''பா.ஜ., கூட்டணி அரசுல தி.மு.க.,வினர் பதவி வாங்கிய கதை தெரியுமா ஓய்...'' என, விறுவிறுப்பான தகவலுடன் பெஞ்சுக்கு வந்தார் குப்பண்ணா.
''ஆச்சரியமா இருக்கே... எந்த ஊருலங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''நம்ம பக்கத்து ஸ்டேட் புதுச்சேரியில, என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கறதோல்லியோ... அங்க, சமீபத்துல, 60க்கும் மேற்பட்ட நோட்டரி பப்ளிக் வக்கீல்கள் நியமனம் நடந்துது ஓய்...
''இதுக்கு, பா.ஜ., மற்றும் என்.ஆர்.காங்கிரசார் தரப்புல கடும் போட்டி ஏற்பட்டது... ஆனாலும், தி.க., - தி.மு.க., மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த வக்கீல்கள் பலருக்கு, நோட்டரி பப்ளிக் பதவி குடுத்திருக்கா ஓய்...
''பா.ஜ.,வையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சிக்கற கட்சிகளைச் சேர்ந்தவாளுக்கு பதவிகள் குடுத்தது, புதுச்சேரி பா.ஜ.,வினரை அதிர்ச்சியில தள்ளிடுத்து... இது சம்பந்தமா, டில்லி மேலிடத்துக்கு புகார் அனுப்பியிருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''ஓய்வுல போனவங்க தலையீடு அதிகமா இருக்குதுங்க...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார் அந்தோணிசாமி.
''எந்த துறையில பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''சென்னை மாநகராட்சியில வேலை பார்த்து ஓய்வு பெற்ற அதிகாரிகள் சிலர், அந்தந்த ஏரியா கவுன்சிலர்களின் உதவியாளர்கள் மாதிரி செயல்படுறாங்க... கட்டடம் கட்ட அனுமதி, வரி மதிப்பீடு, பிறப்பு, இறப்பு பதிவு, கடை நடத்த உரிமம், சுகாதார சான்றுன்னு, பல சேவைகளை மாநகராட்சி அலுவலகங்கள்ல வழங்குறாங்களே...
''மாஜி அதிகாரிகள், பணியில இருக்கிற அதிகாரிகளுக்கு அழுத்தம் குடுத்து, இந்த மாதிரி காரியங்களை சுலபமா முடிச்சுக்கிறாங்க... அது மட்டும் இல்லாம, ஒப்பந்த நிறுவனங்கள் மூலமா சாலை, தெருவிளக்கு, திடக்கழிவு மேலாண்மை போன்ற பணிகள் நடக்குதுங்க... இதுலயும், கவுன்சிலர்கள் சார்புல குறிப்பிட்ட தொகையை கமிஷனா கேட்டு அடம் பிடிக்கிறாங்க...
''சோழிங்கநல்லுார் மண்டல மின் துறையில ஓய்வு பெற்ற ஒரு அதிகாரியை, சில கவுன்சிலர்கள் உதவியாளர் மாதிரி வச்சுக்கிட்டு, மாநகராட்சியின் அனைத்து துறைகளிலும் புகுந்து, வாரி குவிக்கிறாங்க... இதனால, வெறுத்து போன நேர்மையான அதிகாரிகள், கமிஷனரிடம் புகார் குடுத்திருக்காங்க... இது சம்பந்தமா, விசாரணை நடக்குதுங்க...'' என்றார் அந்தோணிசாமி.
''அமைச்சருக்கு தரணும்னு வசூல் பண்ணியிருக்காரு வே...'' என, கடைசி தகவலுக்கு தாவிய அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''பெரம்பலுார் மாவட்டத்துல, 55 கல் குவாரிகள் அரசு அனுமதியுடன் இயங்கிட்டு இருக்கு... இங்க விதிமுறைகளை மீறி, வெடி வச்சு கற்களை எடுத்து, கோடிக்கணக்குல சம்பாதிக்காவ வே...
''கனிமவளத் துறை அதிகாரிகள், மாதாந்திர கப்பத்தை வாங்கிட்டு கமுக்கமா போயிடுதாவ... சமீபத்துல, துறையின் அமைச்சர் துரைமுருகன் மற்றும் கமிஷனர் ஜெயகாந்தன் ஆகியோருக்கு தரணும்னு, தலா 5 லட்சம் ரூபாய் வீதம், 55 குவாரிகள்லயும், 2.75 கோடி ரூபாயை கனிமவளத் துறை அதிகாரி வசூல் பண்ணியிருக்காரு...
''இதெல்லாம் நிஜமாவே மேலிடத்துக்கு தானான்னு தெரியாம குவாரி உரிமையாளர்கள் மண்டை காய்ஞ்சு போய் கிடக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''அது சரி... இந்த ஆட்சியில யாரும், 'சத்தியசீலனா' இருக்க முடியாது போல ஓய்...'' என்றபடியே குப்பண்ணா எழ, மற்றவர்களும் கிளம்பினர்.
நிஜமாவே 2.75 கோடி மேலிடத்துக்கு தானான்னு தெரியாம குவாரி உரிமையாளர்கள் மண்டை காய்ஞ்சு போய் கிடக்காவ... தினமலர் டீ கடையில் பேசியாச்சு. இரண்டொரு நாளில் பட்டும் படாமலும் துரைமுருகன் பதிலை எதிர்பார்க்கலாம்..