ஷாப்பிங் மால் தியேட்டரில் படம் பார்க்கப் போன சித்ராவும், மித்ராவும் படம் துவங்க நேரமிருந்ததால், காபி கடைக்குள் சென்றனர். காபி வாங்கிக் கொண்டு, ஓரிடத்தில் அமர்ந்தனர். மெதுவாக காபியை உறிஞ்சியபடியே, பேச்சைத் துவங்கினாள் சித்ரா...
''மித்து! நம்ம ஊருக்கு புது பை பாஸ், ரயிலு, இன்டர்நேஷனல் பிளைட் எது வருதோ இல்லையோ, புதுசு புதுசா ஷாப்பிங் மால் வந்துட்டே இருக்கு. அவினாசி ரோட்டுல, கே.எம்.சி.எச்.,பக்கத்துல, பிரமாண்டமா ஒரு மால் வருது. ஒன்பது ஐமாக்ஸ் தியேட்டர்களோட மிரட்டலா ரெடியாயிட்டு இருக்கு!''
குறுக்கிட்டுக் கேட்டாள் மித்ரா...
''ஓ! எப்போ திறக்கிறாங்களாம்?''
''அநேகமா நியூஇயருக்கு முன்னாடியே திறந்திருவாங்களாம்...அதைத் தாண்டிதான், புது பஸ் போர்ட்டும் வரும்னு பேசிக்கிறாங்க. பாலம் வேலையும் முடிஞ்சிட்டா, இன்னும் ரெண்டு மூணு வருஷத்துல, அவினாசி ரோடு வேற லெவலுக்குப் போயிடும். ஆனா ஏர்போர்ட் எக்ஸ்பேன்ஷன் மட்டும் எப்போ துவங்கி, எப்போ முடியும்னே தெரியலை!''
சட்டென்று வருத்தமாய்ப் பேசிய சித்ராவுக்குப் பதிலளித்தாள் மித்ரா...
''நிலமே கையகப்படுத்தித் தர மாட்டேங்கிறாங்களே...இதுவரைக்கும் என்னென்னவோ காரணம் சொல்லிட்டு இருந்தாங்க. இப்போ நிதி ஒதுக்குன பிறகும், வேலை நடக்குறது மாதிரியே தெரியலை. விசாரிச்சா, நில எடுப்பு பிரிவுல இருக்குற சில அதிகாரிங்க கேக்குற கமிஷனை, நில உரிமையாளர்கள் தர மாட்டேன்னு சொல்றதாலதான், வேணும்னே இழுத்தடிக்கிறாங்களாம்!''
''அடக்கொடுமையே! நிலத்தையும், வீட்டையும் பறி கொடுக்குறவுங்க கிட்டயே கமிஷன் கேக்குறாங்களா...!''
''ஆமாக்கா! கோடிக்கணக்குல இழப்பீடு வாங்குனவுங்க, இந்த அதிகாரிகள் கேக்குற கமிஷனை கொடுத்துட்டுப் போயிர்றாங்க. வெளியில போய் இடம் வாங்கக்கூட முடியாத அளவுக்கு, இழப்பீடு வாங்கிருக்குற நில உரிமையாளர்கள் என்ன பண்ணுவாங்க...அவுங்க முடியாதுன்னு சொல்லிர்றாங்க. அதனாலதான் 'டீலிங்' ஜவ்வா இழுக்குதாம். கலெக்டர்தான் இதை கவனிக்கணும்!''
''மித்து! கலெக்டர்னதும் ஞாபகம் வந்துச்சு...நம்ம கலெக்டர் இப்பதான் தன்னோட அதிரடியைத் துவக்கிருக்காரு. பல டிபார்ட்மென்ட் அதிகாரிங்களும் ஆடிப்போயிருக்காங்க!''
''என்னக்கா சொல்றீங்க...
''ஒவ்வொரு டிபார்ட்மென்ட் தலைவர்களைப் பத்தியும், விரல் நுனியில தகவல் வச்சிருக்காராம். பஞ்சாயத்து ஏ.டி.,மேல பாலியல் புகார் வந்ததும், சத்தமில்லாம விசாகா கமிட்டிக்கு அனுப்பி, சஸ்பெண்ட் பண்ணிருக்காரு!''
''அப்புறம்!''
''பி.ஆர்.ஓ., ஆபீஸ்ல வேலை பார்த்த லேடி அக்கவுன்டன்ட், கவர்மென்ட் வேலை வாங்கித்தர்றதா, ஒருத்தரை ஏமாத்தி நான்கு லட்சம் ரூபாய் பணம் வாங்குனதா அவர்ட்ட புகார் வந்திருக்கு. அதைப் பத்தி விசாரிச்சு, உண்மைன்னு கண்டுபிடிச்சு, சஸ்பெண்ட் பண்ணி, போலீஸ் கம்பிளைன்ட்டும் கொடுக்க வச்சிருக்காரு!''
''சூப்பர்...அதனாலதான் மத்த ஆபீசரெல்லாம் ஆடிப்போயிருக்காங்களா...அப்பிடியே, ரெண்டு மூணு தாலுகா ஆபீசுக்கும், வி.ஏ.ஓ.,ஆபீஸ்களுக்கும் விசிட் அடிச்சு, அங்க நடக்குற அநியாய லஞ்சத்தைத் தடுத்து, ரெண்டு மூணு பேரை சஸ்பெண்ட் பண்ணா நல்லாருக்கும்!''
மித்ரா முடிக்கும் முன், சித்ரா தொடர்ந்தாள்...
''சமீபமா நம்ம ஜி.எச்.,ல லஞ்சம் ரொம்ப அதிகமாயிருச்சுன்னு ஏகப்பட்ட கம்பிளைன்ட் வருது மித்து...அங்க ஜமேதார் பொறுப்புல இருக்கிற, செல்லமான அதிகாரி ஒருத்தரு, சீக்கிரமே ரிட்டயர்டு ஆகப் போறாராம். லேப் அசிஸ்டென்ட்டா இருக்க வேண்டிய இவரு, அங்கங்க ஆளைப் பிடிச்சு, கங்காணி வேலை பாக்குறாரு. ரிட்டயர்டு ஆவுறதுக்குள்ள சம்பாதிக்கணும்னு அநியாயமா காசு வாங்குறாராம்!''
''அவரு யார்ட்ட அக்கா காசு வாங்குவாரு?''
''கொஞ்ச நாளைக்கு முன்னால, மார்ச்சுவரியில லஞ்சம் வாங்குனார்னு தமிழ்ங்கிற ஒருத்தரை நிர்வாகம் சஸ்பெண்ட் பண்ணுச்சு. அவர்ட்ட காசை வாங்கிட்டு, மறுபடியும் இவர்தான் டூட்டி போட்ருக்காராம். ஆடுன காலும் பாடுன வாயும் சும்மா இருக்காதுங்கிறதுமாதிரி, அவரு மார்ச்சுவரியில மானாவாரியா ஜனங்ககிட்ட காசு புடுங்குறாராம்!''
மித்ரா மீண்டும் அதே லஞ்ச மேட்டரைத் தொடர்ந்தாள்...
''நீங்க சொன்ன பழமொழியைக் கேட்டதும் எனக்கு, நம்ம கார்ப்பரேஷன்ல இருக்குற ஒரு லேடி அசிஸ்டென்ட் கமிஷனரோட கணவர் ஞாபகம் வந்துச்சு. போன அ.தி.மு.க., ஆட்சியில, சென்ட்ரல் ஜோன்ல கோலோச்சுன அந்த லேடி, இப்போ நார்த்ல இருக்காங்க. அவுங்க வீட்டுக்காரர், போன பீரியட்ல அ.தி.மு.க.,வுல இருந்தாரு...இப்போ தி.மு.க.,வுக்குத் தாவிட்டாரு!''
''இது வழக்கமா நடக்குற மேட்டர்தான மித்து?''
''இல்லைக்கா...இதுல ஸ்பெஷல் என்னன்னா, போன பீரியட்ல, தன்னோட மனைவி இருக்குற ஜோன்ல சொத்து வரி, கட்டட அனுமதி, கான்ட்ராக்ட்ன்னு எல்லா விவகாரத்துலயும் தலையிட்டு, வலுவா சம்பாதிச்ச இவரு, இப்போ எல்லா ஜோன்லயும் புகுந்து விளையாடுறாராம். அதை விட அவர் வீட்டுல நடந்த ரெண்டு விசேஷத்தைப் பத்தித்தான் கார்ப்பரேஷனே கலகலப்பா பேசுது!''
''அடடா...சொல்லு சொல்லு!''
''அ.தி.மு.க., ஆட்சியில இருந்தப்போ, அவுங்க மகளுக்கு சீர் வச்சிருக்காங்க. அப்போ அந்த ஏரியா முழுக்க, அ.தி.மு.க., கொடியா கட்டிருந்துச்சாம். வண்டிகளும் அ.தி.மு.க., வண்டியா நின்னுருக்கு. இப்போ அதே மகளுக்கு கல்யாணம் பண்ணிருக்காரு. மண்டப ஏரியா முழுக்க இப்போ தி.மு.க., கொடியாம்...உடன் பிறப்புகள் வண்டி வண்டியா வந்து வாழ்த்திருக்காங்க!'''
சித்ரா சொன்னதைக் கேட்ட மித்ரா, ''அப்பிடின்னா! பேத்திக்குப் பேரு வைக்கிறப்போ, பி.ஜே.பி.,க்கு 'ஜம்ப்' பண்ணிருவாரோ?'' என்று சிரித்தாள்.
சித்ரா மீண்டும் தொடர்ந்தாள்...
''நீ ஜம்ப்ன்னு சொன்னதும் ஞாபகம் வந்துச்சு...தெற்கு மண்டலத்துல, மழைநீர் வடிகால் கட்டுற வேலையைப் பார்க்குறதுக்கு கமிஷனர், மேயர் எல்லாம் போயிருக்காங்க. வடிகாலுக்குத் தோண்டுன குழியை கமிஷனர் ஒரே தாவுல தாவிட்டாராம். அவரைப் பார்த்து, மேயரும் 'ஜம்ப்' பண்ணிருக்காங்க. முடியாம தவறி தண்ணியில விழுந்துட்டாங்க. கையில லேசா அடி. மறுநாள் மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்துக்கே வரலை!''
''அவுங்களைப் பத்தி நிறையா மீம்ஸ் வருது பார்த்தீங்களா?''
''ஆமா மித்து! பார்த்தேன்...தனியார் ஓட்டல்ல நடந்த ரோடு டிசைனிங் பத்துன கூட்டத்துல, 'கோவை மாநகர்ல 200 லட்சம் மக்கள் இருக்காங்க'ன்னு பேசுனதைப் பாத்து, அங்க இருந்த எல்லாருக்கும் தலை சுத்திருச்சாம்...அதை ஒரு மீம்ஸ் போட்ருந்தாங்க!''
''நம்ம ஊர்ல ஆளும்கட்சிக்காரங்க மேல, நிறைய 'என்கொயரி' பண்ண வேண்டியிருக்கு...செல்வபுரம் ஐ.யு.டி.பி., காலனி புது குவார்ட்டஸ்ல, கேபிள் பேரு கொண்ட அந்த ஏரியா ஆளும்கட்சிக்காரரு, ஏகப்பட்ட அழிச்சாட்டியம் பண்றாராம், நாலு நாளைக்கு முன்னால அ.தி.மு.க.,காரங்களை மிரட்டி, பிரச்னையாகி, போலீஸ் வந்து சமாதானம் பண்ணிருக்காங்க!''
''அக்கா! நம்ம ஊர்ல போலீஸ் நைட் ரவுண்ட்ஸ் ரொம்பவே குறைச்சிட்டாங்க போலிருக்கு...போன வாரம், அவினாசி ரோடு மேம்பாலத்துக்குக் கீழ, ஆள் நடமாட்டமில்லாத சுரங்கப்பாதையில படுத்திருந்த ஒரு இள வயசுப் பையனை, பிளேடால அறுத்து கொலை பண்ண நாலு பேர் முயற்சி பண்ணிருக்காங்க. அலறல் சத்தம் கேட்டு, சில பேரு ஓடி வந்ததால, அந்தப் பையன் பொழச்சிருக்கான்!''
''அச்சச்சோ அப்புறம்!''
''உடனே அந்தப் பையனை ஜி.எச்.,ல சேர்த்து காப்பாத்திருக்காங்க...அதைப் பத்திக் கேள்விப்பட்டு, போலீஸ் கமிஷனர், அன்னிக்கு நைட் ரவுண்ட்ஸ்ல இருந்த, அத்தனை போலீஸ் ஆபீசர்களையும் கூப்பிட்டு செம்ம ரெய்டு விட்ருக்காரு. அதுக்கு அப்புறம்தான் அந்த சுரங்கப் பாதையை, போலீசே கம்பி வேலி போட்டு அடைச்சிருக்காங்க!''
''அதை விட போலீஸ் கமிஷனர் ஆபீஸ்லயே, ஒரு வாயில் கதவையே அடைச்சிட்டாங்க தெரியுமா...!''
''என்னக்கா சொல்றீங்க...அங்க ஒரு வாசல்தான இருக்கு!''
''ஆமா மித்து! கமிஷனர் ஆபீஸ் காம்பவுண்ட்ல ரெண்டு வாசல் இருக்கு....அதுல ஒரு வாசல் ரொம்ப நாளா பூட்டிருக்கு. சேப்டிக்காகன்னும் ஒரு தரப்பும், வாஸ்துக்காக பூட்டிருக்குன்னு இன்னொரு தரப்பும் சொல்றாங்க. புது கமிஷனர் வந்ததும் இதைப் பத்தி விசாரிச்சிட்டு, அதைத் திறக்கச் சொல்லிருக்காரு. திறந்து போலீஸ் பந்தோபஸ்தும் போட்டாங்க. கார் குண்டு வெடிச்சிருச்சு. மறுபடியும் பூட்டிட்டாங்க!''
சித்ரா பேசிக் கொண்டிருக்கும்போதே குறுக்கிட்ட மித்ரா, ''உடனே வாஸ்து வேலையை காமிச்சிருச்சுன்னு சொல்லுவாங்களே...!'' என்றாள். அவளே தொடர்ந்தாள்...
''போலீஸ்காரங்களுக்கு ஆபீஸ் மட்டுமில்லை...வீடுகள்லயும் பிரச்னைதான்...நம்ம ஊரு ஆயுதப்படையில இருந்த 387 பேரை, லோக்கல் ஸ்டேஷனுக்கு மாத்திட்டாங்க. மாத்துனதும் அவுங்க வீடுகளை காலி பண்ணச் சொல்லிட்டாங்க. ஆயுதப்படை குவாட்டர்ஸ்ல வாடகை 850 ரூபாதான். வெளியில ஏழாயிரம் எட்டாயிரம் வரும். அதனால, லோக்கல் ஸ்டேஷன் போகவே பலருக்கு விருப்பமில்லை!''
''அங்க போனா வருமானம் வரும்ல...!''
''அதை எதிர்பார்த்துப் போறவுங்க போறாங்க...மத்தவுங்க வேணாம்னு நினைக்கிறாங்க. ஆபீசர்களை எதிர்த்துப் பேச முடியாம, மீடியாக்காரங்கள்ட்ட 'நியூஸ் போடுங்க'ன்னு புலம்புறாங்க...ஆபீசர்களைக் கேட்டா, ஆயுதப்படைக்கு புதுசா 500 போலீஸ் வர்றாங்க. அவுங்களுக்கு வீடு தரணும். அதனாலதான் மாத்துறோம். இது தவிர்க்கவே முடியாதுங்கிறாங்க!''
''சரிதான்...போலீசார் தவிர்க்க வேண்டிய விஷயங்கள் எத்தனையோ இருக்கு...கோவில்பாளையம், காளப்பட்டி ஏரியாவுல கஞ்சா, பான் அயிட்டங்கள் வியாபாரம் கொடி கட்டிப் பறக்குது. பெரும்பாலும் காலேஜ் பசங்க, பேக்டரிகளுக்கு வேலைக்குப் போற சின்னப்பசங்கதான் அடிமையா இருக்காங்க. போலீசுக்கு மாமூல் கொட்டுறதால, கண்டுக்கிறதே இல்லையாம்!''
பேசிக்கொண்டேகடிகாரத்தைப் பார்த்த சித்ரா, 'மித்து! டைம் ஆச்சு...படம் போட்ருவாங்க!'' என்று எழுந்தாள். இருவரும் தியேட்டரை நோக்கி நடையைக் கட்டினர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!