'ஹரிவராசனம் விஸ்வ மோகனம், ஹரிததீஸ்வரம் ஆராத்ய பாதுகம்... சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா' என சபரிமலை அய்யனை தன் குரலால் நம் கண்முன் கொண்டு வந்த பின்னணி, முன்னணி பாடகர் யேசுதாஸ் பாடல்களை கேட்டு திருவனந்தபுரம் இசைகல்லுாரியில் கர்நாடக இசை கற்று ஸ்மார்ட் சிங்கராக வலம் வருகிறார் மதுரையின் பாடும் வானம் பாடி சேது.
இசைப்பயணம் குறித்து சேது...
''சொந்த ஊர் நாகர்கோவில். திருவனந்தபுரம் இசை கல்லுாரியில் 4 ஆண்டுகள் கர்நாடக இசை கற்றேன். ஒரு தேர்வு சமஸ்கிருத மொழியில் எழுத வேண்டியிருந்தது. சமஸ்கிருதம் தெரியாததால் படிப்பை தொடரவில்லை. பின் சென்னை இசைக் கலைஞர் சிதம்பரத்திடம் இசை கற்றேன்.
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் 'நியூரோ டெக்னாலஜி' படித்து மதுரையில் செட்டில் ஆகிவிட்டேன். யேசுதாஸ் தவிர எஸ்.பி.பாலசுப்பிரமணியம், சங்கர் மகாதேவன், சித்ரா, ஷ்ரேயா கோஷல் பாடகர்களும் பிடிக்கும். பல விழாக்களில் பாடியுள்ளேன். தற்போது மதுரை அப்போலோ மருத்துவமனையில் நரம்பியல் துறை தலைவர் டாக்டர்.எஸ்.மீனாட்சிசுந்தரத்தின் கீழ் 'நியூரோ டெக்னாலஜிஸ்ட்'டாக பணியாற்றுகிறேன்.
கச்சேரிகளில் பாட நேரம் கிடைப்பதில்லை. இருப்பினும் பாடல் பாடி கொண்டே இருப்பேன். குரல்வளம் நன்றாக இருக்கிறது என பிரபலங்கள் கேட்டு ரசிப்பர். என் மகன் ஷசாங்கன் கீ போர்டு பிளேயர், அண்ணன் மகன் பாலசங்கரன் இசைக் கலைஞர். என் குடும்பமே இசை பின்னணியை கொண்டது.
தமிழ், ஆங்கிலம் தவிர ஹிந்தி, சமஸ்கிருதம் தெரிந்திருந்தால் இசை படிப்பை தொடர்ந்திருப்பேன். இன்று முழுநேர பின்னணி பாடகராகி இருப்பேன். இருந்தாலும் இசை எனக்குள் இன்றும், என்றும் பின்னி பிணைந்திருக்கும்''... என மெல்லிசை பாடல் பாடியபடி பணியை தொடர்ந்தார் சேது.
இவரை வாழ்த்த sethumarappady@gmail.com
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!