளம் போடணும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
பத்திரிகை செய்தி: ௧௦ ஆண்டு களாக, நடிகர் விஜய் படங்கள் வெளியீட்டின் போது, சிக்கல்கள் ஏற்படுவதால், அதற்கெல்லாம் ஒரே தீர்வு அரசியல் பிரவேசம் தான் என, அவர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. சத்தமில்லாமல் தன் ரசிகர் மன்றங்கள் வாயிலாக, அரசியலில் களமிறங்க காத்திருக்கிறார்.
டவுட் தனபாலு: தமிழகத்தில் நடிகராக இருந்து கட்சி துவங்கி வெற்றி பெற்றவர் எம்.ஜி.ஆர்., மட்டுமே... அதன்பின், சிவாஜி, ராஜேந்தர், பாக்யராஜ், விஜயகாந்த், சரத்குமார், கார்த்திக், கமல் போன்ற ஜாம்பவான் நடிகர்கள் கட்சி துவங்கி, கடைசியில் என்னவாகினர் என்பதை, நடிகர் விஜய் ஒரு கணம் சிந்தித்து பார்த்தால், விபரீத முடிவு எடுக்க மாட்டார் என்பதில், 'டவுட்'டே இல்லை!
\\நடிகர் விஜய் படங்கள் வெளியீட்டின் போது, சிக்கல்கள் ஏற்படுவதால், அதற்கெல்லாம் ஒரே தீர்வு அரசியல் நடிகர் விஜய் படங்கள் வெளியீட்டின் போது, சிக்கல்கள் ஏற்படுவதால், அதற்கெல்லாம் ஒரே தீர்வு அரசியல் பிரவேசம்தான் \\ .. ஆக மொத்தம் மக்களுக்கு நல்லது பண்ணுவதற்காக அரசியலுக்கு வரலை .... தன்னோட படங்களுக்கு எந்த பிரச்சினையும் வரக்கூடாது அப்டிங்கறதுக்காத்தான் ......சினிமாகாரங்களுக்கு எல்லோருக்குமே இது ஒண்ணுதான் குறி ... அதை புரிஞ்சுக்காத நாமதான் மக்கு முண்டங்கள் .. ..