Load Image
Advertisement

வாழ்க்கையின் ஆழத்தை அறிந்துகொள்ள என்ன செய்ய வேண்டும்?

'இரண்டு நிமிடங்களுக்கு மேல் ஓர் இடத்தில் என்னால் பொருந்தி உட்கார முடியாது. தொடர்ந்து ஒரே விஷயத்தை என்னால் கவனிக்க முடியாது' என்றெல்லாம் சொல்லிக் கொள்வதே இன்று ஒரு தகுதியாகிவிட்டது. ஆனால் தொடர்ந்து ஒரு விஷயத்தை கவனித்தால் என்னாகும் என்பதை தன் வாழ்க்கை அனுபவத்தின் மூலம் இங்கே பகிர்கிறார் சத்குரு...

சத்குரு:



சிறு வயதிலிருந்தே என்னிடம் அதிகம் பேச்சு இருக்காது. இந்தப் பூமிக்குப் புதிதாக வந்த குழந்தை, தான் பார்ப்பதை எல்லாம் ஆர்வமாக, முழுமையாகக் கவனித்து உள்வாங்கிக் கொள்வதுபோல், 17 வயது வரை காண்பதை எல்லாம் முழுமையாக அருந்தும் தாகம் என்னிடம் இருந்தது.

ஒரு புல்லை, இலையை, பூச்சியை என எல்லாவற்றையும் மணிக் கணக்கில் கூர்ந்து கவனிக்கும் குணம் கொண்டிருந்தேன். மனிதர்களைக் கூட விழுங்கி விடுவதுபோல் பார்த்துக் கொண்டே இருப்பேன்.

சனி, ஞாயிறுகளில் என் சகோதர-சகோதரிகள் தங்கள் நண்பர்களைப் பார்க்கப் போய்விடுவார்கள். மற்றவர்கள் ரேடியோவில் ஆழ்ந்திருப்பார்கள். நானோ சுட்டெரிக்கும் வெயிலைப் பொருட்படுத்தாமல் மொட்டை மாடியில் போய் அமர்வேன். நீல வானத்தை, அதில் மிதக்கும் மேகங்களை வெறித்துக் கொண்டு இருப்பேன். அதனாலேயே என் முகம் வெகுவாகக் கறுத்துப் போனது.

மரணத்துக்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள, இளம் வயதில் பல இரவுகளைச் சுடுகாடுகளில் கழித்திருக்கிறேன். ஆனால், எவ்வளவு வெறித்தும், சுடுகாடுகளில் ஆவிகளை என்னால் காண முடியவில்லை. ஆவிகளைச் சந்திப்பதற்காக மேற்கொண்ட இந்த முயற்சிகளால், என் கவனிக்கும் தன்மைதான் மேலும் கூர்மையானது.

இரவு நேரத்தில் வனங்களில் அலைந்திருக்கிறேன். ஒருபோதும் கையில் டார்ச் எடுத்துப் போனதில்லை. முழுமையான கவனத்தைச் செலுத்தியதால், இருட்டு எனக்கு ஒரு பொருட்டாக இருந்ததில்லை. விளக்குகளை அணைத்துவிட்ட பின், கும்மிருட்டிலும் எல்லாவற்றையும் கவனித்துப் புரிந்து கொள்ளும் சொல்வதற்கரிய தன்மை என்னிடம் இருந்தது.

எனக்கு மட்டுமே வழங்கப்பட்ட வரம் அல்ல அது. உரிய கவனம் கொடுத்துப் பார்த்தால், உங்கள் விழிகள் கூட உங்களுக்கு எல்லாவற்றையும் காண்பிக்க வல்லவை.

மிருகங்கள் கூட ஆழ்ந்து கவனிக்கின்றன. குறிப்பாக, தங்கள் இரையை நோக்கி நகரும் விலங்குகள் எப்பேர்ப்பட்ட கலையாத கவனத்துடன் இருக்கின்றன என்று கவனியுங்கள். அந்த ஆழ்ந்த கவனம் இல்லையென்றால், வனங்களில் நீங்கள் பிழைத்திருக்க முடியாது.

மிருகங்களுக்கே, அது சாத்தியம் என்றால், மனிதர்களுக்கு ஏன் சாத்தியமில்லை? விலங்குகளைவிட பரிணாம வளர்ச்சி கண்டவர்கள் அல்லவா நாம்?

கன்னி மேரி, பாலகன் யேசுவைப் பூமிக்கு அழைத்து வந்திருந்தாள். தேவாலயத்தில் பாதிரியார்கள் கூடினர். ஒவ்வொருவராக மேரியை அணுகி யேசுவைத் தரிசித்தனர். தங்களுக்கு தெரிந்த பிரார்த்தனைகளைச் சொல்லினர்.
பாலகன் யேசுவிடம் எந்த மாற்றமும் இல்லை.

யேசுவைத் தரிசிக்க, தெருவில் கழைக்கூத்தாடும் ஒரு சிறுவனும் வந்திருந்தான். கந்தல் ஆடைகளுடன் வந்திருந்த அவனைப் பாதிரியார்கள் விரட்டப் பார்த்தனர். அந்தச் சிறுவன் தன்னிடமிருந்த மூன்று பந்துகளைக் காற்றில் தூக்கிப் போட்டு, முழுக் கவனத்துடன் அவற்றை மாற்றி மாற்றிப் பிடித்து யேசுவுக்கு வித்தை காட்டினான். பாலகன் யேசுவின் முகத்தில் முதன்முறையாகப் புன்னகை அரும்பியது.

பாதிரியார்களுக்குக் கூட கிடைக்காத பாக்கியமாக, யேசுவைச் சற்றுநேரம் தூக்கி வைத்துக் கொள்ள அந்தச் சிறுவனிடம் ஒப்படைத்தாள் கன்னி மேரி.

முழுமையான கவனத்துடன் நீங்கள் இருக்கையில், கடவுள் உங்களைக் கவனிக்கிறார். ஆன்மீகம் என்பது அவ்வளவுதான். ஒரு குறிப்பிட்ட கட்டத்தைத் தாண்டியும் முழுமையான கவனம் செலுத்த முடிந்தால், பிரபஞ்சமே தன் கதவுகளை உங்களுக்குத் திறந்துவிடும். வாழ்க்கையின் மொத்தப் பரிமாணங்களையும் நீங்கள் எந்தத் தடையும் இல்லாமல், சுலபமாகத் தரிசிக்க முடியும்.

'இரண்டு நிமிடங்களுக்கு மேல் ஓர் இடத்தில் என்னால் பொருந்தி உட்கார முடியாது. தொடர்ந்து ஒரே விஷயத்தை என்னால் கவனிக்க முடியாது' என்றெல்லாம் சொல்லிக் கொள்வதே இன்றைக்குப் பெரும் தகுதியாக நினைக்கப்படுகிறது. அது தகுதி அல்ல. உண்மையில் பல அற்புத வாய்ப்புகளைக் கழுத்தை நெரித்துக் கொல்லும் தன்மை அது.

தியானம் என்பது ஆழ்ந்த கவனம்தான். மிக அற்பமானதிலிருந்து மிக அற்புதமானது வரை ஒவ்வொன்றையும், ஏன் ஒன்றுமே இல்லாத வெறுமையைக் கூட மிக ஆழ்ந்து கவனிக்கும் தன்மையே தியானம்.

உங்களுக்குப் புலப்படாத பல ஒலிக்குறிப்புகள், பார்வையற்றவர் செவிகளுக்குப் புலப்படும். காரணம், அவருடைய கவனிக்கும் தன்மை கேட்பதில் கூர்மையாக இருக்கும்.

ரே சார்லஸ் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? அவர் ஜாஸ் இசைக் கலைஞர். சிறு வயதிலேயே பார்வை இழந்தவர்.

தனக்கு வழிகாட்ட ஒரு நாயை அவர் அழைத்துப் போனதில்லை. கையில் கோல் இல்லாமலேயே தெருவில் நடப்பார். ஒருமுறைகூட எதன் மீதும் அவர் மோதிக் கொண்டது இல்லை. எப்படி இது சாத்தியம் என்று கேட்கப்பட்டபோது அவர் சொன்னார்...

"நடக்கையில் என் பாதங்கள் தரையில் பதிந்து மீள்வதில் ஒரு தாளம் உண்டு. 'டக் டடக்' என்று. அந்த எதிரொலியை வைத்து எதன் அருகில் இருக்கிறேன். எவ்வளவு தூரத்தில் இருக்கிறேன் என்று என்னால் புரிந்து கொள்ள முடியும்."

தொழில்நுட்பம் அதீதமாக வளர்ந்துவிட்ட காரணத்தால், எதையும் கூர்ந்து கவனிக்கும் தன்மை இன்றைய மனிதர்களிடம் அடியோடு காணாமல் போய்விட்டது. முழுமையான கவனத்துடன் வாழ்க்கையைப் பார்க்கத் தெரியாவிட்டால், ஒருபோதும் அதன் ஆழத்தைப் புரிந்து கொள்ள முடியாது.

அந்தந்தக் கணத்தில், நுணுக்கமாகக் கவனம் செலுத்துவது என்பது, உங்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் பழைய பதிவுகளில் இருந்து விடுவிக்கும்.

பிரபஞ்சத்தில் லட்சக்கணக்கான நிகழ்வுகள் நடந்து கொண்டு இருக்கின்றன. அவற்றைக் கூர்ந்து கவனியுங்கள். வாழ்க்கையை நீங்கள் அறியும் தன்மை, புரிந்து கொள்ளும் திறன், அதன் ஆழத்தை ஊடுருவிப் பார்க்கும் ஆற்றல் எல்லாம் கைகூடும்!



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement