காஞ்சி பட்டும்... காசி பனாரஸும்... காலத்திற்கு அப்பாற்பட்ட தொப்புள் கொடி உறவு!
நம் அரசியல் சட்டம், நம்முடைய நாட்டை, 'பாரதம்' என்றே அறிமுகப்படுத்துகிறது. வரலாற்றிலும், புராணங்களிலும், கவிதை மற்றும் காவியங்களிலும், இப்பெயராலேயே அறியப்பட்டிருக்கிறோம். பண்டைய இந்திய இலக்கியங்கள், இப்பெயரையே நம் தேசத் தாய்க்குதந்திருக்கின்றன.
தேசிய விடுதலை போராட்டத்திலும், 'பாரத தேவி' என்றே முதன்மை பெற்றாள்; பாரதம் என்பது நாகரிகப் பரிணாமம். ஒரே வகையான பண்பாட்டு ஆன்மிகத்தால் உருவாகி, கால சுழற்சியில் விரிந்து பரந்து மலர்ந்தது.
முனிவர்களும், சித்தர்களும், யோகிகளும், கவிஞர்களும், சமுதாய சீர்திருத்தவாதிகளும், இந்தப் பரிணாமத்தையே மேலும் பக்குவப்படுத்தி உள்ளனர்.
மகத்தானது
அரசர்கள் ஆண்டாண்டு காலமாக, இந்தப் பண்பாட்டு ஒற்றுமையையும், ஆன்மிக ஆதாரத்தையும் பேணிப் பாதுகாத்து பராமரித்துள்ளனர். பாரதத்தின் செம்மைமிக்க பரிணாமப் பயணத்தில், தமிழ் கூறும் நல்லுலகத்தின் பங்கு மகத்தானது.
கடலுக்கு வடக்காக பாரதம் என்னும் நிலப்பரப்பு, தமிழகத்தில் தான் துவங்குகிறது. தென்கோடி தமிழகத்தின் புனிதத் தலமான ராமேஸ்வரத்திற்கும், வடபரப்பின் கங்கை கரை தலமான காசிக்கும் இடையே, ஆயிரக்கணக்கான மக்கள் பயணித்து உள்ளனர்.
காசி - ராமேஸ்வர யாத்திரை, ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும், இன்றியமையாத அங்கமாகவே பார்க்கப்பட்டுள்ளது.
ஆங்கிலேய ஆட்சியாளர்களின் காலம் வரைக்கும், இந்த யாத்திரை தவறாது நடந்தது.
வழிநெடுகிலும் இருந்த ஓய்வு மற்றும் பயணக் களைப்பு வசதிகளையும், சத்திரங்களையும், தங்களின் வசதிக்காக, ஓய்வுக்காக, தளவாடங்களுக்காக, ஆங்கிலேயர் பயன்படுத்திய போது, யாத்திரை தடைபட்டது; மெல்ல குறைந்தும் போனது.
கடந்த, 1801 ஜன., 20ம் நாள், தஞ்சையின் கடைசி அரசரான சரபோஜி மன்னர், ஆங்கிலேயே அலுவலர் பெஞ்சமின் டோரின்க்கு கடிதம் ஒன்றை எழுதிஉள்ளார்.
அதில், காசிக்கும் ராமேஸ்வரத்திற்கும் இடையிலான பாதையில், வழிநெடுகிலும் உள்ள சத்திரங்களை பிரித்து விட வேண்டாம் என்று விண்ணப்பித்துள்ளார்.
இந்த சத்திரங்கள், யாத்ரிகர்களுக்கும், பயணி யருக்கும், வணிகர்களுக்கும், தினமும் மூன்று வேளை இலவச உணவு வழங்குவதையும், மருத்துவ வசதிகள் அளிப்பதையும், கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இக்கடிதத்தை வாசிக்கும் போது, நம்முடைய பண்பாட்டு தொடர்பை தெரிந்து கொள்வதுடன், நம்முடைய பண்பாடு எவ்வாறு சிதைக்கப்பட்டிருக்கிறது என்பதை கண்ணீரோடு உணர்கிறோம்.
தமிழகத்தின் மீதான காசியின் செல்வாக்கு அளப்பரியது. எப்போதெல்லாம் மத்திய ஆசியாவில் இருந்தும், மேற்கிலிருந்தும் படையெடுப்பு நிகழ்ந்தனவோ, அப்போதெல்லாம் தமிழகத்து அரசர்கள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், காசி விஸ்வநாதர் கோவில்களை எடுப்பித்துள்ளனர்.
மணிகர்ணிகா படித்துறை
பாண்டிய அரசரான பராக்கிரம பாண்டியர், வடநாட்டு காசியின் பிரதிபிம்பமாக திருக்கோவில் ஒன்றை கட்டுவித்து, இக்கோவில் தளத்தை, 'தென்காசி' என்றே அழைத்துள்ளார். தமிழக கிராமங்களில், ஏராளமான காசி விசுவநாதர் கோவில்கள் உள்ளன.
கடந்த, 15ம் நுாற்றாண்டின் மகான், இப்போதைய அசாம் பகுதிகளை சேர்ந்த மகாபுருஷர் சங்கர்தேவ், ராமேஸ்வரத்திலும், காஞ்சிபுரத்திலும் பயின்றார்.
பின்னர், மேலும் பயில காசிக்கு சென்றார். அவர் பிரம்மபுத்திரா நதிப் படுகையில், 'சத்ரா' என்று அழைக்கப்படும் வைணவத் திருமடங்களை தோற்றுவித்தார். பாரத தேவியின் பெருமையை போற்றும் வகையில், 'தன்ய தன்ய பாரத பூமி' என்னும் கவிதையை இயற்றினார்.
தமிழகத்தின் மயிலாடுதுறை பகுதியில், சீரோடு செயல்பட்டு வரும், சைவத் திருமடமான தருமபுர ஆதீனத்தை சேர்ந்த குமரகுருபர தேசிகர், 17ம் நுாற்றாண்டில் தம்முடைய குருநாதரின் ஆணைப்படி காசியை அடைந்தார்.
கங்கை கரையில், கேதார் கட்டப் படித்துறைக்கு அருகே, 'கேதாரேச்வரர்' கோவிலை கட்டி னார். அவரது சீடர்கள், கும்பகோணம் அருகே, திருப்பனந்தாளில் காசி விசுவநாதர் கோவிலை கட்டினர்.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இயற்றியவர் மனோன்மணியம் சுந்தரனார் என்று அறியப்பட்ட, முனைவர் சுந்தரப்பெருமாள் பிள்ளை.
இவரது குருநாதரும், மனோன்மணியம் நாடகத்திலேயே, ஆசான் என்னும் உயர்நிலையில் வைத்து போற்றப்பட்டவருமான, கோடகநல்லுார் சுந்தர சுவாமிகள், தம்முடைய வாழ்வின் பெரும் பகுதியை, காசியின் மணிகர்ணிகா படித்துறைப் பகுதியில் கழித்தார்.
சுவாமி விவேகானந்தருக்கு சைவ சித்தாந்தத்தை போதித்தவரான, மனோன்மணியம் சுந்தரனார், காசியால் நிரம்பவும் வசீகரிக்கப்பட்டு இருந்தார்.
தேசிய விடுதலை போராட்டத்தின் புரட்சிக் கவிஞர், மகாகவி சுப்பிரமணிய பாரதியார், 19ம் நுாற்றாண்டின் கடைப் பகுதியிலும், 20ம் நுாற்றாண்டின் தொடக்க ஆண்டுகளிலும், கல்விக்காக காசியில் தங்கியிருந்தார்.
காசியின் அறிவுசார் மற்றும் ஆன்மிக மேன்மையினாலும், இத்தலத்தின் குதுாகலத்தாலும் கவரப்பட்ட பாரதியார், வனப்புமிக்க கவிதை ஒன்றினால், காசி நகருக்கு உணர்வுப்பூர்வ மரியாதை செலுத்தி உள்ளார்.
இன்றளவும் மகாகவியின் குடும்ப வழித்தோன்றல்கள், காசியில் அனுமன் கட்டடத்திற்கு அருகில் வசிக்கின்றனர். மேலும், ஏராளமான தமிழ் குடும்பங்கள் இப்போதும் காசியில் வசிக்கின்றன.
ஆதாரங்கள்
காசியும், காஞ்சியும், வானியல் ஆய்வுகளின் முக்கிய மையங்களாக திகழ்ந்துள்ளன. இவ்விரண்டு ஊர்களிலும் செயல்பட்ட வானியல் மையங்கள், தங்களுக்குள் தகவல்களையும், ஆய்வுகளையும் பகிர்ந்து கொண்டதற்கான பதிவுகள் காணப்படுகின்றன.
கடந்த, 1770 - 1780ம் ஆண்டுகளுக்கு இடையில், இவ்விரண்டு ஊர்களுக்கும் ஆய்வு நிமித்தமாக வந்த, பிரிட்டிஷ் வானிய லாளர்களான பார்கர், பியர்ஸ், கேம்ப்பெல், ஜான் ப்ளேபர் ஆகியோர், இவ்வூர்களில் இருந்த அறிஞர்களின் கணிதவியல் துல்லியம் மற்றும் வானியல் தகவல்கள் குறித்து அபரிமித வியப்பை வெளியிட்டுள்ளனர்.
காஞ்சிக்கும், காசிக்கும் நெடிய தொடர்பு இருந்துள்ளது. காஞ்சி பட்டும், காசி பனாரஸ் பட்டும், உலகப் புகழ் பெற்றவை. தமிழகத்திற்கும் காசிக்கும் இடையில் பன்முக ஆழ்ந்த, ஏன் ஒரு வகையில் தொப்புள் கொடி உறவே இருந்ததற்கும், இருப்பதற்கும் நிரம்ப ஆதாரங்கள் உள்ளன.
காலனி ஆதிக்கத்தின் போது சிதைந்து போன வளமை மிக்க வரலாறு, மீள் கண்டுபிடிப்புக்காக காத்திருக்கிறது.
காலனி ஆதிக்கத்தின் போது, தமிழகத்திற்கும், காசிக்குமான தொடர்பின் யாத்திரிக கட்டுமானங்கள் பிரிக்கப்பட்டு, காணாமல் போய் விட்டன.
எனினும் மக்களின் மனங்களில், இத்தொடர்பின் உணர்வுபூர்வ பிடிமானங்கள் துடிப்போடும், முனைப்போடும் இருந்துள்ளன; இன்னமும் இருக்கின்றன.
பாரதம் குறித்து ஆழமான மற்றும் துல்லியமான புரிதலை உடைய, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், இந்த ஆண்டாண்டு கால தலைமுறைத் தொடர்பு, மறுவாழ்வு பெற உள்ளது.
தமிழ் மொழி மீது நிரம்பக் காதலும், மரியாதையும் கொண்டுள்ள பிரதமர், தமிழ் மொழி உயர் ஆய்வுகள் மற்றும் மேம்பாட்டுக்கான, பனாரஸ் ஹிந்து பல்கலையில், சுப்பிரமணிய பாரதி இருக்கையையும் நிறுவி உள்ளார்.
நவம்பர் மாதத்தில் துவங்கி, காசிக்கும் தமிழகத்திற்குமான பண்டைய தொடர்புகளைக் கொண்டாடி புதுப்பிக்கும் வகையில், ஒரு மாத காலத்திற்கு நடக்க உள்ள, காசி தமிழ் சங்கமம் நிகழ்வுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தந்திருக்கும் ஊக்கமும் ஆக்கமும், 'ஒரே பாரதம், உன்னத பாரதம்' என்பதில், அவருக்கு இருக்கும் ஆழ்ந்த நம்பிக்கையையும், ஈடுபாட்டையுமே காட்டுகின்றன.
ஆர்.என்.ரவி, தமிழக கவர்னர்
பிரிவினை வாத சக்திகளை ஒடுக்கும் பணியில் தமிழக கவர்னர் இன்னும் முழு வேகத்துடன் ஈடுபட வேண்டும்