Load Image
Advertisement

அஞ்சாமல் நடக்குது கஞ்சா பிஸினஸ்... போலீஸ் காட்டில 'மாமூல்' மழை சக்சஸ்!

காட்டன் மார்க்கெட்டுக்கு செல்ல சித்ராவும், மித்ராவும், சென்று கொண்டிருந்தனர்.

அப்போது புது பஸ் ஸ்டாண்டை பார்த்த மித்ரா, ''ஸ்மார்ட் சிட்டி திட்டத்தால, எப்படியிருந்த பஸ் ஸ்டாண்ட், எப்டியாடுச்சு பாருங்க,'' என, வியந்தாள்.

''சும்மாவா மித்து. 40 கோடி ரூபாய் செலவு பண்ணியிருக்காங்க. திறப்பு விழா நடத்த நாள் பார்த்துட்டு இருக்காங்க. இதுல என்ன ஒரு கூத்துன்னா. பஸ் ஸ்டாண்ட் கட்ட, உள்ளூர் திட்டக்குழுவுல அனுமதி வாங்கோணும். ஆனா, அதுக்கு விண்ணப்பிக்கவே இல்லைங்கற விஷயம் இப்பத்தான் தெரிய வந்திருக்கு. அவசர, அவசரமா அனுமதி வாங்கறதுக்கான வேலய செஞ்சு முடிச்சிட்டாங்களாம்,'' என்றாள் சித்ரா.

''எத்தன முக்கியமான விஷயம்; இப்படியா கோட்டை விடுவாங்க'' என, அங்கலாய்த்த மித்ரா,''ஆட்சி, அதிகாரம் கைல இருக்குல்ல; அனுமதியெல்லாம் வாங்கிடுவாங்க,'' என்றவள் தொடர்ந்தாள்.

''இதாச்சும் பரவாயில்ல மித்து. பல்லடம் ஜி.எச்.,ல கட்டாத கட்டடத்துக்கு 'பில்' போட்டு எடுத்துட்டாங்கன்னு புகார் வந்திருக்குது. கொரோனா காலத்துல, ஆக்சிஜன் செறிவூட்டும் அறை கட்ட நிதி ஒதுக்குனாங்க. ஆனா, கட்டடவே இல்ல,''

''இதபத்தி சமூக ஆர்வலர் ஒருத்தரு 'சி.எம்., செல்'லுக்கு 'பெட்டிஷன்' போட, 'என்கொயரி' வரைக்கும் வந்துடுச்சாம். உடனே சுதாரிச்சிட்டு இப்பதான் கட்டற வேலய ஆரம்பிச்சிருக்காங்களாம். அதுவும் அரைகுறையாத்தான் நடக்குதாம்'' என்றாள் சித்ரா.

'மேலிட' வில்லங்கம்!ரோட்டோரம் இருந்த பேக்கரிக்குள் நுழைந்த இருவரும், காபியும், மெதுவடையும் ஆர்டர் செய்தனர்.

''மேலிட சொல்வாக்கு' இல்லாம, இப்படியெல்லாம் மெத்தனமா இருக்க முடியுமா என்ன?'' என பேச்சை தொடர்ந்தாள் மித்ரா.

''மேலிடம்ன்னு நீ சொல்லவும் தான் ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருது மித்து. நல்லுார் மண்டலத்துல ரெண்டு வார்டில், புதுசா சைட் போட்டு, 'லே அவுட்' பண்ணி வைச்சிருக்காங்க,''

''அங்க கழிவுநீரை வெளியேத்த 'டிஸ்போசபிள் பாய்ன்ட்' இல்லாததால, அனுமதி கொடுக்க கூடாது'ன்னு, அந்த வார்டு கவுன்சிலர், மண்டல கூட்டத்துல பேசியிருக்காங்க. இதபத்தி விவாதிக்காம, தீர்மானம் நிறைவேத்திட்டாங்களாம்,''

''கூட்டம் முடிஞ்ச துக்கு அப்றமா, ஆட்சேபனை சொன்ன கவுன்சிலர்ங்கள கூப்பிட்டு, 'இந்த 'லே அவுட்'டுக்கு அனுமதி தரணும்ன்னு, மினிஸ்டர் 'ரெக்கமண்ட்' பண்ணியதால், தான், தீர்மானம் போட்டோம்'ன்னு சொல்லி, 'ஆப்' பண்ணிட்டாங்களாம்,'' என, ரகசியம் உடைத்தாள் சித்ரா.

''நிறைய இடங்கள்ல, மினிஸ்டர் பேரை சொல்லித்தான் கட்சிக்காரங்க அளப்பறை பண்றாங்க; இப்படிதான், அவிநாசியிலுள்ள சோலை நகர்ல, அரசாங்கத்தோட அடுக்குமாடி குடியிருப்பை வாங்கின பலரு, வீட்டை பூட்டியே வைச்சிருக்காங்க...''

''சிலர் வாடகைக்கு விட்டுட்டாங்கன்னு புகார் கிளம்ப, வாரிய அதிகாரிங்க அங்க போய், பூட்டியே இருக்க ஒரு வீட்டோட பயனாளிய போன்ல கூப்பிட்டு, 'வீட்டை ஏன் பூட்டியே வைச்சிருக்கீங்க'ன்னு கேட்க, 'நான் பால் காய்ச்சிட்டுதான் பூட்டி வைச்சிருக்கேன். மினிஸ்டர் கிட்ட எதுவும் பேசணுமா'ன்னு, மிரட்டற மாதிரி பதில் சொல்லியிருக்காரு,''

''என்ன கொடுமை சார் இது. நியாயத்தை கேட்டா, இப்டி பேசறாங்க. இதுக்கெல்லாமா மினிஸ்டர்கிட்ட போவாங்க'ன்னு அந்த ஆபீசர் 'ஷாக்' ஆகிட்டாராம். 'எல்லாம் அந்த 'கோவிந்தனுக்கே' வெளிச்சம்ன்னு, அங்கிருக்கறவங்க பேசறாங்களாம்,'' என்றாள் சித்ரா.

'மாமூல்' வாழ்க்கை!''அக்கா அதே அவிநாசியில, சில்லிங்ல சரக்கு விற்பதையே 'பார்'காரங்க விட்டுட்டாங்களாம்,'' என்றாள் மித்ரா.

''அடடே…பரவாயில்லையே; அந்தளவுக்கு அந்த போலீஸ் 'ஸ்டிரிக்ட்டா' இருக்காங்களா'' என, ஆச்சர்யத்தில் சித்ரா கேட்டதும், ''அட போங்கக்கா. நீங்க வேற…விவரம் புரியாம...'' என, செல்லமாக கோபப்பட்ட மித்ரா தொடர்ந்தாள்.

''மொத்தம், 14 'டாஸ்மாக்' கடைங்க இருக்கு. எல்லா கடைல இருக்கற 'பார்'லேயும், 24 மணி நேரமும், 'சில்லிங்'ல சரக்கு ஜோரா விக்கறாங்க. இதுல என்ன ஒரு கூத்துன்னா, 'விலைவாசி அதிகமாகிட்டதால, வழக்கமா தர்ற மாமூல் அமவுன்ட்ல இருந்து, சில ஆயிரம் ரூபாயை சேர்த்து தரணும்'ன்னு ஆபீசர்ஸ் கேட்டாங்களாம்,''

''அய்யோ சாமி. இதெல்லாம் எங்களுக்கு கட்டுப்படியாகாது,'ன்னு சொல்லி, ஏழு பார்ல, சில்லிங் சரக்கு விற்பனையை நிறுத்திட்டாங்களாம். அதே மாதிரி, அந்த ஊர்ல, எட்டு தாபா ரெஸ்ட்ரான்ட் இருக்கு. இதுல, ஆறு ரெஸ்ட்ரான்ட்ல எப்ப போனாலும், சரக்கு வாங்கலாமாம். சாயந்திரம் ஆன, ஒரே பார்ட்டி தானாம்,''

''என்ன மித்து. விஜயகாந்த் மாதிரி, புள்ளிவிவரமா விஷயத்தை புட்டு புட்டு வைக்கிறியே,'' என, சிரித்தாள் சித்ரா.

''சரக்கு மட்டுமில்லையாம். கஞ்சா விற்பனையும் கனஜோரா நடக்குது. சேவூர் காமராஜர் நகர்ல, போன வாரம் ஒரு வாலிபர் கஞ்சா போதைல அங்க இருந்து ஆட்டோவை அடிச்சு உடைச்சிருக்கான். ஒரே களேபரமா போச்சாம்,''

''போலீஸ்காரங்க போயிருக்காங்க. ஆனா, எந்த ஆக்ஷனும் எடுக்கலையாம். கஞ்சா அடிச்சிட்டு இப்படியெல்லாம் அக்கப்போர் பண்றாங்க. பெரிய ஆபீசர்ஸ் கடும் நடவடிக்கை எடுத்தா பரவாயில்ல...'' என அங்கலாய்த்தாள் மித்ரா.

அதிகாரியின் அதிரடி!''மித்து, நாம பேசறத ரூரல் பெரிய ஆபீசர் உன்னிப்பா கவனிக்கிறார் போல. ஏன்னுக்கு கேட்டீன்னா, போலீஸ்காரங்க விரும்பின ஸ்டேஷனுக்கே 'டிரான்ஸ்பர் ஆர்டர்' கொடுத்தும், யாரும் போய் சேரலை, பழைய இடத்தையே சுத்திசுத்தி வராங்கன்னு, போன வாரம் பேசினோமில்ல...''

''அத கவனிச்ச பெரிய ஆபீசர், ரெண்டு நாள்ல, டிரான்ஸ்பர் போட்ட இடத்துக்கு போய் சேரணும்ன்னு, 'ஸ்டிரிக்டா' சொல்லிட்டாராம். இருந்தாலும், சில ஸ்டேஷன்கள்ல, ஆபீசருக்கு மாமூல் வசூல் பண்ணி தர்றவங்க, வலது, இடது கையா செயல்படறவங்க மட்டும் அங்கேயே நங்கூரம் போட வச்சிட்டு, மத்தவங்கள அனுப்பிட்டாங்களாம்,'' என்றாள் சித்ரா.

''அக்கா... சிட்டியிலயும், ரெண்டு நாளைக்கு முன்னாடி, 193 பேருக்கு 'டிரான்ஸ்பர் ஆர்டர்' போட்டாங்க. அதுவும் சரியில்லையாம். ஒரே ஸ்டேஷன்ல, லா அண்ட் ஆர்டர் இருக்கறவங்கள கிரைமுக்கும், அங்க இருக்கறவங்கள லா அண்ட் ஆர்டர் சட்டம் ஒழுங்கு பிரிவுக்கும் மாத்திவிட்டு, 'மேக்கப்' பண்ணிட்டாங்களாம்,'' என்றாள்.

''கவுண்டமணி சொல்ற மாதிரி, ஈயம் பூசின மாதிரியும் இருக்கணும்; பூசாத மாதிரியும் இருக்கணும்ன்னு, பண்ணிட்டாங்க போல'' என சிரித்தாள் சித்ரா.

பிள்ளையையும் கிள்ளி...பதிலுக்கு சிரித்த மித்ரா, ''அக்கா, முருகம்பாளையம், பெரியார் நகர்ல இருந்த டாய்லெட் பாழடைஞ்சு, இடிஞ்சு விழற மாதிரி இருக்கறதால, மூனு மாசத்துக்கு முன்னாடி, வேற இடத்துல புதுசா கட்ட பூமி பூஜை போட்டு, வேலைய ஆரம்பிச்சாங்க,''

''ஆனா, பக்கத்துல இருக்கற லேண்ட் ஓனர் ஒருத்தரு, 'டாய்லெட் கட்டினா, அதுக்கு போறதுக்கு வழியில்லை'ன்னு சொல்லி, ஆட்சேபனை பண்ணிட்டாரு. இதனால, வேலை அப்படியே நிக்குதாம். இந்த பிரச்னையை பேசி தீர்க்காம, கழுவுற மீன்ல நழுவுற மீன் மாதிரி அதிகாரிகளும், ஆளுங்கட்சிக்காரங்களும் நடந்துக் கிறாங்களாம்,''

''ஆனா, 'டாய்லெட்' கட்டித்தரணும்ன்னு மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்திட்டு இருக்காங்களாம். இதபத்தி, போலீஸ்கிட்ட கேட்டா, அதுல பாருங்க. கொஞ்சம் அரசியல் இருக்கு, பிள்ளையையும் கிள்ளவிட்டு, தொட்டிலையும் ஆட்டிவிடற மாதிரி தோழர்கள் செயல்படறாங்கன்னு சொல்லி, பின் வாங்கிட்டாங்களாம்'' என, வில்லங்கத்தை விளக்கினாள்.

''அதே கவுண்டமணி வசனம், இவங்களுக்கும் பொருந்தும் போல...'' என்று சொன்ன சித்ரா, ''பொங்கலுக்கு கொடுக்க வேட்டி சேலையெல்லாம் தயாராகிடுச்சு போல…'' என பேச்சை மாற்றினாள்.

தொடர்ந்த அவள், ''ஓ.ஏ.பி., வாங்கற வயசானவங்க, இலவச வேட்டி, சேலை வாங்க, வி.ஏ.ஓ., ஆபீசுக்கு தான் போகோணும். உடம்பு முடியாம இருக்கற நிறைய பேருக்கு நேர்ல போக முடியறது இல்லையாம். இதனால, அவங்களுக்கு போய்ச்சேர வேண்டிய வேட்டி, சேலையெல்லாம் மூட்டைக்கணக்கா வி.ஏ.ஓ., ஆபீஸ்ல தேங்கிடுமாம்,''

''இதையெல்லாம் திருப்பியனுப்பவோ, பயனாளிங்ககிட்ட கொண்டு போய் சேர்க்கவோ, யாரும் முயற்சி பண்ணாததால, உதவியாளருங்க, அள்ளிட்டு போயிடறாங்களாம். இந்த தடவை இந்த மாதிரி எதுவும் நடக்காத மாதிரி, கலெக்டரு தான் நடவடிக்கை எடுக்கோணும்,'' என, ஆதங்கத்தை கொட்டினாள்.

''அங்க அப்படின்னா... வேளாண் துறை அதிகாரிகளோட பிரச்னை வேற மாதிரி இருக்கு. மாசாமாசம் கலெக்டர் ஆபீசில் விவசாயிங்க குறைகேட்பு கூட்டம் நடக்குது. தரைத்தளத்துல தான் கூட்டம் நடத்தறாங்க. அங்க சீட் வசதி கம்மியா இருக்கிறதால, 100, 150 சேரை வாடகைக்கு எடுத்துட்டு வர்றாங்க. சேர் வாடகை, வேன் வாடகைன்னு பெரிசா செலவாகுதுன்னு, அதிகாரிங்க புலம்பறாங்களாம்,'' என தனக்கு தெரிந்த விஷயத்தை சொல்லினாள் சித்ரா.

'பில்'லை கொடுத்துவிட்டு, இருவரும்புறப்பட்டனர்.வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
Advertisement