காசியில் புதிய வரலாறு எழுதப்பட்டுள்ளது. காசி மாநகரில் உள்ள, தமிழர்களின் கடந்த காலப் பதிவுகள் கொண்டாடப்படும் மாபெரும் விழா, 'காசி தமிழ்ச் சங்கமம்!' நம் பாரத நாடு, ஆட்சியாளர்களால் உருவாக்கப்படவில்லை; யாத்ரிகர்களால் உருவாக்கப்பட்டது.
வடக்கில் இருந்து தெற்கிற்கும், தெற்கில் இருந்து வடக்கிற்கும், கிழக்கில் இருந்து மேற்கிற்கும் மாறி மாறி பயணம் செய்த ஆன்மிகப் பயணங்களும், கலை, கலாசார, வணிகப் பயணங்களும் இந்தியாவை ஒன்றிணைத்தன.
நாகரிக வளர்ச்சிக்கும், பண்பாட்டின் எழுச்சிக்கும் கைகொடுத்தன. அப்படி ஆழமாக வேரூன்றிய அன்பு பிணைப்புகள் தான் இந்திய ஒருமைப்பாட்டின் அடித்தளம். ஆனால், காலப்போக்கில் ஆக்கிரமிப்பாளர்களும், அன்னிய ஆட்சியாளர்களும் செய்த சதிகள், மதம், மொழி, இனம் என்று வேற்றுமைகளுக்கு வித்திட்டன.
பல நுாற்றாண்டுகளுக்கு முந்தைய பண்பாட்டுத் தொடர்பை, ஒருமைப்பாட்டை மீண்டும் வெளிக்கொண்டு வரும் முயற்சி தான் 'காசி தமிழ்ச் சங்கமம்!'
மொத்த இந்தியாவையும் ஒன்றிணைக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் நன்முயற்சிக்கு, வரவேற்பும் பாராட்டுகளும் குவிகின்றன.
பழமையான நாகரிகம்
பண்டைய பாரசீக, கிரேக்க, மெக்ஸிகோ நகரங்கள் எல்லாம் அழிந்த போதிலும், இந்தியாவில் உள்ள வாரணாசி, மதுரை போன்ற பல நகரங்கள், மனிதர்கள் வாழும் இடங்களாக, உயிர்த் துடிப்போடு விளங்குகின்றன. அந்த வரிசையில் வாரணாசி எனப்படும் காசி மாநகர், ஒரு ஆன்மிகப் புனிதத் தலமாக, கல்வி, கலாசாரத்தின் மையமாக திகழ்கிறது.
இந்தியாவின் புண்ணிய மாநகரங்களில் ஒன்று காசி. இது வெறும் பெயர்ச் சொல் அல்ல; இறைத் தன்மையின் உயிர்ச்சொல். இங்கு பாயும் கங்கை நதி, மனிதர்களின் பாவங்களைப் போக்கி, அவர்களின் ஆன்மாவை புனிதப்படுத்துகிறது.
முக்தி தரும்
காசி, 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்களை கொண்ட புண்ணிய பூமி. இங்கு தான் சைவம், வைணவம், பவுத்தம், இஸ்லாம் போன்ற சமயங்களின் சங்கமங்கள் நிகழ்ந்துள்ளன. பல மதங்களின் வழிபாட்டுத் தலங்களும், மடங்களும் அமைந்துஉள்ளன.
மண்ணின் நேசத்தை, மரபுகளுடன் போற்றும் விதமாக, தமிழகத்தில் மட்டும் தான் காசி, பழநி, மதுரை என்றெல்லாம்தமிழர்களின் பெயர்கள் விளங்குகின்றன.
அன்னை உமாதேவியின் சக்தி பீடங்களில் காசியும் ஒன்று. இங்கே எழுந்தருளியுள்ள சிவபெருமான் மகிழ்ச்சிப் பெருக்குடன் அருள்புரிவதால், 'ஆனந்த பவனம்' என்றும் காசி அழைக்கப்படுகிறது.
'காசி விஸ்வநாதரின் பாத கமலத்தில் தாலாட்டும், கங்கை நதி நீரில் திருமுழுக்குப் போடுவதால், சிவலோகப் பதவி சித்தமாகும்' என்று வேத தர்மங்கள் கூறுகின்றன. எனவே முக்தி தரும் காசிக்கு, பக்தி மிகுதியால் பலர் பயணமாகின்றனர்.
காசியும், தமிழர்களும்
காசி, தமிழர்களின் வாழ்வியலோடு கலந்தது. காசி விஸ்வநாதர் புதிய கோவில் வளாகம், இந்தியாவின் ஆன்மிக அடையாளம். நம் ஆன்ம சக்தி, இந்தியாவின் பழமை மற்றும் பாரம்பரியத்தின் சின்னம்.
தென்காசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில், 1467ம் ஆண்டில் பராக்கிராம பாண்டிய மன்னரால் கட்டப்பட்டது, பராக்கிராம பாண்டிய மன்னன் கனவில் சிவபெருமான் தோன்றி, தெற்கில் உள்ள என் பக்தர்கள் சிலர், காசிக்கு பாதயாத்திரை செல்லும்போது, காசியை வந்தடையும் முன்னரே இறந்து விடுகின்றனர்.
அவர்கள் என் அருள் பெற தெற்கில் தென்காசி கோபுரத்தை கட்டவும் என ஆணையிட்டுள்ளார். அதனை ஏற்று, பராக்கிராமபாண்டிய மன்னன் கட்டியதுதான் தென்காசி கோபுரம்.
அதிவீரராம பாண்டியர்
பிற்கால பாண்டிய மன்னர்களில் ஒருவரான அதிவீரராம பாண்டியன், 16ம்- நுாற்றாண்டில், 1564 முதல் 1604 வரை, 40 ஆண்டுகள் ஆட்சி புரிந்துள்ளார். இவர் காசி மாநகரின் பெருமைகளை விளக்கும் 'காசிகாண்டம்' என்ற நுாலை எழுதி உள்ளார்.
குமரகுருபரர்
பக்தி தமிழின் மாண்பை, 17ம் நுாற்றாண்டில் வட இந்தியாவில் நிலை நிறுத்தியவர் குமரகுருபரர். ஞானத் தேடலில் ஈடுபட்டிருந்த, அவர் பாரதம் முழுதும் பயணம் செய்தார். காசி நகருக்கு சென்றபோது, காசி சிவன் கோவில், முகலாயர்களின் அடக்குமுறையால் மிகவும் பாதிக்கப்பட்டுஇருந்தது.
இதை கண்ட குமரகுருபரர், முகலாய மன்னனிடம் பேசி சைவ மதத்தை மீட்க விரும்பினார். அவர்களிடம் பேச, அவர்களின் ஹிந்துஸ்தானி மொழி தெரியாதது குறித்து வருந்தினார். உடனே சரஸ்வதி தேவியை வணங்கி, 'சகலகலா வல்லி மாலை' பாட, தேவியின் அருளால் வடமொழி பேசும் திறன் பெற்றார்.
அதே நேரம், முகலாயர்களின் இறுமாப்பை அடக்க, தன் சித்தாற்றலால் ஒரு சிங்கத்தை வசியம் செய்து, அதன் மீது அமர்ந்து, அரசவைக்கு சென்றார்.
மன்னனிடம் தன் விருப்பத்தை, வட மொழியிலேயே எடுத்து கூறினார். அவரை கண்டு அதிர்ந்த முகலாய மன்னன், குமரகுருபரர் ஒரு சித்த புருஷர் என தீர்மானித்து, அவர் விரும்பியபடி சிவன் கோவில் மற்றும் மடம் கட்ட அனுமதித்தான்.
பல ஆண்டு காலம் காசியிலேயே தங்கி, சைவ சமயத்திற்கு சேவை செய்தார். இறுதியில், அங்கேயே சமாதி அடைந்தார்.
நாட்டுக்கோட்டை நகரத்தார்
காசி விஸ்வநாதர் கோவிலுக்கு, தமிழகத்தை் சேர்ந்த நாட்டுக்கோட்டை நகரத்தார் சமூகத்தினர், திருப்பணிகள் செய்கின்றனர்.
தமிழர்கள் காசிக்குச் சென்றால் இலவசமாக தங்க, காசியிலும், குஜராத் மாநிலம், ஆமதாபாத்திலும், இன்னும் பல இடங்களிலும் சத்திரங்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
இப்படி தமிழர்களின் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்து இருக்கும் காசியின் அருமை, பெருமைகளை மீண்டும் உயிர்ப்பிக்க, 'காசி தமிழ்ச் சங்கமம்' என்ற அற்புதமான நிகழ்ச்சியை,பிரதமர் மோடிசிந்தித்திருக்கிறார்.
இந்நிகழ்ச்சிக்கு பல்வேறு துறைகளைச் சேர்ந்த தமிழர்கள் சென்று உள்ளனர்.
பிரதமர் மோடியின் இதயம் கவர்ந்த மொழி, நம் தமிழ் மொழி. 'நான் தமிழனாக பிறக்கவில்லையே; சரளமாக தமிழ் பேச முடியவில்லையே' என, பொதுக்கூட்டங்களில், தன் உள்ளத்தின் உணர்வுகளை, தமிழ் மொழியின் மீது கொண்ட பற்றை வெளிப்படுத்தி உள்ளார்.
காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி, தமிழ் மக்கள் மீது பிரதமர் கொண்டிருக்கும் வாஞ்சையை வெளிப்படுத்தி இருக்கிறது.
தமிழ் மொழி மற்றும் தமிழ் மக்களின் பெருமைகளை, காசி தமிழ்ச் சங்கமம் நாடறிய செய்யும்.
மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, சென்னை ஐ.ஐ.டி., மற்றும் பனாரஸ் ஹிந்து பல்கலை இணைந்து நடத்தும், இந்த நல்ல முயற்சியை, தமிழக மக்கள் கண்டிப்பாக வரவேற்பர்.
கே.அண்ணாமலை, தமிழக பா.ஜ., தலைவர்
ஆன்மீகத்தின் சிகரம் தொட்ட தமிழனை டாஸ்மாக் என்ற புட்டிக்குள் அடைத்து அடிப்படை அறிவு கூட இல்லாமல் திராவிடப்பகுத்தறிவை 'புகுத்திய' திராவிடர்கள் பெறப்போகும் சாபமானது அவர்களை பல ஜென்மங்களுக்கு இழி பிறவியையே கொடுக்கும் என்பது முக்காலமும் உண்மை.