''அவைத் தலைவரை பற்றி புகார் தெரிவிச்சும், மாவட்டச் செயலர்கள் கண்டுக்கலை பா...'' என்ற அரசியல் தகவ லுடன், அரட்டையை ஆரம்பித்தார் அன்வர்பாய்.
''எந்த கட்சியிலங்க...'' என விசாரித்தார், அந்தோணிசாமி.
''சமீபத்துல, ம.தி.மு.க., மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலர்களுடன் வைகோ வீடியோ கான்பரன்ஸ்ல ஆலோசனைக் கூட்டம் நடத்தினாரு... அப்ப, கட்சியின் செயல்பாடு கள் மற்றும் தலைமையை விமர்சித்து, அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி எழுதிய கடிதங்கள் பத்தி வருத்தப்பட்டிருக்காரு பா...
''அதோட, 'அவரது செயலை எந்த மாவட்டச் செயலரும் கண்டிக்காததும், எனக்கு பெரிய மனக்குறை'ன்னு கண்ணீர் வடிக்காத குறையா உருக்கமா பேசியிருக்காரு... ஆனா, ஒருத்தர் கூட துரைசாமிக்கு எதிராகவோ, வைகோவுக்கு ஆறுதலாகவோ ஒரு வார்த்தை பேசலையாம் பா...
''இது பத்தி அவங்களிடம் விசாரிச்சா, 'அண்ணாதுரை காலத்துல இருந்த தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர்கள்ல இப்ப இருக்கிறவர், திருப்பூர் துரைசாமி மட்டும் தான்... அவர் எழுதிய கடிதங்கள்ல நியாயம் இருக்கு... அதான், அவருக்கு எதிரா எதுவும் பேசலை'ன்னு சொல்றாங்க பா...'' என்றார் அன்வர்பாய்.
''இதே கட்சி சம்பந்தமா என்கிட்டயும் ஒரு தகவல் இருக்குல்லா...'' என்ற அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''வைகோ பத்தி மாமனிதன்னு ஒரு ஆவணப் படத்தை, அவரது மகன் துரை ஏற்பாட்டுல தயாரிச்சிருக்காங்கல்லா... ஊர் ஊரா போய் அந்த படத்தை துரையே போட்டு காட்டுதாரு வே...
''சமீபத்துல, திருப்பூர் மாவட்டத்துல இந்த படத்தை போட்டிருக்காவ... படம் பார்க்க, தி.மு.க.,வைச் சேர்ந்த மாவட்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களுக்கு அழைப்பு குடுத்திருக்காவ வே...
''ஆனா, ஒருத்தர் கூட தியேட்டர் பக்கமே எட்டி பார்க்கலை... அதே மாதிரி, திருப்பூர் புறநகர் மாவட்ட செயலர் ஆர்.டி.மாரியப்பன் ராஜினாமா பண்ணிட்டதால, அவரது இடத்துக்கு புதிய செயலரை வைகோ போட்டிருக்காரு...
''அதுக்கு எதிர்ப்பு தெரிவிச்சு, திருப்பூர், அவிநாசி, பல்லடம், தாராபுரம் பகுதி ம.தி.மு.க., நிர்வாகிகளும், படம் பார்க்க வராம, 'பாய்காட்' பண்ணிட்டாவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''இப்படி கஷ்டப்படறதுக்கு பதிலா, பேசாம தி.மு.க.,வோட கட்சியை, 'மெர்ஜ்' பண்ணிடலாமோன்னோ...'' என்ற குப்பண்ணா, ''அஞ்சு மாசமா பணம் வராம தவிக்கறா ஓய்...'' என, கடைசி மேட்டருக்கு மாறினார்.
''யாருக்கு, எந்தப் பணம் வரலைங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''ஆதிதிராவிட நலத்துறை கட்டுப்பாட்டுல இருக்கற விடுதிகள்ல, மாணவர்களுக்கு உணவு வழங்க மாசா மாசம் அரசு சார்புல பணம் வழங்குவா... விடுதி வார்டன்கள், உள்ளூர் கடைகள்ல கடனுக்கு மளிகை, காய்கறிகளை வாங்கி, மாணவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்வா ஓய்...
''அரசிடம் இருந்து பணம் வந்ததும் கடைகளுக்கு, 'செட்டில்' பண்ணுவா... காஞ்சிபுரம் மாவட்டத்துல இருக்கற விடுதிகளுக்கு, அஞ்சு மாசமா அரசிடம் இருந்து உணவுக்கான பணம் வரலை ஓய்...
''இதனால, பொருட்களை 'சப்ளை' செஞ்ச கடைக்காரா, வார்டன்களை நச்சரிக்கறா... ஏதோ நிர்வாக குளறுபடியால பணம் வராம போயிடுத்துன்னு சொல்றா... புதுசா பொருட்கள் வாங்கவும் முடியாம, வார்டன்கள் தவியா தவிக்கறா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.
வைகோ புலம்பி புலம்பி காலம்தள்ள வேண்டியது தான். 2024 க்கு பிறகு ராம்தாஸ் கட்சியும் புலம்பும்.